ஜோதிடக் கலையின் மிக முக்கிய அம்சம்... அந்தக் கலையை 'அணுகும் முறையில்தான்' அடங்கியிருக்கிறது.
கிரகங்களின் அமைவுகள், நமக்கு, நமது வாழ்வின் சூட்சுமங்களை சுட்டிக் காட்டுகின்றன.நமது வாழ்வில் நிகழும் நிகழ்வுகள்... என்ற காரியங்களை நம்மால் ஓரளவு அறிந்து கொள்ள முடிவதைப் போல, அந்த நிகழ்வுகளுக்கான காரணங்களை நம்மால் அறிந்து கொள்ளவே முடிவதில்லை.
இந்தக் காரணங்களைத்தான், கிரகங்களின் சேர்க்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், அதையும் மிகவும் சூட்சுமமாகத்தான் சுட்டிக் காட்டுகின்றன. ஆதலால்தான், அணுகுமுறை என்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
உதாரணமாக,
~ 'சூரிய பகவானுடன், சனி பகவானின்' சேர்க்கை, பொதுவாகத் தந்தைக்கும், மகவுக்கும் இடையேயான 'உறவு பேதத்தை' சுட்டிக் காட்டுகிறது.
ஆதலால், இந்த சேர்க்கை ஏற்பட்டிருக்கும் அனைவருக்கும், இதே போன்ற நிலை அமைந்து விடுவதில்லை. இதை நாம் அனுபவத்தில் பார்க்கலாம்.
'ரிஷப லக்னத்தை' சேர்ந்த ஒரு ஜாதகருக்கு, இந்த சேர்க்கை, 12 ஆம் பாவத்தில், அதாவது, 'மேஷ இராசியில்' நிகழ்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த சேர்க்கையில் 'தன-பூர்வ புண்ணியாதிபதியான' 'புத பகவானும்' இணைந்திருக்கிறார். இந்த அமைவுக்கான பொதுவான பலன்களாக...
- தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையேயான உறவு சிறப்பாக இருக்காது என்றும்...
- தந்தையினதும்... தந்தை வழியிலான பூர்வ சுகங்களையும்... ஜாதகர் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும்...
- ஒருவருக்கு ஒருவர் எதிரெதிர் நிலையிலான வாழ்வுதான் அமையும் எனவும்...
- தந்தையிடமிருந்து அனுபவிக்கும் எந்த ஒரு பாக்கியத்தையும், ஜாதகரால் அனுபவிக்க முடியாது என்றும்... தான் கணித்தளிக்க முடியும்.
ஆனால், இந்த அமைவின் சூட்சுமத்தை ஆராய்ந்தால்...
~ 'சூரிய பகவான்', லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திரமான 'பரணி 1 ஆம் பாதத்தில்' அமர்ந்து லக்னத்திற்கு (ரிஷப லக்னம்) இணைவான கிரகமானார்.
~ 'சனி பகவான்', லக்னாதிபதியான 'சுக்கிர பகவானின்' நட்சத்திரமான 'பரணி 3 ஆம் பாதத்தில்' அமர்ந்து லக்னத்திற்கும் (ரிஷ்ப லக்னம்)... லக்னாதிபதிக்கும் (சுக்கிர பகவான்) இணைவாகவும், நட்பாகவும் அமைந்தார்.
~ 'புத பகவான்', 'கேது பகவானின்' நட்சத்திரமான அசுவினி 1 ஆம் பாதத்தில்' அமைந்து, இந்த இணைவின்'மிக சூட்சுமமான' அமைவினைப் பெற்றார்.
இந்த சூட்சுமமான அமைவுகள்தான், இந்த கிரக சேர்க்கையின் பொதுவான பலன்களை முற்றிலுமாக மாற்றியமைத்தது.
- ஜாதகரின் மீது அவரது தந்தை அளவற்ற அன்பைப் பொழிந்தார். ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும், அமையப் பெற்ற குடும்பத்தில், மூன்றாவது பெண்ணாகப் பிறந்த இந்த ஜாதகர், தந்தையின் நிலைகளை நன்கு உணர்ந்தவராக இருந்தார்.
- இந்தப் புரிதல், குழந்தையாக இருந்த பொழுதிலிருந்து, ஜாதகர் மணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக மலரும் வரைத் தொடர்ந்தது.
- ஜாதகரின் அனைத்து வாழ்வு நிலைகளிலும், கடமைகளிலும்... (முடிந்த அளவுக்கு அளிக்க முடிந்த கல்வி, திருமணம், குழந்தைகளின் பிறப்பு, அவர்களுக்கான கடமைகள், கல்விக் கூடம் வரை வந்திருந்து குழந்தைகளை ஆசிர்வதித்தது, அவரின் கைகளாலே குழந்தைகளுக்கு வருடப் பூர்த்திகளின் போது ஜாதகம் கணித்து எழுதி வாங்கியது... என்று...) தந்தையின் அருகாமையும், பங்கீடும்... அளவற்ற அன்பும்... தொடர்ந்தது.
- திருமணத்திற்கு பிறகும், இந்த பிணைப்பு மேலும் வலுவடைந்தது. தந்தையின் மனக் கவலைகளை தீர்ப்பதிலும்... ஜாதகரின் மனக் கவலைகளை தீர்ப்பதிலும்...இந்த இருவரது அளவிலா அன்பு பெறும் பங்கை வகித்தது. எப்போதெல்லாம் இவர்கள் இணைகிறார்களோ, அப்போதெல்லாம் அந்த இணைவில், இந்த அன்புப் பிணைப்பு பூரணமாக இருந்தது... அவரின் மறைவு வரையிலும்.
- 'புத பகவானின்' அமைவு, 'கேது பகவானின்' சாரம் பெற்று அமைந்ததால்.. இவர்களின் அன்புப் பிணைப்புக்கு இடையில்...எந்த லௌகீக விஷயங்களும் இடைபடவில்லை... அவர் இருந்த போதும், மறைந்த போதும்.
எனவே, ஜாதகத்தில் கிரகங்களின் அமைவுகளை அணுகும் போது, 'காரியங்கள்' என்ற 'சேர்க்கையை' மட்டும் கருத்தில் கொள்ளாமல்...'காரணம்' என்ற 'சூட்சுமத்தையும்' கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஸாய்ராம்.







