Thursday, April 1, 2021

அருணையின் ரமணா, அணையா விளக்கே... !

( அருணாச்சலேஸ்வரரின் அனுக்கிரகத்துடன், பகவான் ரமணரின் எல்லையில்லாத கருணையினால், அடியேனின் மனதில், 2.3.2008 அன்று உதித்த பாடல்)

அருணையின் ரமணா, அணையா விளக்கே

அருளொளி வீசும், தென்முகக் குருவே

பரந்திடும், விரிந்திடும், தொலைந்திடும் வாழ்வினை

உள்ளொளி காட்டி ஈர்த்திடும் சுடரே... !


ஈசனின் சலனமாய், சக்தியின் ரூபமாய்

வினைகளின் விளைவே, மாயையின் தோற்றம்

மாயையின் உள்ளே, மறைந்திட்ட மனதினை

தேர் கொண்டு செலுத்தும் திருச்சுழிநாதா... !                          (அருணையின்...)


அகத்தின் நிழலாய், புறத்தில் தோன்றும்

மாயையின்  உடலை, நிலையென நினைக்கும்

மனதினை மாற்றி, கனவினை நீக்கி

நிஜமதைக் காட்டும் நித்திய வடிவே... !                                     (அருணையின்...)


மலைகளைப் போலே, எழும் கடலலையை

உள்ளின்று இழுக்கும், புவிவிசை போலே

மனதினில் தோன்றும், வினைகளின் அலையை

உள்ளின்று நீயும், இழுத்திடு உடனே... !                                      (அருணையின்...)


இலக்கினை நோக்கி, குதிரையை செலுத்தும்

சாரதி கையின், சாட்டைகள் போலே

மனதினில் தோன்றும், முடிவுறா ஆசையை

புத்தியைக் கொண்டு, உன் வசம் திருப்பு... !                                (அருணையின்...)


ஓம் ரமணாய நமஹ !

ஸாய்ராம்.

       

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...