13 வயதில் கல்விக்கான கனவுடன், தொலைதூரத்தில் இருந்த அண்ணாவின் குடும்பத்துடன் வசிக்க நேர்ந்தது. 18 வயது வரையிலான 5 வருடங்களை மிகக் கடினமாகக் கடக்க நேர்ந்தது. பெற்றோருடன் திரும்பிச் செல்ல முடியாமலும், கல்வியிலும் கவனம் செலுத்த முடியாமலும், ஒரு அடிமையைப் போன்ற வாழ்வை வாழ நேர்ந்தது.
இறுதியாக, 18 ஆவது வயதில் இந்த சூழலிருந்து விடுபட வாய்ப்பு கிடைத்தது. வாழ்வின் மிக முக்கியமான காலக் கட்டத்தில், மேல் நிலைக் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில், மீண்டும் பெற்றோரிடம் சென்று சேர வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை அங்கே இருந்து விட்டு,, மீண்டும் தொலைத்த இடத்திலேயே கல்வியைத் தேட முடிவு எடுத்தேன்.
கிளம்புவதற்கு இரண்டொரு நாடகளுக்கு முன்னால், பெற்றோரின் வீட்டுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எனது இன்னொரு அண்ணார், அவரின் வீட்டிற்கு அழைத்தார். அன்றுதான் (25.6.1983) இந்திய - மேற்கு இந்தியத் தீவினருக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி, லண்டனில் நடக்கவிருந்தது. அவரின் வீட்டில், இதற்காகவே அவர் வாங்கிப் பொருத்தியிருந்த 'கருப்பு-வெள்ளை தொலைக் காட்சி' வசதி இருந்தது.
கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த மோகத்தில், பெற்றோரின் வீட்டில் இரவு உணவை முடித்து விட்டு, அண்ணாருடன் கிளம்பி அவரின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தோம். கதவைத் திறந்த அண்ணாரின் துணைவியாரின் முகம் என்னைப் பார்த்ததும் வெறுப்பில் குமைந்ததைக் கண்டேன். ஏற்கனவே இன்னொரு அண்ணாரின் குடும்பத்தில் பெற்ற அனுபவத்தில் துவண்டு இருந்த எனக்கு, இது மேலுமொரு அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
அண்ணார், என்னை டிவி இருந்த அறையில் அமர்த்தி விட்டு, உள்ளே சென்று அவரின் துணைவியாரிடம் 'அவன் நாளை காலையில் சென்று விடுவான். இரவு உணவை முடித்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். குளிரில் நடந்து வந்த அவனுக்கு, அவனுக்கு மிகவும் பிடித்த 'ஒரு பிளைன் டீயை' மட்டும் போட்டுக் கொடுத்துவிடு...' எனக் கெஞ்சிக் கொண்டிருந்தைக் கேட்டேன்.
'இறைவா ! ஏன் இம்மாதிரியான சூழலுக்குள்ளேயே என்னைத் தள்ளி விடுகிறாய் ? எவ்வாறாவது இந்த இறுக்கமான சூழலிருந்து மீட்டு விடு!' என்று பிரார்த்தித்தேன். அந்த அறைக்குள் நுழைந்த, அண்ணார் வந்து அருகில் அமர்ந்தார். சிறிது நேரத்தில், அந்த அறைக்குள் நுழைந்த அண்ணாரின் துணைவியார், அருகிலிருந்த டேபிளின் மீது சத்தத்துடன் ஒரு கண்ணாடி டம்ளரை வைத்து விட்டுச் சென்றார்.
சூடே இல்லாமல், மிகவும் வெது வெதுப்புடன் இருந்த, எனக்கு மிகவும் பிடித்த பிளைன் டீ ஒரு புறம்... நான் மிகவும் ரசிக்கும் கிரிக்கட் விளையாட்டின் இறுதிப் போட்டி மறு புறம்... அந்த நேரத்தில், வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அண்ணாரும், அவரின் துணைவியாரும் சென்று கதவைத் திறக்கும் போது வாசலில், கேரள மாநிலம், திருவனந்தபுர விமான நிலையத்தில் பணியிலிருக்கும், அண்ணாரின் நண்பர் வந்து நின்றிருந்தார்.
அவரின் வருகையையும் அவர்கள் இருவரும் ரசிக்கவில்லை என்பதாகத்தான் தோன்றியது. எனக்கருகில் வந்தமர்ந்த அவர், அண்ணாரிடம் நீண்ட நாற்களுக்குப் பின் சந்தித்த ஆவலில் பேச முற்பட்டதும்... அண்ணாரின் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்ததையும்... கவனித்த பின் அவர், 'சரி, நான் கிளம்புகிறேன். உங்களது பெற்றோரின் வீட்டில் உணவு அருந்தி விட்டுத்தான், இங்கு வந்தேன். தம்பியின் பயணத்தைப் பற்றியும் கேள்விப் பட்டேன். இப்போதே அவனை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். நாளை என்னுடனேயே அவன் கிளம்பட்டும் !' என்ற போது, கண்ணீரால் எனது கண்கள் நிறைந்தன. ஏனெனில், என்னை மீட்டெடுத்த அந்த ஆபத்பாண்டவரின் பெயர்... 'ஜெகதீஸன்'.
அவர்களிடம் இருந்து விடை பெற்ற போது, திரும்பிப் பார்த்தேன், நான் அருந்தாமல் வைத்திருந்த, எனக்கு மிகவும் பிடித்த பிளைன் டீ ஒரு புறம்... எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டின் இறுதிப் போட்டி மறு புறம். அன்றைய இரவில்... அந்த இரண்டில் ஒன்றை துறந்து விட்டேன்... அது 'பிளைன் டீ'.
இந்தப் பதிவை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவி சேனலில், அதே உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 'ஹைலைட்ஸ்' ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... காலண்டரைப் பார்க்கிறேன்... அது 25.6.2021 ஐக் காட்டுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment