Tuesday, May 31, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 224. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 3.


கிரகங்களின், ஆட்சி... உச்சம்... நீசம்... போன்ற நிலைகளின் வழியாக எண்ணற்ற சூட்சுமங்களை அளிக்கிறது, இராசியின் கட்டமைப்பு.

உதாரணமாக... ஒரு மனிதனின் உலக வாழ்வு, பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு... வானப்பிரஸ்தம்... சந்யாசம்... என நான்கு பகுதிகளாகப் பகுக்கப்படுகிறது.

பால்யப் பருவத்திலிருந்து, கல்வி கற்று, வாழ்வின் கடமைகளை ஆரம்பிக்கும் இளமைக் காலத்தை, 'பிரம்மச்சர்யம்' என்றும்... வாழ்க்கைத் துணையை அடைந்து, இல்வாழ்வின் தர்மத்தின் வழியே கடந்து போகும் காலத்தை, 'இல்வாழ்வு' எனவும்... இல்வாழ்வின் கடமைகளைப் பூர்த்தி செய்து துணைவருடன் ஒரு துறவு வாழ்க்கையை மேற்கொள்வதை, 'வானப்பிரஸ்தம்' என்றும்... துணையையும் துறந்த பற்றற்ற நிலை வாழ்வை, 'சந்யாசம்' என்றும்... பகுத்துக் கூறலாம்.

பிரம்மச்சாரியாக வாழும் காலத்தில், நமக்கு அமைந்திருக்கும் சூழலை, நமது பூர்வம் மட்டுமே தீர்மானிக்கிறது. அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குக் கற்றுக் கொள்கிறோம். தாய், தந்தை உட்பட்ட உறவுகள்... சுற்றம்... சூழல்கள்... என எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. நமக்கு அமைந்திருக்கும் வாழ்வை, அவ்வாறே ஏற்றுக் கொள்கிறோம். நமக்கென தீர்மானிக்கும் வாய்ப்புகள் இல்லாது போகிறது.

இதைத்தான், 'கால புருஷ இராசியின்', இராசியதிபதியாகிய 'மேஷ இராசியில்', கிரகங்கள் பெற்றிருக்கிற ஆட்சி... உச்சம்... நீச நிலைகள்... உணர்த்துகின்றன. 

இந்த பிறவிக்கு மூலமாக இருக்கிற 'பரமாத்ப சொரூபத்தின்' அம்சமாகிய 'சூரிய பகவான்' உச்ச நிலையில் இருப்பதும்... அந்த சொரூபத்தின் 'ஆற்றலை' வெளிப்படுத்துகிற 'ஜீவனாகிய' ஜீவாத்மாவை பிரதிபலிக்கிற 'செவ்வாய் பகவான்' ஆட்சி நிலையில் இருப்பதும்... அந்த ஜீவாத்மா, இன்னும் தனது உலக வாழ்வு என்ற 'பூர்வ பாப புண்ணிய கர்ம வினைகளை' அனுபவிக்க ஆரம்பிக்க வில்லை என்பதை, ஜீவனின் 'ஆயுள் காலத்தை' வெளிப்படுத்துகிற 'ஆய்ள்காரகரான', 'சனி பகவான்' நீச நிலையில் இருப்பதும்... வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

படிப்படியாகத் தனது 'கர்ம வினைகளின்' வழியே பயணிக்கும் ஜீவன், கல்வி (2 ஆம் பாவம்), வெளி உலகத் தொடர்புகள் (3ஆம் பாவம்), சுகங்கள் (4 ஆம் பாவம்), சேர்த்து வைத்தல் (5 ஆம் பாவம்), இவற்றைக் கடக்கும் போது தான் பெறும் அனுபவங்கள் (6 ஆம் பாவம்) என ஒவ்வொன்றாகக் கடந்து, முதல் முறையாக தன்னை ஒரு உறவுடன் பந்தப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் (7 ஆம் பாவம்) பெறுகிறது. 

இதுதான், அந்த ஜீவன் தன்னை 'பிரம்மச்சர்யத்திலிருந்து' விடுவித்துக் கொள்ளும் 'காலமாக' அமைகிறது. ஜீவனுக்கு இரண்டு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஒன்று 'இல்வாழ்வு தர்மம்'... மற்றொன்று சந்யாச தர்மம்'.

'இல்வாழ்க்கையை' மேற்கொண்டு, கடமைகளைப் பூரணமாக்கி, 'வாணப்பிரஸ்தத்தின்' வழியே 'இறைவனை' (முக்தியை) அடைந்து விடலாம். அல்லது, நேரடியாக 'சந்யாச தர்மத்தின்' வழியில், இறைவனை (முக்தியை) அடைந்து விடலாம்.

இந்தக் கலிகாலத்தில், இல்வாழ்க்கை தர்மத்தை அனுசரிப்பதற்காக, அதைத் தேர்ந்தெடுக்கும் ஜீவர்களாகிய நாம், இல்வாழ்வை 'தர்மத்துடன்' அனுசரிப்பதை மறந்து, இல்வாழ்க்கை சுகங்களில்' மூழ்கிப் போய், வானப்பிரஸ்த வாழ்வின் வழியே இறைவனை அடைவதை மறந்து விடுகிறோம். அதனால், மீண்டும் மீண்டும் பிறவிகள அடைந்து, 'பிறவிப் பெரும் பிணியில்' சிக்கித் தவிக்கிறோம்.

இந்த நிலையைத்தான், 'கால புருஷ இராசியின்', 7 ஆமிட கிரக 'ஆட்சி... உச்ச... நீச... நிலைகள்' நமக்கு உணர்த்துகின்றன. இல்வாழ்வை நாம் எதிர்கொண்டு சுகங்களின் மூழ்கிப் போவதை, 'சுக்கிர பகவானின் ஆட்சி நிலையும்... அதனால் நாம் அனுபவிக்கும் இன்ப - துன்ப நிலைகளுக்கான கால நிர்ணயத்தை 'சனி பகவானின்' உச்ச நிலையும்... இந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும் நாம், நமக்கு உள்ளிருந்து அருளும் பரமாத்ம சொரூபத்தை (ஆத்மா) மறந்து போவதை, 'சூரிய பகவானின்' நீச நிலையும்' நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

ஸாய்ராம்.

                               


Monday, May 30, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 223. 'முழுமையான அனுபவம் பெற...'


ஜாதகத்தைப் பார்த்தவுடன் ;

ஏழரை... அர்த்தாஸ்டமம்... கண்டம்... அஷ்டமம்... என, 'சனி பகவானின்' நிலையையும்,

நான்கு... ஏழு... எட்டு... என, 'செவ்வாய் பகவானின்' நிலையையும்,

1/7... 2/8... 5/11... என, 'ராகு - கேது' பகவான்களின் நிலையையும்,

மூலம்... பூராடம்... ஆயில்யம்... என, நட்சத்திரங்களை முன்னிருந்தியும்,

பித்ரு... புத்ர... களத்திர... என, தோஷங்களையும்,

சஷ்டாங்கம்... கால சர்ப்பம்... என, யோகங்களையும் சுட்டிக் காட்டி,

ஜாதகர்களை 'மிரள' வைப்பதை தவிர்த்து விடுதல் நன்று.


மாறாக, 


கிரக அமைவுகளின், ஸ்தான பலம்... ஆதிபத்திய பலம்... பார்வை பலம்... என்றும்,

ஆட்சி... உச்சம்...நீசம்... நட்பு... திக் பலம்... வர்க்கோத்துமம்... என, கிரக நிலைகளையும்,

திரிகோண... கேந்திர... உப-ஜெய... மறைவு... என்ற அமைவுகளையும்,

கிரகங்கள் நட்சத்திர சாரங்கள்... சாராதிபதிகளை ஆளும் கிரகங்கள்... நவாம்ஸத்தில் அவற்றின் பலம் மற்றும் பலவீன... நிலைகளையும்,

ஜாதகரின் வயது... ஜனன கால தசா இருப்பு... அதிலிருந்து ஜாதகர் கடந்து வந்திருக்கும் தசாக்கள்... தற்போதைய தசா... புத்தி... அந்தரம்... என்ற கணக்கீடுகளையும்,

ஆய்ந்து, அவற்றை அடிப்படையாக வைத்து, பலன்களை அளிக்கும் போது... அது ஒரு 'முழுமையான அனுபவமாக' மலர்ந்து விடுகிறது.

இதற்குத் தேவை, 'பொறுமையும் - நிதானமும்' தான்... இது இருவருக்கும் (ஜோதிடர்க்கும் - ஜாதகருக்கும்) பொருந்தும்.

ஸாய்ராம்.


        


 

Tuesday, May 24, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 222. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 2.



எண்ணற்ற சூட்சுமங்களுடன்தான் 'இராசிக் கட்டம்' அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாவங்களுக்கும் நேர் எதிர் பாவங்களாக 7 ஆம் பாவகம் அமைந்து விடுகிறது. உதாரணமாக 'லக்னம்' என்ற 1 ஆம் பாவத்திற்கு நேரெதிர் பாவமாக 7 ஆம் பாவமான (களத்திரம் - தொடர்பு - நட்பு) என்ற பாவம் அமைகிறது. 

இவ்வாறு அமையும் அனைத்து பாவகங்களிலும், மூன்று பாவங்கள் மிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. 1 ஆம் பாவம் (லக்னம்), 4 ஆம் பாவம் (கல்வி-சுகம்-தாய்), மற்றும் 5 ஆம் பாவம் (.பூர்வம்).

ஏனெனில், லக்னம் என்ற பாவம் (1 ஆம் பாவம்), ஜீவனைக் குறிக்கிறது. இவ்வுலகில் இந்த ஜீவன்வாழும் நெறிமுறையான வாழ்விற்கு ஏற்றபவே, அதற்கான உலகத் தொடர்புகளும் அமைகின்றன. ஆதலால்தான், லக்னத்திற்கு நேரெதிரான 7 ஆம் பாவம் (களத்திரம் - தொடர்பு - நட்பு) 'கேந்திரங்களில்' ஒன்றான, சுபமான பாவமாக அமைந்து விடுகிறது.

அடுத்ததாக, 4 ஆம் பாவம், ஜீவன் இந்த உலகில் பெறும் 'அறிவு' என்ற கல்வி - கேள்விகளைக் குறிக்கிறது. ஜீவன் பெறும் அறிவையும், அனுபவத்தையும் கொண்டுதான், அதற்கு விதிக்கப்பட்டிருக்கிற 'கடமைகளைக்' கடந்து போக முடிகிறது. ஆதலால்தான், 4 ஆம் பாவத்திற்கு நேரெதிரான 10 ஆம் பாவம் (ஜீவனம் - கர்மம்) கேந்திரங்களில் ஒன்றான, சுபமான பாவமாக அமைந்து விடுகிறது.

இறுதியாக, 5 ஆம் பாவம், ஜீவன் சுமந்து வந்திருக்கிற 'கர்ம வினைகளை' குறிக்கிறது. அந்த வினைகளின் 'பாப - புண்ணிய வினைகளின் விளைவுகளை' (இன்ப - துன்பங்களை...) ஜீவன் எவ்வாறு சமமாக... விருப்பு - வெறுப்பின்றி... பற்றற்று... எதிர்கொள்கிறதோ, அதற்கேட்பவே, அந்த ஜீவன் இவ்வுலகில் தனது ஆனந்தத்தை பெருக்கிக் கொள்கிறது. ஆதலால்தான், 5 அம் பாவத்திற்கு நேரெதிரான 11 ஆம் பாவம் (லாபம்) 'பண பர ஸ்தானங்களில்' (2 மற்றும் 11 ஆம் பாவங்கள்) ஒன்றாக அமைந்து விடுகிறது.

இந்த ஜீவ அனுபவத்தைத்தான், 'அறத்தில்' ஒன்றாக, 'வள்ளுவப் பெருந்தகை', 'கற்க கசடற கற்பவை கற்ற பின்... நிறக அதற்குத் தக', என்ற குறளில் வலியுருத்துகிறார்.

மாறாக, ஏனைய பாவங்கள் அனைத்திற்கும் நேரெதிரான 7 ஆம் பாவமாக, ஒரு 'மறைவு ஸ்தானம்' (3 ஆம், 6 ஆம், 8 ஆம் மற்றும் 12 ஆம் பாவங்கள்) அமைவதிலிருந்தே, இதனை உறுதி செய்து கொள்ளலாம்.

ஸாய்ராம்.



ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 221. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 1


 எண்ணற்ற சூட்சுமங்களுடன்தான் 'இராசிக் கட்டம்' அமைக்கப்பட்டிருக்கிறது.

'திரிகோணங்கள்' என்ற லக்னம் ( 1 ஆம் பாவம் ), பூர்வம் ( 5 ஆம் பாவம் ), பாக்கியம் ( 9 ஆம் பாவம் ) என்பவைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 'விதி' என்ற 'பூர்வ பூண்ணியங்களை' வெளிப்படுத்தும் பாவங்களாக அமைந்திருக்கின்றன.

இந்தத் 'திரிகோண பாவங்களின்' தன்மைகளுக்கு ஏற்பவே , உலக வாழ்வை சுட்டிக் காட்டுகின்ற 'கேந்திரங்களின்', அதாவது லக்னம் ( 1 ஆம் பாவம் ), சுகம் ( 4 ஆம் பாவம் ), களத்திரம் ( 7 ஆம் பாவம் ), ஜீவனம் ( 10 ஆம் பாவம் ) ஆகியவற்றின் பாவங்களும் அமைந்து விடுகின்றன.

உதாரணமாக, 'விதியின்' வசம் சார்ந்த திரிகோண அமைவின் 'பூர்வ புண்ணிய பாவத்திற்கு' ( 5 அம் பாவம் ) 6 ஆம் இடத்தில் 'உலக வாழ்வின்' கேந்திரமான 'ஜீவன' பாவம் ( 10 ஆம் பாவம் ) அமைந்து விடுகிறது.

இது எதைக் குறிக்கிறது என்றால், அந்த ஜீவனின் 'பூர்வ புண்ணிய பலத்திற்கு' ஏற்பவே,  உலக வாழ்வில் அது எதிர்கொள்ளப் போகும் 'ஜீவித' ( எதிர் கொள்ளும் அல்லது மேற்கொள்ளும் செயல்களுக்கான...) பாதையும் அமைந்து விடும் என்பதைத்தான்.

இதைத்தான், 'ஜோதிட சாஸ்திரம்' , 'பதவி பூர்வ புண்யானாம்...' என்ற சுலோகத்தின் வாயிலாக ஜீவனுக்கு முன் கூட்டியே அறிவித்து விடுகிறது. 
 

ஸாய்ராம்.


Monday, May 9, 2022

'நான் யார் ?'... பகவான் ஆதிசங்கரர்.


'மனமல்ல, அறிவல்ல, அகங்காரமும் உணர்வுமல்ல,

வானல்ல, வையமல்ல, நான் உலோகக் கனியுமல்ல,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான் !


பிறப்புமில்லை, இறப்புமில்லை, சாதி குலமேதுமில்லை ;

அம்மையுமில்லை, அப்பனுமெனக்கில்லை,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான் !

சிறகடிக்கும் சிந்தனையும் கடந்தே,

சீருருவம் பெற்ற அருவமேயான்,

அனைத்துயிரின் அங்கமெலாம் ஊடுருவி யான் நிற்பேன்

பந்தமெனும் பயமேதும் எனக்க்கிங்கில்லை ;

நான் சுதந்திரன் ; என்றுமே நான் சுதந்திரன்,

நானே அவன், நானே அவன், நன்னருள்

பெற்ற ஆத்மாவே நான். '


ஸாய்ராம்.


Saturday, May 7, 2022

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'அன்னைக்கு சமர்ப்பணம்...'


 

அம்மா... அந்த சொல்லுக்குள்தான் எத்தனை கருணை !

எனது தாயார், ஆங்கிலேயர்கள் நிர்வகித்த தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்தார். தந்தை, அருகிலிருக்கும் சிறிய கடை வீதியில் பங்குதாரர்களுடன் இணைந்து, சிறிய தொழில் ஒன்றை நடத்தி வந்தார்.

பங்குதாரர்களின் நெருக்கடியால், தான் மிகவும் கடினமாக உருவாக்கிய தொழிலை, அவர்களிடமே விட்டு விட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட தந்தை, ஓரு நாள் அனைத்தையும் இழந்து... மனவாட்டத்துடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தோட்ட வேலை... வீட்டு வேலை... குழந்தைகள் பராமரிப்பு... என அனைத்தையும் பார்த்துக் கொண்ட தாயார், மனம் வெதும்பி, விடு திரும்பி, நடந்தவை எதையுமே சொல்லாமல் படுக்கையில் புரண்ட தந்தையிடம் பரிவாக அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 'கவலை வேண்டாம். தைரியமாக இருங்கள். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார்.

'நான் இருக்கிறேன். கவலைப்பதாதே !' என்ற இந்த உயரிய மொழிகளை, தாயால் அன்றி வேறு எவராலும் கூற முடியாது ! விடிந்த்தும், வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, தந்தையைக் கவனிப்பது, என்று அனைத்தையும் முடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினார் தாயார்.

மாலை வீடு திரும்பி, மாலைக் கடமைகளை அனைத்தையும் பூரணமாக்கி, குழந்தைகள் தூங்கிய பின், சுவாமி மடியிலிருந்து ஒரு பையைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தார் அம்மா. பிரித்துப் பார்த்த தந்தையின் கண்கள் குளமாயின. காரணம் அதில் கத்தையாக ரூ. 6,750 / - ( 1950 களில் இந்தத் தொகை மிகப் பெரியது. அன்று தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 40 ரூபாய்தான்) இருந்தது.

கண்களில் நன்றியுடனும்... மனதில் கேள்வியுடனும்.. இருந்த தந்தைக்கு, தாயார், ' எனது வருங்கால வைப்பு நிதித் தொகுப்பிலிருந்து பெற்ற தொகைதான்... இது' என்று கூறிய போது, அவரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பின்னால்தான் என்னால் ஊகிக்க முடிந்தது.

காலம் கடந்தது... தொழிலில் முன்னேறிய என் தந்தை, முதலில் செய்தது, சொந்தமாக தொழில் ஸ்தாபனத்துடன் கூடிய வீடு ஒன்றைக் கட்டி, எனது தாயாரை வேலையிலிருந்து விடுவித்து, அவரை வீட்டில் கொண்டு வந்து அமர வைத்ததுதான். அதற்குப் பின், வாழ்நாளின் இறுதிவரை, என் தாயார் ஒரு குடும்பத் தலைவியாகவே வாழ்ந்தார், 

என் தந்த்தையாரின் வாழ்க்கை மாற்றத்திற்குப் பின் பிறந்த ஆறு குழந்தைகளில்...  நான்தான் கடைக்குட்டி.

'அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை... அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை... மண்ணில் மனிதரில்லை...'

ஸாய்ராம்.



Friday, May 6, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 220. 'பாரதி உணர்த்தும் பாடம்...'


'தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்து - கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?'

... என்ற 'பாரதியாரின்' வரிகளை சுட்டிக் காட்டாத 'பட்டிமன்றப் பேச்சாளர்களோ, 'ஊக்கத்தையளிக்கும்' பேசாளர்களோ, இருக்க முடியாது.

ஆனால் பாரதியின் இந்த வரிகள், சமுதாயத்தை நோக்கியது அல்ல... என்ற உண்மை... இந்தப் பாடலின் முழுமையையும் அறியும் போதுதான் புரிதலுக்கு வரும். 

இந்தப் பாடலை, பாரதியார்,

'நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் - எந்தன்

முன்னைத் தீயவினை பயன்கள் - இன்னும்

மூளாது அழிந்திடுதல் வேண்டும் - இனி

என்னைப் புதிய உயிராக்கி - எனக்கு

ஏதும் கவலையறச் செய்து - மதி

தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்

சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்'

... என்று முடிக்கிறார்.

தேசப்பற்றாளனாக... கவிஞனாக... தர்மத்தின் வழியே நடப்பவனாக...நெஞ்சுறுதி மிக்கவனாக... கட்டுக்களிலிருந்து விடுபட்ட சுந்தந்திர மனிதனாக... வாழ்ந்தாலும், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்வில் வறுமையுடனும்... பற்றாக்குறையுடனும்...போராட வேண்டியிருந்தது.

இந்த போராட்டமிக்க 'இரண்டுவித வாழ்வின்' சூட்சுமம், அவரின் 'கர்ம வினைகளில்' அடங்கியிருக்கிறது... என்ற உண்மையை உணர்ந்ததால்தான், அவர் விரும்பிய வாழ்வின் வழியில் பயணிப்பதற்கு இடையூராக இருக்கும், அவரின் 'கர்ம வினைகளிலிருந்து' விடுவிக்குமாறு, இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்.

பாரதியாரின் வாழ்வின் நோக்கம், தர்மத்தின் வழியே இருந்ததால்தான், நெஞ்சுறுதிமிக்க அவரின் 'பிரார்த்தனையும்', ஒரு 'கட்டளையைப்' போல அமைந்திருக்கிறது. 

பாரதியாரின் வாழ்வு, ஒரு சித்தரின் வாழ்வுக்கு ஒப்பானது.

ஸாய்ராம்.



ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...