Friday, May 6, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 220. 'பாரதி உணர்த்தும் பாடம்...'


'தேடிச் சோறு நிதம் தின்று - பல

சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவம் எய்து - கொடுங்

கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?'

... என்ற 'பாரதியாரின்' வரிகளை சுட்டிக் காட்டாத 'பட்டிமன்றப் பேச்சாளர்களோ, 'ஊக்கத்தையளிக்கும்' பேசாளர்களோ, இருக்க முடியாது.

ஆனால் பாரதியின் இந்த வரிகள், சமுதாயத்தை நோக்கியது அல்ல... என்ற உண்மை... இந்தப் பாடலின் முழுமையையும் அறியும் போதுதான் புரிதலுக்கு வரும். 

இந்தப் பாடலை, பாரதியார்,

'நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை

நேரே இன்றெனக்குத் தருவாய் - எந்தன்

முன்னைத் தீயவினை பயன்கள் - இன்னும்

மூளாது அழிந்திடுதல் வேண்டும் - இனி

என்னைப் புதிய உயிராக்கி - எனக்கு

ஏதும் கவலையறச் செய்து - மதி

தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்

சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்'

... என்று முடிக்கிறார்.

தேசப்பற்றாளனாக... கவிஞனாக... தர்மத்தின் வழியே நடப்பவனாக...நெஞ்சுறுதி மிக்கவனாக... கட்டுக்களிலிருந்து விடுபட்ட சுந்தந்திர மனிதனாக... வாழ்ந்தாலும், அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்வில் வறுமையுடனும்... பற்றாக்குறையுடனும்...போராட வேண்டியிருந்தது.

இந்த போராட்டமிக்க 'இரண்டுவித வாழ்வின்' சூட்சுமம், அவரின் 'கர்ம வினைகளில்' அடங்கியிருக்கிறது... என்ற உண்மையை உணர்ந்ததால்தான், அவர் விரும்பிய வாழ்வின் வழியில் பயணிப்பதற்கு இடையூராக இருக்கும், அவரின் 'கர்ம வினைகளிலிருந்து' விடுவிக்குமாறு, இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்.

பாரதியாரின் வாழ்வின் நோக்கம், தர்மத்தின் வழியே இருந்ததால்தான், நெஞ்சுறுதிமிக்க அவரின் 'பிரார்த்தனையும்', ஒரு 'கட்டளையைப்' போல அமைந்திருக்கிறது. 

பாரதியாரின் வாழ்வு, ஒரு சித்தரின் வாழ்வுக்கு ஒப்பானது.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...