'தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு' (அதிகாரம் : தவம் குறள் எண் - 266)
''தவம் செய்பவர்கள் தமக்குறிய கடமைகளைச் செய்பவர்களாகவும், ஏனையோர் ஆசைகளுக்கு உட்பட்டு, வீணான செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்' என்பதுதான், இந்தக் குறளுக்கு பொதுவாக வழங்கப்படும் கருத்தாக இருக்கிறது.
இதைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்... 'தவம்', 'கருமம்', 'ஆசை' என்ற மூன்று சொற்களின் பிரயோகம், இந்தக் குறளில் பொதிந்திருப்பதைக் காணலாம்.
இதில், 'கருமம்' என்பது, நாம் செய்ய வேண்டிய கடமைகளைக் குறிக்கிறது. அதைத்தான், 'விதிக்கப் பட்டவைகள்' என்று வரையறுக்கிறது வேதாந்தம்.
'ஆசை' என்பது, நம்மை உலக வாழ்க்கயில் இழுத்துச் சென்று, அதிலேயே மூழ்க வைத்து, அதில் விளையும் இன்ப துன்பங்களில் திளைக்க வைத்து, மீள முடியாத பிறவிச் சுழலில் தள்ளி விடுவதற்கு மூலமாக இருக்கிறது. இதைத்தான், 'விதிக்கப் படாதவைகள்' என்று வரையறுக்கிறது வேதாந்தம்.
இந்த இரண்டு நிலைகளையும் பகுத்து அறிவதுதான்... 'தவம்' என்ற ஞானத் தேடல். இதைத்தான், 'ஞானம்' என்று வரையருக்கிறது, வேதங்களின் சிகரமான வேதாந்தம்.
இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஜீவனுக்கு, விதிக்கப் பட்டது மற்றும் விதிக்கப் படாதது என்ற இரு நிலகளைப் பற்றிய ஞானத்தை அருள்கிறார், வள்ளுவர்.
தனக்கு விதிக்கப்பட்டிருக்கிற கடமைகளை, தான் இறைவனின் கைகளில் இருக்கிற ஒரு கருவி என்ற எண்ணத்தோடு மட்டும் எதிர் கொள்பவரைத்தான், 'தவஞ் செய்வார்...' என்று வருணிக்கிறார்.
தனக்கு விதிக்கப்படாத செயல்களை, தனது ஆசைகளின் காரணமாக, தான்தான் செய்வதாகக் கருதிக் கொண்டு, அவற்றில் வீணாக ஈடுபட்டு, அல்லல் படுபவரைத்தான், 'அவஞ் செய்வார்...' என்று வருணிக்கிறார்.
ஆதலால், விதிக்கப் பட்டவைகளை மட்டும், தன்னைக் கருவியாகக் கருதிக் கடமைகளாகச் செய்பவரை, 'கருமமே கண்' என்று கருதி தவம் செய்பவராகவும்... ஏனையோர்களை வீணான முயற்சிகளில் ஈடுபட்டுத் தங்களது பிறவியை வீணடிப்பவர்களாகவும்... வருணிக்கிறார்.
வேதங்களின் சிகரமான வேதாந்தம் உணர்த்துவதை, தனது ஈரடி வெண்பாவின், ஏழு சொற்களுக்குள் அடக்கிடும் வள்ளுவரின் வல்லமையை... என்னவென்று வருணிப்பது... !
ஸாய்ராம்.

No comments:
Post a Comment