Saturday, May 7, 2022

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'அன்னைக்கு சமர்ப்பணம்...'


 

அம்மா... அந்த சொல்லுக்குள்தான் எத்தனை கருணை !

எனது தாயார், ஆங்கிலேயர்கள் நிர்வகித்த தோட்டத்தில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்தார். தந்தை, அருகிலிருக்கும் சிறிய கடை வீதியில் பங்குதாரர்களுடன் இணைந்து, சிறிய தொழில் ஒன்றை நடத்தி வந்தார்.

பங்குதாரர்களின் நெருக்கடியால், தான் மிகவும் கடினமாக உருவாக்கிய தொழிலை, அவர்களிடமே விட்டு விட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட தந்தை, ஓரு நாள் அனைத்தையும் இழந்து... மனவாட்டத்துடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு, தோட்ட வேலை... வீட்டு வேலை... குழந்தைகள் பராமரிப்பு... என அனைத்தையும் பார்த்துக் கொண்ட தாயார், மனம் வெதும்பி, விடு திரும்பி, நடந்தவை எதையுமே சொல்லாமல் படுக்கையில் புரண்ட தந்தையிடம் பரிவாக அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 'கவலை வேண்டாம். தைரியமாக இருங்கள். எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார்.

'நான் இருக்கிறேன். கவலைப்பதாதே !' என்ற இந்த உயரிய மொழிகளை, தாயால் அன்றி வேறு எவராலும் கூற முடியாது ! விடிந்த்தும், வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு, தந்தையைக் கவனிப்பது, என்று அனைத்தையும் முடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பினார் தாயார்.

மாலை வீடு திரும்பி, மாலைக் கடமைகளை அனைத்தையும் பூரணமாக்கி, குழந்தைகள் தூங்கிய பின், சுவாமி மடியிலிருந்து ஒரு பையைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தார் அம்மா. பிரித்துப் பார்த்த தந்தையின் கண்கள் குளமாயின. காரணம் அதில் கத்தையாக ரூ. 6,750 / - ( 1950 களில் இந்தத் தொகை மிகப் பெரியது. அன்று தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 40 ரூபாய்தான்) இருந்தது.

கண்களில் நன்றியுடனும்... மனதில் கேள்வியுடனும்.. இருந்த தந்தைக்கு, தாயார், ' எனது வருங்கால வைப்பு நிதித் தொகுப்பிலிருந்து பெற்ற தொகைதான்... இது' என்று கூறிய போது, அவரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை பின்னால்தான் என்னால் ஊகிக்க முடிந்தது.

காலம் கடந்தது... தொழிலில் முன்னேறிய என் தந்தை, முதலில் செய்தது, சொந்தமாக தொழில் ஸ்தாபனத்துடன் கூடிய வீடு ஒன்றைக் கட்டி, எனது தாயாரை வேலையிலிருந்து விடுவித்து, அவரை வீட்டில் கொண்டு வந்து அமர வைத்ததுதான். அதற்குப் பின், வாழ்நாளின் இறுதிவரை, என் தாயார் ஒரு குடும்பத் தலைவியாகவே வாழ்ந்தார், 

என் தந்த்தையாரின் வாழ்க்கை மாற்றத்திற்குப் பின் பிறந்த ஆறு குழந்தைகளில்...  நான்தான் கடைக்குட்டி.

'அன்னையைப் போல ஒரு தெய்வம் இல்லை... அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை... மண்ணில் மனிதரில்லை...'

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...