Wednesday, April 7, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 172. 'பிராணாயாமம்' பகுதி - 1.


சர்வ சக்தியாக இருக்கும் 'பிரம்மம்', ஜீவனாக அவதரித்திருக்கும் நமக்குள்ளே, 'ஜீவ சக்தியான' வாயுவாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறு, ஒரு நீர்த் தொட்டியில் நிறைந்திருக்கும் நீர், நமது அன்றாட வாழ்வின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து, இறுதியில், அந்த தொட்டியை நீரற்றுக் காய்ந்து போகச் செய்கிறதோ, அது போலத்தான், இந்த உடம்புக்குள் எழுந்திருக்கும் ஜீவனுக்கான 'உயிர்ப்புத் தன்மையும்'. ஜீவனுக்கென நிணயிக்கப்பட்ட வாழ்வு காலம் முழுவதும் ஜீவனை இயக்கும் இந்த 'உயிர் சக்தி', இறுதியில் ஜீவனின் வாழ்வுக் காலம் முடியும் தருவாயில், இந்த உடலை விட்டு 'அற்றுப் போகிறது'.

ஜீவ சக்தி... உயிர்ப்புத் தன்மை... உயிர் சக்தி... என்றெல்லாம் வருணிக்கப்படும் 'பிரம்ம சக்திதான்'... வாயுவாக நமக்குள் சலித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஓட்டம் நமது உடலுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது... நாம் 'உயிருடன் இருப்பது' உறுதி செய்யப் படுகிறது. எப்போது, அந்த ஜீவ சக்தியான வாயு, அதன் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து 'அற்றுப் போகிறதோ'... அல்லது, 'விட்டும் போகிறதோ... அப்போதுதான், இந்த ஜீவன் 'உயிரற்று இருப்பது' உறுதி செய்யப்படுகிறது.

ஜீவ சக்தியான வாயுவின் சலனத்தையொட்டியே, வாழ்வும் மறைவும் தீர்மானிக்கப் படுகின்றன. இந்த வாயு, நாம் உறங்கும் போது, நமது உடலுக்கு உள்ளாகவும்... நாம் விழித்திருக்கும் போது, இந்த உலகத்துடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது.

நம்மைத் தவிர, ஏனைய உயிரினங்கள் அனைத்திற்கும், இந்த சுவாசம், 'பின்னப் படாமல்', ஏக கதியாக, அதன் 'உற்பத்தி ஸ்தானத்தை' நோக்கிய பயணமாக, அமைந்து விடுகிறது. நமக்கு மட்டுமே, இந்த சுவாசம் 'பின்னப் பட்டு', உறங்கும் போது 'ஏக கதியாகவும்'... விழித்திருக்கும் போது 'பின்னப்பட்டும்' அமைந்து விடுகிறது.

இந்த ஏக கதியின் பயணத்தை 'சுழு முனை' எனவும்... பின்னப்பட்ட பயணத்தைத்தான், 'இடகலை' (சந்திர கலை) என்றும் 'பிங்கலை' (சூரிய கலை) என்றும் அழைக்கிறோம். 

உதாரணமாக, யானைக்கு எப்போதும், 'ஏக கதியில்தான்' சுவாசம் அமைந்திருக்கும். அதன் தும்பிக்கையின் இரண்டு துவாரங்களிலிருந்தும், எப்போது ஒரே சீராக மூச்சுக் காற்று வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், நமக்கோ. நம்மை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது (துரிய நிலை) ஏக கதியாகவும்... விழித்துக் கொண்டிருக்கும் போது, பின்னப் பட்டு, நமது 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, இடகலையாகவோ, பிங்கலையாகவோ அமைந்து விடுகிறது. அதனால்தான், ஏக கதி என்ற, முச்சுக் காற்றின் உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய, சுழுமுனைப் பயணத்தில் சுவாசத்தை மேற்கொண்டிருக்கும் இருக்கும், யானையின் தும்பிக்கை ஆசீர்வாதத்தை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறாக ஏக கதியிலும்... பின்னப் பட்டும் இயங்கும் 'சுவாசத்தை' இரு விதமான பயிற்சிகளால் உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சி முறைகள்தான்,

1. சுவாசப் பயிற்சி என்ற... பின்னப் பட்ட சுவாசத்தை அறிந்து கொள்வதும், அதை முறைப்படுத்துவதும்.

2. பிராணாயாமம் என்ற... உற்பத்தி ஸ்தானத்தை நோக்கிய 'ஏக கதி' பயணத்தை அறிந்து கொள்வதும், அதன் வழியே பயணிப்பதும்.

இந்த இரண்டு சுவாச முறைகளைப் பற்றி, தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு....

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...