பாபா, ஒரு 'சித்த மஹா புருஷர்'. எப்போதும் தனக்குள்ளேயே மூழ்கியிருந்த 'பரம்பொருளான சொரூபம்'.
'தன்னையறிந்தவர் அனைத்தையும் அறிந்தவராகிறார்...' என்ற வேதாந்த வாக்கியத்திற்கு ஏற்ப, 'கால - தேச - வர்த்தமானங்களை கடந்த 'அந்தர் ஞானி' (உள்ளொளி பெற்றவர்).
தன்னை நாடி வரும் பக்தர்களின் 'ஆன்மீகத் தகுதிகளுக்கு' ஏற்ப, அவர்களுக்கு 'உபதேசம்' அளித்தார். சிலருக்கு நாம ஸ்மரணத்தையும் (ராம நாமம்)... சிலருக்கு இதிகாச - புராண பாராயணங்களையும் (ராம விஜயம், அத்யந்த ராமாயணம், பகவத் கீதை, பாகவதம்)... சிலருக்கு தப, யோக நுட்பங்களையும்... அளித்தவர், பெரும்பான்மையான பக்தர்களுக்கு, பக்தி என்ற யோகத்தையே பிரதானமான உபதேசமாக அளித்தருளினார்.
அன்றைய காலத்தில் 'சப் - கலெக்டர்' (மம்லத்தார்) அந்தஸ்த்தில் பணியாற்றிக் கொண்டிருந்த, பாபாவின் அத்யந்த பக்தரான 'நானா சாஹேப் சந்தோர்க்கார்', ஒருமுறை, 'பகவத் கீதையின்' சுலோகங்களை ஸ்மரித்துக் (சப்தமின்றி பாராயணம் செய்தல்) கொண்டே, பாபாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தார்.
கீதை' பகவானால் அருளப்பட்ட 'ஞானப் பொக்கிஷம்' அந்தப் பொக்கிஷத்தை, தனது பக்தருக்கு அருளிட நினைத்த பாபா, 'நானா ! நீங்கள் ஸ்மரிப்பதை சற்று உரக்கச் சோல்லுங்கள் !' என்று கூறினார். நானாவோ, 'பாபா !... நான் கீதையின் சுலோகங்களை ஸ்மரித்துக் கொண்டிருக்கிறேன் !' என்றார். நானாவின் மனதில், பாபாவுக்கு 'சமஸ்கிருதம் பற்றிய ஞானம் இருப்பதில் சந்தேகம் இருந்தது. பாபா,'பரவாயில்லை... நீங்கள் அதை சப்தமாக பாராயணம் செய்யலாம்' என்ற போது, நானா... கீதையின், 4 ஆவது அதியாயத்தின் 34 வது சுலோகத்தை ;
'தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்பிரச்னேன ஸேவயா
உபதேஷ்யந்திதே ஜ்ஞானம் ஜ்ஞானினஸ் தத்வதர்ஸன'
என்று நானா, சப்தமாக பாராயணம் செய்தார். கேட்டுக் கொண்டிருந்த பாபா, 'நானா... இதற்கான அர்த்தத்தை பதம் பதமாக பிரித்துக் கூறு ' என்று பணித்தபோது, நானா, 'ஞானிகளை அணுகி, அவர்களின் பாதம் பணிந்து, அவர்களுக்குச் சேவை செய்து, கேள்விகளைக் கேட்டு, ஞானத்தை அறிந்துகொள், ஏனெனில் ஞானிகள்தான் தத்துவத்தை உணர்ந்தவர்கள்' என்று பதம் பிரித்துக் கூரினார்.
அவரின் விளக்கத்தைக் கேட்ட பாபா, மூன்று கேள்விகளை நானாவின் முன் வைத்தார்,
1. ஞானத்தின் சுரங்கமான பகவான், ஏன் அர்ஜுனனை ஞானிகளின் பாதத்திற்கு அனுப்ப வேண்டும் ? அவரே ஞானத்தை உபதேசித்திருக்கலாம் அல்லவா ?.
எதிர்பாராத இந்தக் கேள்விக்கு, பதில் தோன்றாமல் நானா மௌனமாக இருந்தார். பின்னார் பாபா,
2. 'பரி' என்றால் என்ன ?' என்று கேட்டார், அதற்கு நானா'கேள்வி கேட்டல்' என்று பதிலளித்தார். மீண்டும் பாபா, 'பிரச்னா" என்றால் என்ன ?' என்று கேட்டார். சற்று தயங்கிய நானா, 'அதற்கும் அதே பொருள்தான் பாபா...' என்றார். உடனே, பாபா, 'ஒரே அர்த்தத்தை குறிக்கும் இரண்டு சொற்களை ஏன் வியாஸர் பயன் படுத்தியிருக்கிறார் ? என்று கேட்டார்.
இந்தக் கேள்விகள், நானாவை, திக்கு முக்காடச் செய்தன.
3. 'உபதேசிக்கப்பட வேண்டியது 'ஞானத்தையா ?' அல்லது 'அஞ்ஞானத்தையா ?' என்று பாபா, கேட்டபோது, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்ற நானா... பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்தார். நானாவின் சிந்தனையைத் தூண்டிவிட்ட பாபா, அவருக்குத் தனது 'ஞானப் பெட்டகத்தைத்' திறந்து ;
'நானா ! ஞானிகளை தனது ஆத்மா என்று பகவான் கூறியதை உறுதி செய்யுமாறே, அர்ஜுனனை ஞானிகளின் திருவடிகளுக்கு வழிகாட்டினார்.'
மேலும் 'சேவை' என்பது எதிர்பார்ப்புடன் செய்வதல்ல... அன்பினால் செய்வது. அந்த சேவையை மனப்பூர்வமாகவும்... பணிந்தும்... செய்ய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். கேள்விகள் கேட்பது என்பது, நமது அறியாமையை நீக்கிக் கொள்வதற்காகத்தானே தவிர, நமது அகங்காரத்தை வளர்த்துக் கொள்ள அல்ல...என்பதால், மிகவும் பணிந்து, தனது சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்கான கேள்விகளைக் கேடக வேண்டும் என்று அறிவுருத்துகிறார்.
இறுதியாக 'ஞானம்' என்பது ஏதோ தேடி அலைய வேண்டிய வஸ்து இல்லை. அது ஏற்கனவே இருப்பது. அதை 'அஞ்ஞானம்' மூடி மறைந்த்திருக்கிறது. அந்த அஞ்ஞானத் திரையை விலக்கினால், ஞானம் பளிச்சிடுகிறது. எவ்வாறு அழுக்குகள் நீங்கிய வஸ்திரம் தூய்மையாகிறதோ... அது போல. ஆகவே, எதை நீக்க வேண்டும் என்பதைத்தான் உபதேசிக்க வேண்டியிருக்கிறது. அதை நீக்கி விட்டால் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விடலாம்'.
பாபாவின் இந்த 'ஞானோபதேசத்தை', பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த நானா, தெளிவடைந்து... தனது அறியாமை நீங்கி... ஞானம் பெற்றவராக... பாபாவின் திருவடிகளில் நன்றியுடன், 'ஆனந்தக் கண்ணீர்' சொரிய, சிரம் தாழ்த்தி வணங்கினார்.
ஸாய்ராம்.