Friday, April 2, 2021

எது நம்பிக்கை... ?

கமலா, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த 13 வயதுச் சிறுமி. பகவான் ஹரியின் மீது அதீத பக்தி கொண்ட கமலாவின் குடும்பம், கங்கைக் கரையோரத்தில், பசுக்களை வளர்த்து, அவை அளிக்கும் பாலை, அண்டை வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து, அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு நிம்மதியாக ஜீவனம் நடத்தி வந்தது.

கங்கைக் கரையின் அக்கரையிலிருக்கும் கிராமங்களுக்கு, பிரயாணிகளைக் கொண்டு சேர்க்கும் ஓடக்காரர், கமலாவின் தந்தையிடம், 'அக்கரையில், தனது மாணவர்களுடன் வசித்து வரும் பண்டிதருக்கு பால் தேவைப் படுகிறது. உங்களால் கொடுக்க முடியுமா...?' என்று கேட்டார். 'ஆற்றைக் கடந்து கமலா எவ்வாறு பாலைக் கொண்டு சேர்ப்பாள்...?' என்ற கேள்விக்கு, 'நான், ஒவ்வொரு நாள் காலையிலும், கமலாவை சரியான நேரத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகிறேன். கவலை வேண்டாம்' என்று உறுதி அளித்தார்.

அதன் படியே, காலையில் ஓடத்தில் பாலுடன் பயணித்த கமலா, ஹரியின் பாடல்களைப் பாடியவாறே, நதியைக் கடந்து பண்டிதரின் குடிலுக்குப் போய் சேர்ந்தாள். மகிழ்ச்சியடைந்த பண்டிதர், 'இது போலவே, நேரம் தவறாமல் வந்து விட வேண்டும். தவற விட்டால், எனது காலை அனுஷ்டானங்கள் அனைத்தும் கெட்டு விடும்' என்று கூற, மகிழ்வுடன் தலையாட்டினாள் கமலா.

நாளாக நாளாக ஓடக்காரரின் நேரம் தவற ஆரம்பித்தது. கமலாவாலும் நேரத்திற்கு பாலைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. வாரக் கடைசியில் கணக்குத் தீர்க்கும் நாளன்று, கமலாவின் கால தாமதத்தைக் கடுமையாகக் கண்டித்தார், பண்டிதர்.

மனமுடைந்த கமலா ஓடத்திற்காகக் காத்திருக்கும் போது, பண்டிதர், தனது மாணவர்களுக்கு அளிக்கும் போதனை, அவளின் கவனத்தை ஈர்த்தது. 'பிறவி என்பது பெரும் கடலைப் போன்றது. அதைக் கடந்து போவதற்கு கருவியாக இருப்பது ஹரியின் நாமம் ஒன்றே !,'என்ற பண்டிதரின் போதனை, இயல்பாகவே ஹரியின் மீது அன்பு கொண்ட, கமலாவின் மனதை, மேலும் நம்பிக்கையால் நிறைத்தது.

அடுத்த நாள் காலை, ஓடக்காரரின் வருகை தாமதமாகவே, பண்டிதரின் கண்டனம் கமலாவின் மனதில் நிழலாடியது. அதே வேளை, அவரது நம்பிக்கை மிகுந்த போதனையும், நினைவுக்கு வந்தது. 'ஹரியின் நாமம் கடலையே கடக்கும் வல்லமையுள்ளது என்றால், இந்த ஆற்றைக் கடப்பது கடினமா என்ன...!'  என்ற எண்ணம் வேரூன்றவே, சற்றும் தாமதிக்காமல், ஹரியை மனதில் இருத்தி, அவரது நாமத்தை உச்சரித்த படியே, பால் கூடையைத் தலையில் தாங்கி, ஆற்றின் மிது நடக்க ஆரம்பித்தாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அந்த ஆற்றைக் கடந்து, குடிலுக்குச் சரியான நேரத்தில் பாலைக் கொண்டு போய் சேர்த்தாள் கமலா.

மகிழ்ச்சியடைந்த பண்டிதர், 'என்ன... ஓடக்காரர் சரியான நேரத்தில் வந்து விட்டாரா ?' என்று கேட்க, கமலா, 'இல்லை ஐயா, அவர் வழக்கம் போல தாமதித்து விடவே, அவரை எதிர்பார்க்கமால், நானே ஆற்றைக் கடந்து வந்து விட்டேன்' என்றாள். 'எப்படி உடைகளும் நனையாமல், பாலும் சிந்தாமல், குறித்த நேரத்திற்குள் உன்னால் வர முடிந்தது ?' என்ற பண்டிதரின் ஆச்சரியமான கேள்விக்கு, 'நீங்கள்தான், அன்று, கடலையே கடக்கும் வல்லமை, பகவான் ஸ்ரீ ஹரியின் நாமத்திற்கு உள்ளது...என்று கூறினீர்கள். அந்த உபாயத்தைத்தான் நான் கடைப் பிடித்தேன். மிக எளிதாகக் கடந்தும் வந்து விட்டேன்' என்றாள்.

அவளின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டார் பண்டிதர். இவ்வளவு எளிய, கல்வி அறிவில்லாத, மாடுகள் மேய்த்து வாழ்க்கை நடத்தும் ஒரு பெண்ணால், எவ்வாறு இந்த அற்புதத்தை நிகழ்த்த முடிந்தது ? என்ற எண்ணம் மேலிட, 'ஆற்றை, நீ நடந்து கடந்து போவதைப் பார்க்க, நானும் வருகிறேன்' என்றார் பண்டிதர். 'மிகவும், மகிழ்ச்சி ஐயா... என்னோடு எங்களது வீட்டிற்கும் வாருங்கள். எனது தந்தை உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கக் காத்திருப்பார் !' என்றாள் கமலா.

பட படப்புடன், கரைக்கு வந்த பண்டிதரின் கண் முன்னே, கரையிலிருந்து மிக லாவகமாக, தரையில் நடப்பதைப் போலவே, கங்கையின் மீது நடக்க ஆரம்பித்தாள் கமலா. சற்று தூரம் சென்றதும், திரும்பி கரையில் இருக்கும் பண்டிதரைப் பார்த்து, கையை அசைக்க, கமலாவைப் பார்த்தபடியே நதியின் மீது காலை வைத்த பண்டிதருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.அவரை அறியாமலேயே, அவர் நதியின் மீது நின்று கொண்டிருந்ததுதான் அது. தன்னிச்சையாக, தனது வேஷ்டியை, நீரில் நனைந்து விடாதபடி தூக்கிப் பிடித்த கணமே, அவர் தண்ணிரில் மூழ்கித் தத்தளிக்க ஆரம்பித்தார்.

பார்த்துக் கொண்டிருந்த கமலா, வேகமாக ஓடி வந்து தனது கைகளைக் கொடுத்து, பண்டிதரைத் தூக்கி கரையை நோக்கி அழைத்து வந்தாள். கரையை அடைந்த பண்டிதர், தனது கவனத்தை கமலாவின் மீது வைத்த போது, தண்ணீரில் நிற்க முடிந்ததும்.. தனது வேஷ்டியின் மீது வைத்ததும், மூழ்க நேர்ந்ததையும்... நினைத்து வெட்கத்தில் மூழ்கிப் போனார். 

கமலாவின் நம்பிக்கையையும்... தனது நம்பிக்கையின்மையையும்... நினைத்த படியே, கமலாவின் தலையின் மீது, தனது கைகளை வைத்து, 'உன்னிடமிருந்து நான், ஹரியின் மீது வைக்கும் நம்பிக்கையைக் கற்றுக் கொண்டேன். உனது வாழ்வு, என்றென்றும், ஹரியின் நாமம் போலவே இனிக்கட்டும் !' என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.

- பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்..

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...