பேசியது ...
1971, பள்ளி ஆண்டின் 'கலைவிழா'. மூன்றாம் வகுப்பு மாணவனான எனக்கு முதல் பேசும் அனுபவம். எனது தலைமை ஆசிரியரின் துணவியாரும், எங்களது பள்ளியிலேயே பணியாற்றிய ஆசிரியையுமான... திருமதி. சரஸ்வதி அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்தத் தலைப்பு... 'நாற்காலி'.
நாற்காலி, தனக்குத் தானே பேசிக்கொள்வது போல...ஒரு தொகுப்பு. அதை எழுதிக் கொடுத்தது மட்டுமல்ல... எவ்வாறு அதை பேச வேண்டும்... சொற்களுக்கு இடையேயும், வரிகளுக்கு இடையேயும் எவ்வாறு இடைவெளி இருக்க வேண்டும்... சபையின் ஒவ்வொரு பகுதிக்கும் பார்வை செல்ல வேண்டியதின் அவசியத்தையும்... அந்த சிறு வயதினனான எனக்கு, அவர் உணர்த்தியது... இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.
கலை விழாவிற்கு.இரண்டு நாட்களுக்கு முன்னதாக, நான் பேசவிருப்பதை நோட்டுப் புத்தகத்தில் பார்த்த, எனது அப்பா, எனக்கு இன்னொரு பயிற்சி வழிமுறையைக் கற்றுக் கொடுத்தார். அது, நிலைக் கண்ணாடிக்கு முன் நின்று பேசிப் பார்ப்பது... இவை அத்தனையயையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை, அந்த வயதினர்களால்தான் அறிந்து கொள்ள முடியும்..
மிகவும் நடுக்கத்துடன் அந்த இரண்டு நாட்களும் கடந்தன. நான் பயந்த அந்த நாளும் வந்தது. கலை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. முதல் இரண்டு நிகழ்ச்சிக்குப் பின், எனது பெயர் அழைக்கப்பட்டபோது, என்னையறியாமல் எனது கால்கள் மேடையின் படிகளை நோக்கி நடந்தன. நடுக்கத்துடன் மேடையேறி, எனது உயரத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கு முன் நிற்கும் போது... தலை சுற்றுவது போலிருந்தது.
ஒரே ஒரு முறை, சற்று தூரத்திலிருந்து கையை அசைத்த, ஆசிரியர் சரஸ்வதி அவர்களைப் பார்த்தேன். எப்போது பேச ஆரம்பித்தேன்... எப்போது முடித்தேன்... என்பது எதுவும்... இன்று கூட எனது ஞாபகத்தில் இல்லை. ஆனால், சபையின் கை தட்டல்களின் ஒலி மட்டுமே, என்னை நினைவு உலகத்திற்குக் கொண்டு வந்தது.
மேடையை விட்டு இறங்கி வந்ததும், நான் முதலில் பார்த்தது... எனது நண்பர்களான கேசவமூர்த்தி, அரிச்சந்திரன், நடராஜன் மற்றும் ராமகிருஷ்ணனைத்தான். அவர்கள் முகத்திலிருந்த பெருமையே... நான் ஏதும் தவறிழைக்கவில்லை என்பதை உறுதி செய்தது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment