Tuesday, May 31, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 224. 'இராசியின் அமைப்பு உணர்த்தும் சூட்சுமம்...' பாகம் - 3.


கிரகங்களின், ஆட்சி... உச்சம்... நீசம்... போன்ற நிலைகளின் வழியாக எண்ணற்ற சூட்சுமங்களை அளிக்கிறது, இராசியின் கட்டமைப்பு.

உதாரணமாக... ஒரு மனிதனின் உலக வாழ்வு, பிரம்மச்சர்யம்... இல்வாழ்வு... வானப்பிரஸ்தம்... சந்யாசம்... என நான்கு பகுதிகளாகப் பகுக்கப்படுகிறது.

பால்யப் பருவத்திலிருந்து, கல்வி கற்று, வாழ்வின் கடமைகளை ஆரம்பிக்கும் இளமைக் காலத்தை, 'பிரம்மச்சர்யம்' என்றும்... வாழ்க்கைத் துணையை அடைந்து, இல்வாழ்வின் தர்மத்தின் வழியே கடந்து போகும் காலத்தை, 'இல்வாழ்வு' எனவும்... இல்வாழ்வின் கடமைகளைப் பூர்த்தி செய்து துணைவருடன் ஒரு துறவு வாழ்க்கையை மேற்கொள்வதை, 'வானப்பிரஸ்தம்' என்றும்... துணையையும் துறந்த பற்றற்ற நிலை வாழ்வை, 'சந்யாசம்' என்றும்... பகுத்துக் கூறலாம்.

பிரம்மச்சாரியாக வாழும் காலத்தில், நமக்கு அமைந்திருக்கும் சூழலை, நமது பூர்வம் மட்டுமே தீர்மானிக்கிறது. அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குக் கற்றுக் கொள்கிறோம். தாய், தந்தை உட்பட்ட உறவுகள்... சுற்றம்... சூழல்கள்... என எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. நமக்கு அமைந்திருக்கும் வாழ்வை, அவ்வாறே ஏற்றுக் கொள்கிறோம். நமக்கென தீர்மானிக்கும் வாய்ப்புகள் இல்லாது போகிறது.

இதைத்தான், 'கால புருஷ இராசியின்', இராசியதிபதியாகிய 'மேஷ இராசியில்', கிரகங்கள் பெற்றிருக்கிற ஆட்சி... உச்சம்... நீச நிலைகள்... உணர்த்துகின்றன. 

இந்த பிறவிக்கு மூலமாக இருக்கிற 'பரமாத்ப சொரூபத்தின்' அம்சமாகிய 'சூரிய பகவான்' உச்ச நிலையில் இருப்பதும்... அந்த சொரூபத்தின் 'ஆற்றலை' வெளிப்படுத்துகிற 'ஜீவனாகிய' ஜீவாத்மாவை பிரதிபலிக்கிற 'செவ்வாய் பகவான்' ஆட்சி நிலையில் இருப்பதும்... அந்த ஜீவாத்மா, இன்னும் தனது உலக வாழ்வு என்ற 'பூர்வ பாப புண்ணிய கர்ம வினைகளை' அனுபவிக்க ஆரம்பிக்க வில்லை என்பதை, ஜீவனின் 'ஆயுள் காலத்தை' வெளிப்படுத்துகிற 'ஆய்ள்காரகரான', 'சனி பகவான்' நீச நிலையில் இருப்பதும்... வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

படிப்படியாகத் தனது 'கர்ம வினைகளின்' வழியே பயணிக்கும் ஜீவன், கல்வி (2 ஆம் பாவம்), வெளி உலகத் தொடர்புகள் (3ஆம் பாவம்), சுகங்கள் (4 ஆம் பாவம்), சேர்த்து வைத்தல் (5 ஆம் பாவம்), இவற்றைக் கடக்கும் போது தான் பெறும் அனுபவங்கள் (6 ஆம் பாவம்) என ஒவ்வொன்றாகக் கடந்து, முதல் முறையாக தன்னை ஒரு உறவுடன் பந்தப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் (7 ஆம் பாவம்) பெறுகிறது. 

இதுதான், அந்த ஜீவன் தன்னை 'பிரம்மச்சர்யத்திலிருந்து' விடுவித்துக் கொள்ளும் 'காலமாக' அமைகிறது. ஜீவனுக்கு இரண்டு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஒன்று 'இல்வாழ்வு தர்மம்'... மற்றொன்று சந்யாச தர்மம்'.

'இல்வாழ்க்கையை' மேற்கொண்டு, கடமைகளைப் பூரணமாக்கி, 'வாணப்பிரஸ்தத்தின்' வழியே 'இறைவனை' (முக்தியை) அடைந்து விடலாம். அல்லது, நேரடியாக 'சந்யாச தர்மத்தின்' வழியில், இறைவனை (முக்தியை) அடைந்து விடலாம்.

இந்தக் கலிகாலத்தில், இல்வாழ்க்கை தர்மத்தை அனுசரிப்பதற்காக, அதைத் தேர்ந்தெடுக்கும் ஜீவர்களாகிய நாம், இல்வாழ்வை 'தர்மத்துடன்' அனுசரிப்பதை மறந்து, இல்வாழ்க்கை சுகங்களில்' மூழ்கிப் போய், வானப்பிரஸ்த வாழ்வின் வழியே இறைவனை அடைவதை மறந்து விடுகிறோம். அதனால், மீண்டும் மீண்டும் பிறவிகள அடைந்து, 'பிறவிப் பெரும் பிணியில்' சிக்கித் தவிக்கிறோம்.

இந்த நிலையைத்தான், 'கால புருஷ இராசியின்', 7 ஆமிட கிரக 'ஆட்சி... உச்ச... நீச... நிலைகள்' நமக்கு உணர்த்துகின்றன. இல்வாழ்வை நாம் எதிர்கொண்டு சுகங்களின் மூழ்கிப் போவதை, 'சுக்கிர பகவானின் ஆட்சி நிலையும்... அதனால் நாம் அனுபவிக்கும் இன்ப - துன்ப நிலைகளுக்கான கால நிர்ணயத்தை 'சனி பகவானின்' உச்ச நிலையும்... இந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும் நாம், நமக்கு உள்ளிருந்து அருளும் பரமாத்ம சொரூபத்தை (ஆத்மா) மறந்து போவதை, 'சூரிய பகவானின்' நீச நிலையும்' நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

ஸாய்ராம்.

                               


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...