Friday, June 4, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 183. 'தோஷங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமம்'


'கிரகங்களின் அமைவுகளை' வைத்து, 'தோஷங்கள்' என்று வகைப்படுத்துவதற்குப் பின், அந்தந்த ஜீவர்களின் 'பூர்வ கர்ம வினைகள்தான்' மறைந்திருக்கின்றன.

உதாரணமாக, 'பித்ரு தோஷம்' என்று வகைப்படுத்தப்படும் தோஷத்தால், ஜீவனின் வாழ்வில்,

~ சுகானுபவங்களின் தடையும்...

~ அந்தந்த பருவங்களில் அனுபவிக்க வேண்டியவைகளை, உரிய காலங்களில்           அனுபவிக்க முடியாத நிலையும்...

~ காலதாமதம் மட்டுமல்ல... காலங்கள் கடந்தும்... அடைய முடியாத                                நிலையும்...

~ தந்தையின் அருகாமையையும், அரவணைப்பையும் அனுபவிக்க முடியாத               நிலையும்...

~ எண்ணங்களில் தரும சிந்தனை ஓங்கியிருந்தாலும், அவற்றை செயல் படுத்த        முடியாத சூழலில் தத்தளித்து நிற்கும் நிலையும்...

...அனுபவிக்கப் படுகிறது.

ஆனால், இதற்கான காரணங்களை ஆய்ந்தால், அது அந்த ஜீவனின் 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளாக' இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் அதன் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளின் விளைவுகளால்' மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது. படைப்பவனைத் தவிர, வேறு எவராலும் இந்தக் கட்டமைப்புக்குள் பிரவேசிக்க முடியாது.

மேற்கண்ட 'தோஷம்' என்று வகைப்படுத்தும் அமைவை, 'பாக்கியம்' என்ற 'தர்ம ஸ்தானம்' ஒன்றே வெளிப்படுத்திவிடும். 'லக்னம் (1 ஆம் பாவம்), பூர்வம் (5 ஆம் பாவம்) மற்றும் பாக்கியம் (9 ஆம் பாவம்) என்ற மிக முக்கியமான மூன்று அம்ஸங்களைத்தான், ஜோதிடம் 'திரிகோணம' என்று வருணிக்கிறது.

லக்னம், ஜீவனின் பிறப்புக்கான காரணத்தையும்... பூர்வம், ஜீவன் கொண்டுவந்திருக்கும் இன்ப - துன்பங்கள் சமமாக அடங்கிய கர்ம வினைகளின் தொகுப்பையும்... பாக்கியம், அந்த கர்ம வினைகளுக்கு ஏற்ப, ஜீவன் தனது வாழ்நாளில் அனுபவிக்கப் போகும் பாக்கியங்களையும்... சுட்டிக் காட்டுகிறது. 

இந்தத் திரிகோண அமைப்பின் சிகரம் என்று வருணிக்கப்படும், 'பாக்கியம் என்ற தர்ம ஸ்தானத்தில்தான்',  ஜீவன் இவ்வுலகில் அனுபவிக்கும் அனுபவங்களின் தன்மையை மறைத்து வைத்திருக்கிறான் படைப்பாளன். அந்த அனுபவங்கள் அனைத்திற்கும், அந்தந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய கரம் வினைகளே'காரணம் என்பதையும், சூட்சுமமாக மறைத்தும் வைத்திருக்கிறான்.

'காரியங்கள்' என்ற ஜீவனின் வாழ்க்கை அனுபவங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பது... 'காரணங்கள்' என்ற ஜீவனின் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளே' !

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...