Wednesday, June 30, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 187. 'நேரம் குறித்து அறுவை சிகிச்சை செய்து பிறக்கும் குழந்தை...' ஒரு ஆய்வு



ஒரு குழந்தையின் பிறந்த நேரத்தை கணிப்பதில் இருந்த அடிப்படைகள், தற்போது முற்றிலுமாக மாற்றம் அடைந்திருக்கிறது.

ஆரம்ப காலத்தில், குழந்தைகளின் பிறப்பை கண்காணிப்பதில் அனுபவம் பெற்ற மூதாட்டிகளின் பங்கு இருந்தது. அதற்குப் பின்னர், அந்த முதாட்டிகளின் இடத்தில் மருத்துவர்கள் இடம்பெற்றனர். அப்போது, பிரசவங்கள் பெரும்பாலும் சுகப் பிரசவங்களாக அமைந்தன. குழந்தை பிறந்த நேரத்தை அந்த முதாட்டியோ... மருத்துவரோ... நம்மிடம் தெரிவித்தனர். அதைத்தான், ஜனன நேரமாகக் குறித்துக் கொண்டோம்.

லட்சக்கணக்கான உயிரணுக்களாக இருக்கும் ஜீவர்களுக்கு இடையே நிகழும் கடுமையான போட்டிக்கு இடையே, இறைவனின் அருள் கருணையினால், ஒரே ஒரு ஜீவன்தான், கருவறைக்குள் உயிர் பெறுகிறது. அதன் ஜனன நேரத்தையும் அந்த பரம்பொருளே தீர்மானிக்கின்றான். அதை அறிந்து சொல்லும் வாய்ப்பைத்தான் மருத்துவர்களுக்கு அளிக்கிறான்.

அந்த சூழல் படிப்படியாக மாற்றமடைந்து... தாயாரின் உடல் நிலையையும்... குழந்தையின் உடல் நிலையையும்... கருத்தில் கொண்டு, அந்த சூழலுக்குத் தேவையெனில் மட்டுமே, மிக அறிதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைப் பக்குவமாகக் கடந்த பின், மருத்துவர் அறிவிக்கும் நேரம், ஜனன நேரமாகக் குறிக்கப்பட்டது.

இன்று, பெரும்பாலான பிரசவங்கள் அறுவை சிகிச்சைகளாக மாறி விட்டிருக்கின்றன. சுகப் பிரசவங்கள் மிகவும் அரிதாகப் போய் விட்டன. அதுவும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கான நேரத்தை, பெற்றோரையே தீர்மானிக்கச் சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

தவிர்க்க முடியாத சூழலில்... நியாயமாகவும், தர்மமாகவும் இதை அணுக வேண்டியது ஒரு ஜோதிடரின் கடமையாகிறது. இதில் ஜோதிடர்கள்  எதிர் கொள்ளும் சவால்களாக கீழ்க்கண்டவைகள் இருக்கின்றன.

# மருத்துவர்கள் கணிப்புக்காக அளிக்கும் நாட்கள் மிகக் குறைவானதாக இருக்கும்.

# குழந்தையை சுமந்திருக்கும் தாய்க்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுப்பதா... அல்லது பிறக்கப் போகும் குழந்தைக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுப்பதா... என்பது.

# பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைகளை பகல் பொழுதில்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் இரவிலும், பகலிலும் இயற்கையாக பிரசவங்கள் நிகழ்ந்திருகின்றன.

இந்த சவால்களைக் கடந்து, ஒரு ஜோதிடர் தீர்மானிக்க வேண்டியது ஒன்றுதான். அது கண்ணுக்கு முன்னால் இருக்கும் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் தாயைப் பற்றியதுதான். அவரின் உடல் நிலையைத்தான் முதலில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். அந்தத் தாய்க்கு உகந்த நேரத்தைத்தான் தீர்மானிக்க வேண்டும்.

* அளிக்கப் பட்டிருக்கும் மிகக் குறைந்த நாட்களில், தாய்க்கு உகந்த நாளையும்... அந்த நாளின் நட்சத்திரத்தையும்... அந்த நாளின் திதியையும்... தேர்ந்தெடுக்கும் நாளின் லக்னத்தையும்... அந்த லக்னத்தை ஆளும் ஹோரையையும்... கணக்கில் கொண்டு, நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* ஒரு வேளை, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாவிடில், மருத்துவரின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவருக்குத்தான், தாயின் நிலமையும், குழந்தையின் நிலமையும் மிக நன்றாகத் தெரியும்.

ஜோதிட அறிவை  மட்டும் மூலதனமாகக் கொண்டு, ஒரு ஜோதிடர் எடுக்கும் முடிவு, அந்தப் படைப்பாளரின் முடிவுக்குள் இருப்பது மிக அவசியம்.

ஸாய்ராம்.



Saturday, June 26, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 25.6.1983. உலகக் கோப்பை வெற்றியும், பிளைன் டீ மீதான எனது மோகத்தின் தோல்வியும்...


    
 13 வயதில் கல்விக்கான கனவுடன், தொலைதூரத்தில் இருந்த அண்ணாவின் குடும்பத்துடன் வசிக்க நேர்ந்தது. 18 வயது வரையிலான 5 வருடங்களை மிகக் கடினமாகக் கடக்க நேர்ந்தது. பெற்றோருடன் திரும்பிச் செல்ல முடியாமலும், கல்வியிலும் கவனம் செலுத்த முடியாமலும், ஒரு அடிமையைப் போன்ற வாழ்வை வாழ நேர்ந்தது.

இறுதியாக, 18 ஆவது வயதில் இந்த சூழலிருந்து விடுபட வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் மிக முக்கியமான காலக் கட்டத்தில், மேல் நிலைக் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் பெற்றோரிடம் சென்று சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை அங்கே இருந்து விட்டு,, மீண்டும் தொலைத்த இடத்திலேயே கல்வியைத் தேட முடிவு எடுத்தேன்.

கிளம்புவதற்கு இரண்டொரு நாடகளுக்கு முன்னால், பெற்றோரின் வீட்டுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எனது இன்னொரு அண்ணார், அவரின் வீட்டிற்கு அழைத்தார். அன்றுதான் (25.6.1983) இந்திய - மேற்கு இந்தியத் தீவினருக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி, லண்டனில் நடக்கவிருந்தது. அவரின் வீட்டில், இதற்காகவே அவர் வாங்கிப் பொருத்தியிருந்த 'கருப்பு-வெள்ளை தொலைக் காட்சி' வசதி இருந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த மோகத்தில், பெற்றோரின் வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு, அண்ணாருடன் கிளம்பி அவரின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தோம். கதவைத் திறந்த அண்ணாரின் துணைவியாரின் முகம் என்னைப் பார்த்ததும் வெறுப்பில் குமைந்ததைக் கண்டேன். ஏற்கனவே இன்னொரு அண்ணாரின் குடும்பத்தில் பெற்ற அனுபவத்தில் துவண்டு இருந்த எனக்கு, இது மேலுமொரு அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

அண்ணார், என்னை டிவி இருந்த அறையில் அமர்த்தி விட்டு, உள்ளே சென்று அவரின் துணைவியாரிடம் 'அவன் நாளை காலையில் சென்று விடுவான். இரவு உணவை முடித்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். குளிரில் நடந்து வந்த அவனுக்கு, அவனுக்கு மிகவும் பிடித்த 'ஒரு பிளைன் டீயை' மட்டும் போட்டுக் கொடுத்துவிடு...' எனக் கெஞ்சிக் கொண்டிருந்தைக் கேட்டேன்.

'இறைவா ! ஏன் இம்மாதிரியான சூழலுக்குள்ளேயே என்னைத் தள்ளி விடுகிறாய் ? எவ்வாறாவது இந்த இறுக்கமான சூழலிருந்து மீட்டு விடு!' என்று பிரார்த்தித்தேன். அந்த அறைக்குள் நுழைந்த, அண்ணார் வந்து அருகில் அமர்ந்தார். சிறிது நேரத்தில், அந்த அறைக்குள் நுழைந்த அண்ணாரின் துணைவியார், அருகிலிருந்த டேபிளின் மீது சத்தத்துடன் ஒரு கண்ணாடி டம்ளரை வைத்து விட்டுச் சென்றார்.

சூடே இல்லாமல், மிகவும் வெது வெதுப்புடன் இருந்த, எனக்கு மிகவும் பிடித்த பிளைன் டீ ஒரு புறம்... நான் மிகவும் ரசிக்கும் கிரிக்கட் விளையாட்டின் இறுதிப் போட்டி மறு புறம்... அந்த நேரத்தில், வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அண்ணாரும், அவரின் துணைவியாரும் சென்று கதவைத் திறக்கும் போது வாசலில், கேரள மாநிலம், திருவனந்தபுர விமான நிலையத்தில் பணியிலிருக்கும், அண்ணாரின் நண்பர் வந்து நின்றிருந்தார்.

அவரின் வருகையையும் அவர்கள் இருவரும் ரசிக்கவில்லை என்பதாகத்தான் தோன்றியது. எனக்கருகில் வந்தமர்ந்த அவர், அண்ணாரிடம் நீண்ட நாற்களுக்குப் பின் சந்தித்த ஆவலில் பேச முற்பட்டதும்... அண்ணாரின் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்ததையும்... கவனித்த பின் அவர், 'சரி, நான் கிளம்புகிறேன். உங்களது பெற்றோரின் வீட்டில் உணவு அருந்தி விட்டுத்தான், இங்கு வந்தேன். தம்பியின் பயணத்தைப் பற்றியும் கேள்விப் பட்டேன். இப்போதே அவனை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். நாளை என்னுடனேயே அவன் கிளம்பட்டும் !' என்ற போது, கண்ணீரால் எனது கண்கள் நிறைந்தன. ஏனெனில், என்னை மீட்டெடுத்த அந்த ஆபத்பாண்டவரின் பெயர்... 'ஜெகதீஸன்'.

அவர்களிடம் இருந்து விடை பெற்ற போது, திரும்பிப் பார்த்தேன், நான் அருந்தாமல் வைத்திருந்த, எனக்கு மிகவும் பிடித்த பிளைன் டீ ஒரு புறம்... எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டின் இறுதிப் போட்டி மறு புறம். அன்றைய இரவில்... அந்த இரண்டில் ஒன்றை துறந்து விட்டேன்... அது 'பிளைன் டீ'.

இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவி சேனலில், அதே உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 'ஹைலைட்ஸ்' ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... காலண்டரைப் பார்க்கிறேன்... அது 25.6.2021 ஐக் காட்டுகிறது.

ஸாய்ராம்.



Friday, June 25, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் பகுதி - 186. 'பெயர் பொருத்தத்திற்குப் பின் இருக்கும் சூட்சுமம்'


நமது பாரம்பரியத்தில் பெயர் பொருத்தம், 

~ குலம் சார்ந்தும்...

~ கோத்திரம் சார்ந்தும்...

~ ஜோதிடம் சார்ந்தும்... கணிக்கப்பட்டது.

# குலம் சார்ந்தும்... : அன்றைய காலத்தில், குலம் சார்ந்த பெயர்களின்                      வழியாகத்தான் திருமணங்களை நிச்சயம் செய்யப்பட்டது. தந்தையின்  தந்தையான 'பாட்டாவின்' பெயரை, மகனுக்குச் சூட்டும் வழக்கம் இருந்தது.    அது  போல, தாயாரின் தாயாரான 'அம்மாயின்' பெயரை, மகளுக்குச் சூட்டும்        வழக்கம் இருந்தது. இந்த குடும்ப அடையாளம் மிக சுலபமாக அந்தக்                       லத்திற்குள் திருமணத்தை உறவுக்குள் இணைப்பதற்கு ஏதுவாக இருந்தது.

# கோத்திரம் சார்ந்தும்... : ஒவ்வொரு குலத்திலும், இரு விதமான கோத்திரங்கள்  இருக்கின்றன. ஒன்று 'சிவ கோத்திரம்', மற்றொன்று 'வைணவ கோத்திரம்'.          சிவ  கோத்திரத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு 'சிவபெருமானார்' வழியான        தெய்வங்களின் பெயரும்... பெண்ணுக்கு 'பெருமாள்' வழியான                                      தெய்வங்களின்   பெயரும்... சூட்டப்பட்டன. 

அது போல, 'வைணவக் கோத்திரத்தில்' பிறக்கும் ஆண் குழந்தைக்கு                          'பெருமாளின் பெயர்களில்' ஒன்றை வைப்பதும்... பெண்ணுக்கு                                    'சிவபெருமானாரின்' வழியான தெய்வங்களின் பெயரும்... சூட்டப்பட்டன.

வழி வழியாகத் தொடர்ந்த இந்த வழி முறைகளால், 'சிவபெருமானாரின்'                பெயரைச் சூட்டப்பட்ட ஆணுக்கு, 'பெருமாளின்' கோத்திரத்தைச் சேர்ந்த,                  'சிவபெருமானாரின்' தெய்வங்களின் பெயரைக்  கொண்ட பெண் அமைந்தாள்        (சுந்தரமுர்த்தி - வடிவாம்பாள்). 

அதுபோல, 'பெருமாளின்' பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும் ஆணுக்கு,        'சிவ கோத்திரத்தைச்' சேர்ந்த, 'பெருமாளின்' வழியான தெய்வங்களின்                    பெயரைக் கொண்ட பெண் அமைந்தாள் (ரெங்கராஜன் - ரெங்கநாயகி).

# ஜோதிடம் சார்ந்தும்... : குலத்தின் அடிப்படை மாறாமல்... கோத்திரத்தின்                அடிப்படை மாறாமல்... ஜோதிட ரீதியான பெயர்களை சூட்டும் வழக்கம்                  ஆரம்பித்தது. ஒரு குழந்தை பிறக்கும் நட்சத்திரத்தையும், அதன்                                  பாதசாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அந்த நட்சத்திரத்திற்கு உரிய      'நான்கு' ஆரம்ப எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பெயர்கள்                        சூட்டப்பட்டன.

அப்போதிருந்துதான், ஜோதிட ரீதியான ஜாதக் பொருத்தமும்... நட்சத்திரப்              பொருத்தமும்... பெயர் பொருத்தத்துடன் கை கோர்த்துக் கொண்டது.

இந்த மூன்று முறைகளிலும் அடங்கியிருந்த பாரம்பரியத்தை, நாம் இன்று கடந்ததால்தான், 'பெயர் பொருத்தமுறை' இன்று நடைமுறைக்கு ஒவ்வாததாக மாறிப் போனது.

ஸாய்ராம்.


Thursday, June 10, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 185. 'கேந்திராதிபத்திய தோஷம்' ஒரு ஆய்வு...


'கேந்திராதிபத்திய தோஷத்தைப்' பற்றி, எண்ணற்ற சந்தேகங்களும்... அனுமானங்களும்... நிலவி வருவதை மறுக்க முடியாது.

# ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாகிற கிரகம், இன்னொரு கேந்திரத்தில் அமரும் போது...

# ஒரு கேந்திரத்திற்கு அதிபதியாகிற கிரகம், அதே கேந்திரத்தில் அமரும் போது...

# சுபக்கிரகங்கள்தான் இந்த தோஷத்தால் பாதிக்கப்படுகின்றன...

# அசுபக் கிரகங்களுக்கு இந்த தோஷம் இல்லை...

...இவ்வாறான எண்ணற்ற விதிமுறைகள் 'ஜோதிட உலகில்' உலவி வருவதை  நாம் அறிவோம். ஆனால், தனிப்பட்டவர்களின் வாழ்வில் இந்த அனுமானங்கள் பெரும்பாலும், நேரெதிர் விளைவுகளைத்தான் கொடுக்கின்றன.

உதாரணமாக, 

1. 'ரிஷப லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, சுபக் கிரகமான லக்னாதிபதி 'சுக்கிர பகவான்' 4 ஆம் பாவத்தில் (கடக இராசி) கேந்திரத்தில் அமர்ந்தார். அவருடைய 20 வருட தசாக் காலம், ஜாதகரின் 31 ஆவது வயதில் ஆரம்பித்தது.

கேந்திராதிபதிய தோஷத்தின் விதிகளாகக் கருதப்படுபவைகளில், 

 ~ கேந்திரத்திற்கு அதிபதியான 'சுக்கிர பகவான்' (லக்ன கேந்திரம்), இன்னொரு             கேந்திரத்தில் (4 ஆம் பாவ கேந்திரம்) அமருகிறார்.

 ~ சுபக்கிரகமான 'சுக்கிர பகவான்' கேந்திரத்தில் (4 ஆம் பாவ கேந்திரம்)                             அமருகிறார்.

மேற்கண்ட இரண்டு நிலைகளிலும் அமர்ந்த 'சுக்கிர பகவானின்' தசாக் காலத்தில்தான், ஜாதகர்...

 * 8 வருடங்களுக்குப் பின், மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.

 * துணைவியார்,  சுயேட்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று வெற்றி                       பெற்று  தலைவியானார்.

* அவரின் தோட்டத்திற்கு அருகிலிருந்த நிலத்தை விலைக்கு வாங்கி,                             விவசாயத்தை விரிவாக்கினார்.

* ஒரு மிஷனுக்காக தான் நடத்திக் கொண்டிருந்த உணவகம் அடுத்தடுத்த                      மிஷன்களுக்கு விரிவாக்கம் அடைந்தது. அதற்கு உதவியாக, மிஷனுக்குச்              சொந்தமான ஒரு வாகனம் சொற்ப விலையில் அவரிடம் வந்து சேர்ந்தது.

அது போலவே,

2. 'கும்ப லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 10 ஆம் பாவமான கேந்திரத்திற்கு                                 அதிபதியாகிய 'செவ்வாய் பகவான்', அந்தக் கேந்திரத்திலேயே ஆட்சி                          பெற்று அமர்ந்தார்.

 கேந்திரதிபத்திய தோஷத்தின் விதிகளில் ஒன்றான,

 ~ அசுப கிரகங்களுக்கு இந்த தோஷம் இல்லை... என்பதான விதியின் படி,

'கேந்திரத்தில்' (1) ஆம் பாவ கேந்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்த 'அசுபக் கிரகமான 'செவ்வாய் பகவானுக்கு', கேந்திராதிபத்திய தோஷம் இல்லை... என்பதாகத்தானே, இருக்க வேண்டும், ஆனால் அந்த ஜாதகருக்கு, 23 வயது முதல் 42 வயது வரையிலான 19 வருடக் காலங்களில்...

 * 19 வருடக் காலங்களாக நடந்து வந்த நிதி நிறுவனம், 5 வருடங்களாக நடந்து           வந்த கட்டுமான உபரிப் பொருள்கள் விற்பனை, 7 வருடங்களாக நடந்து வந்த       எண்ணை நிறுவனம்... என அனைத்திலிருந்தும் விடுபட வேண்டிய சூழல்                 ஏற்பட்டது.

 * அதற்குப் பின்,  அமைந்த இரண்டு வேலை வாய்ப்புகளும் மிக சொறப காலங்களிலேயே முடிவுக்கு வந்தன.

மேற்கண்ட இரண்டு உதாரணங்களே... கேந்திராதிபத்திய தோஷம் என்பதற்கான பல அனுமானங்களை, கேள்விக் குறிகளாக்கி விடுகின்றன.

ஸாய்ராம்.


Sunday, June 6, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 184. 'அறிவும்... புத்திசாலித்தனமும்'


எல்லாவற்றையும் மேலோட்டமாக அறிந்து கொள்ள முயல்வது... 'அறிவு'. எது, நமக்குத் தேவையோ அதை முழுவதுமாக அறிந்து கொள்ள முயல்வது... 'புத்திசாலித்தனம்'.

'அறிவுக்கும் - தொழிலுக்கும்' இடையில் சம்பந்தம் இருக்கிறது. அது போல 'புத்திசாலித்தனத்திற்கும் - நுணுக்கத்திற்கும்' இடையெயும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

உதாரணமாக, தற்போதைய சூழலில், முன்னனியில் இருக்கும் ஒரு தொழிலை நோக்கிய கல்வியை தேர்ந்தெடுப்பது... 'அறிவான செயல்தான்'. ஆனால், எல்லோரும் அதே பாதையில் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, எதிர்கால சூழலையும், தனது விருப்பத்திற்கு ஏற்றபடியும், ஒரு கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான்... 'புத்திசாலித்தனமான செயலாக' இருக்கும்.

ஜோதிடத்தில், 'அறிவு - தொழில்' என்ற 'பொதுவான இலக்கை' நிணயிப்பது, 'சூரிய  புத பகவான்களின்' இணைவு. இந்த இணைவைத்தான், 'நிபுண யோகம்' என்று வருணிக்கிறது ஜோதிடக் கலை.

இந்த 'நிபுண யோகம்' என்ற யோகத்தை சுட்டிக் காட்டும் 'சூரிய - புத பகவான்களின் இணைவுடன்'... 'ஞானக்காரகரான குரு பகவான்', ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் போது... 'குரு பகவானின்' அருள் கருணை, 'புத்திசாலித்தனம் - நுணுக்கம்' என்ற, 'ஞானத்தை', 'அறிவுடனும் - தொழிலுடனும்' கலந்து விடுகிறது.

இதுதான் 'குருவருள்' செய்யும் அற்புதம்.

ஸாய்ராம்.


Saturday, June 5, 2021

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'ஒலி வாங்கிக்கு முன் - முதன் முதலாக...'


பேசியது ...

1971, பள்ளி ஆண்டின் 'கலைவிழா'. மூன்றாம் வகுப்பு மாணவனான எனக்கு முதல் பேசும் அனுபவம். எனது தலைமை ஆசிரியரின் துணவியாரும், எங்களது பள்ளியிலேயே பணியாற்றிய ஆசிரியையுமான... திருமதி. சரஸ்வதி அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்தத் தலைப்பு... 'நாற்காலி'.

நாற்காலி, தனக்குத் தானே பேசிக்கொள்வது போல...ஒரு தொகுப்பு. அதை எழுதிக் கொடுத்தது மட்டுமல்ல... எவ்வாறு அதை பேச வேண்டும்... சொற்களுக்கு இடையேயும், வரிகளுக்கு இடையேயும் எவ்வாறு இடைவெளி இருக்க வேண்டும்... சபையின் ஒவ்வொரு பகுதிக்கும் பார்வை செல்ல வேண்டியதின் அவசியத்தையும்... அந்த சிறு வயதினனான எனக்கு, அவர் உணர்த்தியது... இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.

கலை விழாவிற்கு.இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நான் பேசவிருப்பதை நோட்டுப் புத்தகத்தில் பார்த்த, எனது அப்பா, எனக்கு இன்னொரு பயிற்சி வழிமுறையைக் கற்றுக் கொடுத்தார். அது, நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று பேசிப் பார்ப்பது... இவை அத்தனையயையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை, அந்த வயதினர்களால்தான் அறிந்து கொள்ள முடியும்..

மிகவும் நடுக்கத்துடன் அந்த இரண்டு நாட்களும் கடந்தன. நான் பயந்த அந்த நாளும் வந்தது. கலை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.  முதல் இரண்டு நிகழ்ச்சிக்குப் பின், எனது பெயர் அழைக்கப்பட்டபோது, என்னையறியாமல் எனது கால்கள் மேடையின் படிகளை நோக்கி நடந்தன. நடுக்கத்துடன் மேடையேறி, எனது உயரத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கு முன் நிற்கும் போது... தலை சுற்றுவது போலிருந்தது.

ஒரே ஒரு முறை, சற்று தூரத்திலிருந்து கையை அசைத்த, ஆசிரியர் சரஸ்வதி அவர்களைப் பார்த்தேன். எப்போது பேச ஆரம்பித்தேன்... எப்போது முடித்தேன்... என்பது எதுவும்... இன்று கூட எனது ஞாபகத்தில் இல்லை. ஆனால், சபையின் கை தட்டல்களின் ஒலி மட்டுமே, என்னை நினைவு உலகத்திற்குக் கொண்டு வந்தது.

மேடையை விட்டு இறங்கி வந்ததும், நான் முதலில் பார்த்தது... எனது நண்பர்களான கேசவமூர்த்தி, அரிச்சந்திரன், நடராஜன் மற்றும் ராமகிருஷ்ணனைத்தான். அவர்கள் முகத்திலிருந்த பெருமையே... நான் ஏதும் தவறிழைக்கவில்லை என்பதை உறுதி செய்தது.

ஸாய்ராம்.


Friday, June 4, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 183. 'தோஷங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமம்'


'கிரகங்களின் அமைவுகளை' வைத்து, 'தோஷங்கள்' என்று வகைப்படுத்துவதற்குப் பின், அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ கர்ம வினைகள்தான்' மறைந்திருக்கின்றன.

உதாரணமாக, 'பித்ரு தோஷம்' என்று வகைப்படுத்தப்படும் தோஷத்தால், ஜீவனின் வாழ்வில்,

~ சுகானுபவங்களின் தடையும்...

~ அந்தந்த பருவங்களில் அனுபவிக்க வேண்டியவைகளை, உரிய காலங்களில்           அனுபவிக்க முடியாத நிலையும்...

~ காலதாமதம் மட்டுமல்ல... காலங்கள் கடந்தும்... அடைய முடியாத                                நிலையும்...

~ தந்தையின் அருகாமையையும், அரவணைப்பையும் அனுபவிக்க முடியாத               நிலையும்...

~ எண்ணங்களில் தரும சிந்தனை ஓங்கியிருந்தாலும், அவற்றை செயல் படுத்த        முடியாத சூழலில் தத்தளித்து நிற்கும் நிலையும்...

...அனுபவிக்கப் படுகிறது.

ஆனால், இதற்கான காரணங்களை ஆய்ந்தால், அது அந்த ஜீவனின் 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளாக' இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் அதன் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளால்' மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது. படைப்பவனைத் தவிர, வேறு எவராலும் இந்தக் கட்டமைப்புக்குள் பிரவேசிக்க முடியாது.

மேற்கண்ட 'தோஷம்' என்று வகைப்படுத்தும் அமைவை, 'பாக்கியம்' என்ற 'தர்ம ஸ்தானம்' ஒன்றே வெளிப்படுத்திவிடும். 'லக்னம் (1 ஆம் பாவம்), பூர்வம் (5 ஆம் பாவம்) மற்றும் பாக்கியம் (9 ஆம் பாவம்) என்ற மிக முக்கியமான மூன்று அம்ஸங்களைத்தான், ஜோதிடம் 'திரிகோணம' என்று வருணிக்கிறது.

லக்னம், ஜீவனின் பிறப்புக்கான காரணத்தையும்... பூர்வம், ஜீவன் கொண்டுவந்திருக்கும் இன்ப - துன்பங்கள் சமமாக அடங்கிய கர்ம வினைகளின் தொகுப்பையும்... பாக்கியம், அந்த கர்ம வினைகளுக்கு ஏற்ப, ஜீவன் தனது வாழ்நாளில் அனுபவிக்கப் போகும் பாக்கியங்களையும்... சுட்டிக் காட்டுகிறது. 

இந்தத் திரிகோண அமைப்பின் சிகரம் என்று வருணிக்கப்படும், 'பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்தில்தான்',  ஜீவன் இவ்வுலகில் அனுபவிக்கும் அனுபவங்களின் தன்மையை மறைத்து வைத்திருக்கிறான் படைப்பாளன். அந்த அனுபவங்கள் அனைத்திற்கும், அந்தந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய கரம் வினைகளே'காரணம் என்பதையும், சூட்சுமமாக மறைத்தும் வைத்திருக்கிறான்.

'காரியங்கள்' என்ற ஜீவனின் வாழ்க்கை அனுபவங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பது... 'காரணங்கள்' என்ற ஜீவனின் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளே' !

ஸாய்ராம்.


Tuesday, June 1, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி-182. 'வழிபாடுகளில் அடங்கியிருக்கிற சூட்சுமம்' பகுதி-2.


 

'சைவம்' என்ற சிவ வழிபாடு செய்வதைக் குறிக்கும் லக்னங்களுக்கு (மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன இராசி வீடுகள்) அமையும் 'திரிகோண வீடுகளும்', அதே வழிபாடுகளுக்குள் அடங்கிய 'இராசி வீடுகளாக' அமைவதும் ஒரு அற்புத அமைவுதான்.

உதாரணமாக, 'ஸ்ரீ முருக பகவானை' அதிதேவதையாகக் கொண்ட 'மேஷ லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, இரண்டாவது திரிகோணமான 'பூர்வ புண்ணிய ஸ்தானமான', 'சிம்ம இராசிக்கு' அதிபதியான 'சூரிய பகவானுக்கு' அதிதேவதையாக... 'சர்வேஸ்வரனே' அமைகிறார். மேலும், மூன்றாவது திரிகோணமான 'பாக்கிய ஸ்தானமான' 'தனுசு இராசிக்கு' அதிபதியான 'குரு பகவானுக்கு' அதிதேவதையாக... 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவானே' அமைகிறார்.

இவ்வாறாக, 'சைவம்' என்ற சிவ வழிபாட்டைக் குறிக்கும், 'மேஷ லகனத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, 'லக்னம்', 'பூர்வம்' மற்றும் 'பாக்கியம்' என்ற 'திரிகோணங்களுக்கும்', முறையே 'ஸ்ரீ முருக பகவான்', 'சர்வேஸ்வரன்' மற்றும் 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவான்கள்'... என முறையாக அமைந்திருப்பதுதான் அற்புதம்.

அது போலவே, 'வைணவம்' என்ற 'பெருமாள்' வாழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட லக்னனங்களுக்கு (ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப இராசிகள்) அமையும், 'திரிகோண விடுகளும்' அதே வழிபாடுகளுக்கு இணையாக அமைவதும் அற்புதம்தான்.

உதாரணமாக, 'ஸ்ரீ ரெங்கநாதப் பிரபுவை' அதிதேவதையாகக் கொண்ட 'ரிஷப லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு, 'இரண்டாவது திரிகோணமாக' அமைகிற 'பூர்வ புண்ணியாதிபதியான' புத பகவானின் அதிதேவதையாக...'ஸ்ரீ வரதராஜப் பெருமாள்' அமைகிறார். அதுபோலவே, 'மூன்றாவது திரிகோணமாக' அமைகிற 'பாக்கியம்' என்ற சனி பகவானின் அதிதேவதையாக... 'ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாளே' அமைவதும், அற்புத அமைவுதானே.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...