ஒரு குழந்தையின் பிறந்த நேரத்தை கணிப்பதில் இருந்த அடிப்படைகள், தற்போது முற்றிலுமாக மாற்றம் அடைந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில், குழந்தைகளின் பிறப்பை கண்காணிப்பதில் அனுபவம் பெற்ற மூதாட்டிகளின் பங்கு இருந்தது. அதற்குப் பின்னர், அந்த முதாட்டிகளின் இடத்தில் மருத்துவர்கள் இடம்பெற்றனர். அப்போது, பிரசவங்கள் பெரும்பாலும் சுகப் பிரசவங்களாக அமைந்தன. குழந்தை பிறந்த நேரத்தை அந்த முதாட்டியோ... மருத்துவரோ... நம்மிடம் தெரிவித்தனர். அதைத்தான், ஜனன நேரமாகக் குறித்துக் கொண்டோம்.
லட்சக்கணக்கான உயிரணுக்களாக இருக்கும் ஜீவர்களுக்கு இடையே நிகழும் கடுமையான போட்டிக்கு இடையே, இறைவனின் அருள் கருணையினால், ஒரே ஒரு ஜீவன்தான், கருவறைக்குள் உயிர் பெறுகிறது. அதன் ஜனன நேரத்தையும் அந்த பரம்பொருளே தீர்மானிக்கின்றான். அதை அறிந்து சொல்லும் வாய்ப்பைத்தான் மருத்துவர்களுக்கு அளிக்கிறான்.
அந்த சூழல் படிப்படியாக மாற்றமடைந்து... தாயாரின் உடல் நிலையையும்... குழந்தையின் உடல் நிலையையும்... கருத்தில் கொண்டு, அந்த சூழலுக்குத் தேவையெனில் மட்டுமே, மிக அறிதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைப் பக்குவமாகக் கடந்த பின், மருத்துவர் அறிவிக்கும் நேரம், ஜனன நேரமாகக் குறிக்கப்பட்டது.
இன்று, பெரும்பாலான பிரசவங்கள் அறுவை சிகிச்சைகளாக மாறி விட்டிருக்கின்றன. சுகப் பிரசவங்கள் மிகவும் அரிதாகப் போய் விட்டன. அதுவும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கான நேரத்தை, பெற்றோரையே தீர்மானிக்கச் சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
தவிர்க்க முடியாத சூழலில்... நியாயமாகவும், தர்மமாகவும் இதை அணுக வேண்டியது ஒரு ஜோதிடரின் கடமையாகிறது. இதில் ஜோதிடர்கள் எதிர் கொள்ளும் சவால்களாக கீழ்க்கண்டவைகள் இருக்கின்றன.
# மருத்துவர்கள் கணிப்புக்காக அளிக்கும் நாட்கள் மிகக் குறைவானதாக இருக்கும்.
# குழந்தையை சுமந்திருக்கும் தாய்க்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுப்பதா... அல்லது பிறக்கப் போகும் குழந்தைக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுப்பதா... என்பது.
# பெரும்பாலும் இந்த அறுவை சிகிச்சைகளை பகல் பொழுதில்தான் தீர்மானிக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் இரவிலும், பகலிலும் இயற்கையாக பிரசவங்கள் நிகழ்ந்திருகின்றன.
இந்த சவால்களைக் கடந்து, ஒரு ஜோதிடர் தீர்மானிக்க வேண்டியது ஒன்றுதான். அது கண்ணுக்கு முன்னால் இருக்கும் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் தாயைப் பற்றியதுதான். அவரின் உடல் நிலையைத்தான் முதலில் கவனத்தில் கொண்டு வர வேண்டும். அந்தத் தாய்க்கு உகந்த நேரத்தைத்தான் தீர்மானிக்க வேண்டும்.
* அளிக்கப் பட்டிருக்கும் மிகக் குறைந்த நாட்களில், தாய்க்கு உகந்த நாளையும்... அந்த நாளின் நட்சத்திரத்தையும்... அந்த நாளின் திதியையும்... தேர்ந்தெடுக்கும் நாளின் லக்னத்தையும்... அந்த லக்னத்தை ஆளும் ஹோரையையும்... கணக்கில் கொண்டு, நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* ஒரு வேளை, அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாவிடில், மருத்துவரின் முடிவுக்கே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவருக்குத்தான், தாயின் நிலமையும், குழந்தையின் நிலமையும் மிக நன்றாகத் தெரியும்.
ஜோதிட அறிவை மட்டும் மூலதனமாகக் கொண்டு, ஒரு ஜோதிடர் எடுக்கும் முடிவு, அந்தப் படைப்பாளரின் முடிவுக்குள் இருப்பது மிக அவசியம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment