Monday, March 29, 2021

'தூர விலக்காத துவித விருத்தி'


பகவான், எப்போதும் 'துவிதம்' என்ற மனதின், 'உலக விருத்திக்கு' வித்திடும் எண்ணங்களை ஊக்குவிப்பதில்லை மனதின் மூலத்தை நோக்கிய 'நான் யார்...?' என்ற விசாரத்தைத்தான் ஊக்குவிப்பார்.

ஆனால், அவர் ஊக்குவித்த ஒரே 'துவித விருத்தி', 'கிரி உருவமாக' இருக்கும் 'அருணாச்சலம் என்ற அண்ணாமலையாரை' சுற்றி வருவதைத்தான். இந்த 'துவிதம்' என்ற, உலக விருத்தியை அவர் ஆதரித்தது மட்டுமல்ல... அவரும் அதைக் கடைப் பிடித்து, கிரமமாக கிரி வலம் செய்துவந்தார்.

பகவானின் இந்த உள்ளுணர்வைத்தான், பகவானுடனேயே இருந்த 'சாது ஓம் சுவாமிகள்'... தனது 'ரமண வழி' என்ற 'சாதனை சாரத்தில்'... 'ஸ்ரீ அருணாசலப் பிரதக்ஷிண மாண்பு' என்ற தலைப்பின் கீழ் வரும் 455 ஆவது பாடலில் குறிப்பிடுகிறார்.

'துவித விருத்தியினாற் றூர வகற்றும்

விவிதகரு மங்களினும் வேறாய் - சவிதாவைத்

தூரவில காத துவித விருத்திவலஞ்

சேர வருவதிதைச் செய்.'

பொழிப்புரை : 'விதவிதமான எந்தக் கருமமும் மனதின் துவித விருத்தியே. அதனால், எந்தக் கருமம் செய்தாலும் அது ஒருவனை அவனின் ஆன்ம மத்தியிலிருந்து மேலும், மேலும் தூரத்திலேயே அகற்றி வைக்கும். ஆனால், இதற்கு ஒரு விதி விலக்கு ஒன்று உண்டு. அதாவது, ஞான சூரியனாகிய அருணாச்சலத்தை விட்டுத் தூர விலகிச் செல்லாதபடி, இந்த அருணாச்சலத்தை பிரதக்ஷிணம் செய்வதுதான்

ஸ்ரீ ரமணாய நமஹ.

ஸாய்ராம்.


Wednesday, March 24, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 170. 'அந்தரம் செய்த அற்புதம்'


ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் அமைவுகள்... ஜீவனின் 'கர்ம வினைகளைத்தான்' வெளிப்படுத்துகின்றன. 

ஒவ்வொரு ஜீவனும், தனது 'புண்ணியம் - பாவம்' என்ற இரண்டு சமவிகித கலவைகளைக் கொண்ட 'பூர்வ கர்ம வினைகளைத்தான்' சுமந்து கொண்டு வந்திருக்கின்றன. ஆதலால்தான், ஒவ்வொருவர் வாழ்விலும், இன்பமும்... துன்பமும்... மாறி, மாறி வந்து கொண்டே இருக்கின்றன.

இன்பத்தை அனுபவிக்கும் போது, ஒரு துன்ப நிலை நிகழ்வதும்... துன்ப நிலையில் தவிக்கும் போது, மனதிற்கு இதமாக, ஒரு இன்ப சூழல் ஏற்படுவதும்... அனைவரும் அனுபவிக்கும் அனுபவம்தான்.

இவ்வாறுதான், 30 வயதைக் கடந்து கொண்டிருந்த 'மீன லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 'சூரிய பகவானது' தசாக் காலம்... 25 ஆவது வயதிலிருந்து நடந்து கொண்டிருந்தது. 6 ஆம் பாவாதிபதியான, 'சூரிய பகவானின்' தசாக் காலம், ஜாதகரை ஒரு இறுக்கமான சூழலில் கட்டிப் போட்டு வைத்தது.

சேரக் கூடாத நண்பர்களின் சேர்க்கை, அவரை, கிடைக்கும் வழிகளிலெல்லாம், நுட்பமாக சட்டத்தை வளைத்து, அதன் ஓட்டைகளின் வழியே பொருள் சேர்க்கும் கூட்டத்தில் கொண்டு சேர்த்தது. அவரின் வாழ்வில், 'சூரிய பகவானின் தசாவில் - இறுதிப் புத்தியான, 3 மற்றும் 8 க்குறிய, சுக்கிர பகவானின் புத்தியில் - 'லக்னாதிபதியான குரு பகவானின் அந்தரம்' நடந்து கொண்டிருந்த வேளை.

இறைவனின் அருளால், அவர் தக்க ஜோதிட ஆலோசனையின் பேரில்... 'சுக்கிர பகவானின்' அதி தேவதையான, 'ஸ்ரீ ரெங்கநாத பகவானின்' திருவடி தரிசனத்தையும்... 'குரு தக்ஷ்ணமுர்த்தி பகவானின்' திருவடியிலும்... பூரண சரணாகதியடைந்தார்.

ஒரு வியாழன்று, அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில், காவல் துறையினரின், அதிரடி சோதனையில், அந்தத் தகாத தொழில் துறையில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சோதனை நேரத்தில், இவர், 'குரு தக்ஷ்ணாமுர்த்தி பகவானை', திருவிளக்கு ஏற்றி வழி பட்டுக் கொண்டிருந்தார்.

விடுதிக்குத் திரும்பி வந்த போது, மேலாளரிடமிருந்து, நடந்தவைகள் யாவற்றையும் அறிந்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தன்னை இந்தத் துன்பத்திலிருந்து விடுவித்த இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு, அந்த விடுதியை விட்டு விலகி, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தொடர்ந்த, பூர்வ புண்ணியாதிபதியான 'சந்திர பகவான்' தசா, அவரை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தது. 10 வருட உழைப்பு, அவரையும், அவரது குடும்பத்தையும் உயர்த்தியது. தற்போது நடக்கும்' செவ்வாய் பகவான்' தசாவில், நாடு திரும்பி, ஒரு உணவு விடுதியை ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் வித்திட்டது... 'சூரிய பகவானின்' தசாவில், 'சுக்கிர பகவானின்' புத்தியில் நடந்த 'குரு பகவானின்' அந்தரக் காலம்தான்.

ஆம், நமது கர்ம வினைகளின், புண்ணிய பலன்... ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தால் போதும்... எவ்வளவு துன்ப நிலையில் நாம் தவித்திருக்கும் போதும்... இறைவனின் அருளால், உடனே வெளிப்பட்டு நம்மைக் காத்து விடும். தேவை, நம்பிக்கையும்... பொறுமையும்தான்.

ஸாய்ராம்.


Monday, March 22, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 169. 'செவ்வாய் தோஷம்'


 'செவ்வாய் தோஷம்' ... வரன்களை இணைப்பதில் பெரும் பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையில், இவ்வாறான எந்த 'தோஷங்களையும்', ஜோதிடக் கலையின் விதிகள் வகுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

~ செவ்வாய் பகவான்', ஆற்றலில் நாயகராக இருப்பவர். நவக்கிரகங்களில், 'சூரிய பகவானுக்கு' நிகராகக் கருதப் படுபவர். 

~ 'சூரிய பகவானை'... ஆத்மக் காரகராகவும், 'சந்திர பகவானை'... ஜீவனின் மனதைக் குறிக்கும் மனோகாரகராவும், வகுக்கும் ஜோதிடக் கலை, 'செவ்வாய் பகவானை'... 'ஆத்மாவின்' வெளிப்பாடான 'ஆற்றலுக்கு காரகராக' வகுக்கிறது. 

~ அதனால்தான், 'சிவபெருமானாரின்' நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட 'குழந்தையான'... 'முருகப் பெருமானாரை', 'செவ்வாய் பகவானின்' அதி தேவதையாக வகுத்திருக்கிறது ஜோதிடக் கலை.

~ 'சூரிய பகவான்' வலுக் குறைந்து காணப்படும் ஜாதகத்தில், பெரும்பாலும் 'செவ்வாய் பகவானின்' வலிமை கூடியிருப்பதைக் காணலாம்.

'செவ்வாய் பகவானை' அணுகும் பொது, அவரின் 'ஆதிபத்தியத்தை' மூலமாகக் கொண்டுதான் அணுக வேண்டும். அதுதான் முறையான அணுகுமுறையாக இருக்கும்.

உதாரணமாக 'செவ்வாய் பகவானின்' இரண்டு முரண்பட்ட 'ஆதிபத்திய அமைவுகளை' ஆய்ந்து பார்க்கலாம்.

1. 'கடக லக்னத்தில் 'பிறந்த ஒரு ஜாதகரின் 7 ஆம் பாவமான 'மகர இராசியில்' 'செவ்வாய் பகவான்' அமர்கிறார் என்று கொண்டால்...

* 'கடக லகனத்திற்கு' ஒரு திரிகோணத்திற்கும் (5 ஆம் பாவம்)... ஒரு கேந்திரத்திற்கும் (10 ஆம் பாவம்) அதிபதியாகிற 'செவ்வாய் பகவான்'... சுப ஆதிபத்தியங்களுக்கு அதிபதியாகிறார்.

* அவர் 7 ஆம் பாவத்தில் அமர்ந்து, கேந்திரத்தின் உச்சமான 10 ஆம் வீடான ஜீவன பாவத்தை...தனது 4 ஆம் பார்வையாலும், திரிகோணத்தில் முதல் வீடான லக்ன பாவத்தை... தனது 7 ஆம் பார்வையாலும், தன-குடும்ப-வாக்கு ஸ்தானமான 2 ஆம் பாவத்தை... தனது 8 அம் பார்வையாலும், பார்த்து அருள்கிறார்.

* அவரின் 7 ஆம் பாவ அமைவினால்... இந்த ஜாதகருக்கு அமையும் வரன், தனது பூர்வ இடத்துடன் தொடர்புடையவராகவும்... தனது வாழ்வின் கடமைகள் முழுவதிலும் முழுமையாக பங்கேற்பவராகவும்... சிறந்த இல்வாழ்வின் துணைவராகவும் அமைவார்.

2. 'துலா லகனத்தில்'  பிறந்த ஒரு ஜாதகரின் 7 ஆம் பாவமான, 'மேஷ இராசியில்' அமர்கிறார் என்று கொண்டால்...

* 'தனம்-குடும்பம்-வாக்கு' என்ற 2 ஆம் பாவத்திற்கும், 'களத்திரம் என்ற வாழ்க்கைத் துணை- நட்பு' என்ற 7 ஆம் பாவத்திற்கும், ஆதிபத்தியம் வகிக்கிறார் 'செவ்வாய் பகவான்'.

* பொதுவாகவே, அனைத்து லகனத்திற்கும் 2 ஆம் பாவம் 'மாரக ஸ்தானமாகிறது'.

* அதுவும், 'சர லகனமான'... 'துலா லக்னத்திற்கு', 2 ஆம் பாவமும்... 7 ஆம் பாவமும்... ';இரு மாரக ஸ்தானங்களாக' அமைகிறது.

* இரு மாரக ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற 'செவ்வாய் பகவான்'... 7 ஆம் பாவமான 'இணை மற்றும் துணை' ஸ்தானத்தில் அமர்கிறார்.

* அவரின் இந்த ஆதிபத்திய அமைவினால்... ஜாதகர், தனக்கு அமையும் இல்வாழ்வுத் துணைவரின் ஒத்துழைப்பை, தான் பிறந்த குடும்ப கடமைகளில் எதிர்பார்க்க முடியாமல் போகிறது. தனது குடும்பத்திற்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளில், தனது துணைவரின் தலையீடுகளினால்... பெரும் மன வேதனையை அடைய வேண்டியிருக்கும். இந்த வேதனையால், பிறந்த குடும்பத்திலும்... தனக்கு அமைந்த இல் வாழ்விலும்... நிம்மதியற்று வாழ வேண்டிய சூழலும் ஏற்படும்.

மேற்கண்ட இரண்டு அமைவுகளும் உணர்த்துவது... ஒன்றைத்தான். 'செவ்வாய் பகவானின்' ஆதிபத்திய அமைவுகளின் அடிப்படையில்தான் நிகழ்வுகள் நிகழ்கின்றதேயன்றி... அவரின் அமைவினால் ஏற்பட்ட 'தோஷத்தினாலல்ல'.

ஸாய்ராம்.



Thursday, March 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 168. 'சனி பகவான்'. பகுதி - 4.


 'சனி பகவான்' வலிமை மிகுந்து அமைந்திருக்கும் ஜாதகங்களின் இரண்டாவது வகை...

2. 'சனி பகவான்'... 'ஆட்சி' மற்றும் 'உச்ச பலம்' பெற்ற அமைவைப் பெற்ற... 'சனி பகவானுடன்' பகை பெற்ற இராசிகளான 'மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக இராசிகள்', 'லக்னமாக' அமையும் பட்சத்தில், 'சனி பகவானின்' தசாக் காலம் நடைபெறும் போது, பெரும்பாலும், சற்று கடினமான காலமாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறு அமையும் போது ஏற்படும் விளைவுகளையும்... அதிலிருந்து மீளும் உபாயங்களையும்... உதாரணத்துடன் ஆய்வோம்.

உதாரணமாக...

'கடக லக்ன' ஜாதகருக்கு, 8 ஆம் பாவமான, ஆயுள் பாவத்தில், ஆயுள் ஸ்தானாதிபதியாகிய 'சனி பகவான்' ஆட்சி பலம் பெற்று அமைந்து... அவரின் 19 வருட 'தசாக் காலம்'... 'இளமைக் காலமாக' அமைந்தாலும்... 'மத்திமக் காலமாக'மைந்தாலும்... சற்றுக் கடினமான சூழல்களை எதிர் கொண்டு... போராடித்தான், வாழ்வைக் கடக்க வேண்டியிருக்கும்.

* வாழ்வின் ஒவ்வொரு கடமையையும், போராடித்தான் கடக்க வேண்டியிருக்கும். அந்த போராட்டம் இறுதியில் வெற்றியையும் அளிக்கும். ஆனால் இந்தத் 'தொடர் போராட்டம்'... ஜாதகருக்கு பெரும் அயர்வைக் கொடுக்கும். இறுதியாக கிடைக்கும் வெற்றியை, கொண்டாடி மகிழ முடியாத சூழல் ஏற்படும்.

* தான் எவ்வளவு தகுதி பெற்றிருந்தாலும்... அந்தத் தகுதிக்கு ஏற்ற துறைகள் அமையாத சூழலும்... அவ்வாறு அமைந்தாலும், அதிலும் மிகத் தாழ்வான நிலையிலிருந்து கடினமாக உழைத்து முன்னேறித்தான்... உயர் ஸ்தானத்தை அடையக் கூடிய சூழலும்... எப்போதும் 'கட்டுண்டு இருப்பதாகவே' எண்ணும் சூழலும்... அமைந்து விடும்.

* தான், தர்மத்துடனும்... நியாயத்துடனும்... நேர்மையுடனும்... நடந்து கொண்டாலும், தனது வார்த்தைகளும்... நிலைப் பாடுகளும்... தனது பொருளாதரச் சூழலைக் காரணம் காட்டி... சம்பந்தப் பட்டவர்களால், புறம் தள்ளப் படும் நிலை உருவாகும்.

...இந்த சூழல்களை எதிர் கொள்ளவும்... இதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியுடன் கடந்து போவதற்கும்... சில, ஜோதிட ரீதியான  உபாயங்களைக் கையாளாலாம்.

# 'கடக லக்னத்திற்கு' மிகவும் யோகத்தை அளிக்கக் கூடியவர்களாக லக்னாதிபதியான 'சந்திர பகவானும்'... பூர்வம் மற்றும் ஜீவனத்திற்கு அதிபதியான 'செவ்வாய் பகவானும்'...பாக்கியத்திற்கு அதிபதியான 'குரு பகவானும்' அமைகிறார்கள்.

# தான் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும், சுபக்கிரகங்களின் தலைமையில் முன்னனியாக இருக்கும் 'குரு பகவானுக்கு' உகந்த 'வியாழக் கிழமைகளில்' மேற்கொள்வது உத்தமமாக இருக்கும்.

# இந்த மூவரில்... 'கடக லக்னத்திற்கு' மிகவும் யோகாதிபதியாகக் கருதப் படுபவர்... 'செவ்வாய் பகவான்' ஆவார். ஆகவே, ஆற்றல் காரகரான... 'செவ்வாய் பகவானின்' ஆளுமைக்குண்டான, 'எண் கணித எண்ணான' 9 ல்... தனது பெயரின் கூட்டு எண் அமையுமாறு அமைத்துக் கொள்வதும் உத்தமமாக இருக்கும்.

# சனிக் கிழமைகளிலோ... திகதிகளில் 8, 17 மற்றும் 26 வரும் நாட்களிலோ... திகதி-மாதம்-வருடம் கூட்டி வரும் எண், 8 ஆக வரும் நாட்களிலோ... முக்கிய பணிகளைத் தவிர்ப்பது நலம் தரும்.

# பூர்வ புண்ணியங்களை அள்ளித் தரும் 'செவ்வாய் பகவானின்' அதி தேவைதாயான 'முருகக் கடவுளையும்'...பொறுமையையும், ஞானத்தையும் அளிக்கும் 'குரு தக்ஷணாமுர்த்தி பகவானையும்'...வழிபடுவது, 'சனி பகவானின்' 19 வருடங்களை, மிக எளிதாகக் கடந்து போவதற்கான வல்லமையைத் தந்து விடும்.

'சனி பகவான்' அஞ்சி நடுங்கக் கூடியவரல்ல. நடுவு நிலையில் நின்று ஆயுளையும்... அதில் அடங்கியிருக்கும் கர்ம வினைகளையும்.. பரிபாலனம் செய்யும் கடமை தவறாத அருளாளர். இதை உணர்ந்து கொள்ளும் போது... அவரின் ஜாதக அமைவு 'நட்பாக' இருந்தாலும்... 'நட்பு இல்லாத' நிலையாக இருந்தாலும்... நிம்மதியாகவும், பூரணமாகவும்... கடந்து செல்லாம்.

பொதுவாகவே, 'சனி பகவானின்' தசாவைக் கடந்தவர்கள் அனைவரும், 'பெரும் அனுபவங்களைச்' சுமந்து கொண்டிருப்பார்கள். அந்த அனுபவங்கள், அவரவர்களின் 'தேர்ந்தெடுப்புகளுக்கு' ஏற்பவே அமைந்திருக்கும்.

ஸாய்ராம்.



Wednesday, March 10, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 167. 'சனி பகவான்'. பகுதி - 3.

'சனி பகவான்', வலிமை மிகுந்து அமைந்திருக்கும் ஜாதகங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்...

1. 'சனி பகவான்' ஆட்சி பெற்றிருக்கும், 'மகரம்' மற்றும் 'கும்ப இராசிகளும்'... நட்பு இராசிகளான 'ரிஷபம், மிதுனம், கன்னி, துலா இராசிகளும்'... 'சம நட்பு' மிக்க 'தனுர் மற்றும் மீன இராசிகளும்'... 'சனி பகவானுக்கு' மிக உகந்த வீடுகளாக அமைகிறது.

இவற்றில் 'சனி பகவான்' அமர்ந்து, அவரின் தசா நடக்கும் போது, பெரும்பாலும் நன்மையான பலன்களை... அதாவது அந்த ஜாதகத்தில், அவரமரும் ஆதிபத்தியத்திற்கு ஏற்ப, ஜாதகரின் புண்ணிய பலன்களை அளிக்கத் தவறுவதில்லை.

உதாரணமாக...

'கும்ப லக்ன' ஜாதகருக்கு, லாப ஸ்தானமான 11 ஆம் பாவத்தில், 'பூராடம் 2 மற்றும் 3 ஆம் பாதத்தில்', 'சனி பகவான்' அமர்ந்து... அவரது தசா நடக்கும் காலம்... 'குரு பகவானின்' சுபத்துவத்திற்கு ஏற்ப...

* ஜாதகரின் உழைப்பு அனைத்தும்... சிதறாமல், பெரும் பயன்களை அளிக்கக் கூடியதாக அமையும்.

* ஜாதகரின் வயதிற்கு ஏற்ப, அவரது கடமைகள் அனைத்தும், பூரணமாக நிறைவேற்றப் படும் 

* அவரின் பூர்வ சொத்துக்களில், இவரின் உழைப்பும் சேர்ந்து, அவை பல் மடங்காகப் பெருகுவதுடன்...இவரின் தலை முறைகளும் அனுபவிக்கக் கூடிய வகையில் 'அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்' சேரும் வாய்ப்புகள் கூடி வரும்.

* தன்னோடு சேர்ந்து பணியாற்றும் அனைவருடனும் ஒத்திசைவுடன், இசைந்து பயணித்து, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றங்களில் அக்கரை செலுத்துபவராக அமைவார்.

# அவர்கள் கடை பிடிக்க வேண்டியவைகள் :

  ~ தனது செயல்களை 'தர்மத்துடனும் - நியாயத்துடனும் - நேர்மையுடனும், எதிர் கொள்வது முக்கியம்.

 ~ தான் மேற்கொள்ளும் செயல்களை, 'வெள்ளிக் கிழமைகளிலும்'... 'புதன் கிழமைகளிலும்'...5 மற்றும் 6 ஆம் தேதிகளிலும்... 'சுக்கிர, புத ஹோரைகளிலும்'... மேற்கொள்ளும் போது, வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.

~ தனது பெயரை, 'எண் கணித முறையில்'... கூட்டு எண்கள் 5 மற்றும் 6 வருமாறு, மாற்றிக் கொள்ளும் போது, இன்னும் பலன்களில் மேம்பாடு ஏற்பட வாய்ப்புகள் கூடி வரும்.

 ~ வழிபாடுகளைப் பொருத்தவரை... 'சனி பகவானுக்கு' உரிய அதி தேவதையாக 'ஸ்ரீநிவாஸப் பெருமாள்' அமைகிறார். அவரை 'சனிக் கிழமை' தோறும், ஈடுபாட்டுடன் வழிபட்டு வர,அவரின் கருணை பெருகி... ஜாதகரின் வாழ்வு வளம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்ந்து... 'சனி பகவான்' வலிமை இழந்து இருக்கும் போது, ஏற்படும் அமைவையும்... அவற்றின் விளைவுகளையும்... அவற்றிலிருந்து மீள்வதற்கான உபாயங்களையும், ஆய்வோம்...ஈஸ்வரனின் அருளோடு.

ஸாய்ராம்.


Tuesday, March 9, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 166. 'சனி பகவான்'. பகுதி - 2.

'சனி பகவான்'... ஆயுள் காரகராக ஒவ்வொரு ஜீவனையும், தனது கட்டுக்குள் வைத்திருப்பதை அறிவோம்.

அது மட்டுமல்ல... ஜீவர்களின் 'ஜாதக அமைவிலும்', தன்னுடைய ஆளுமையை அவர் செலுத்தத் தவறுவதில்லை. 

* 'மகர இராசியிலும்'... 'கும்ப இராசியிலும்'... தனது 'ஆட்சி' என்ற ஆளுமையை செலுத்தும் 'சனி பகவான்', 'துலா இராசியில்' தனது 'உச்ச' பலத்தை நிலை நிறுத்தி... 'மேஷ இராசியில்' தனது பலத்தை இழந்து 'நீச' நிலையில் சஞ்சரிக்கிறார்.

* கிரகங்களில், 'சுக்கிர பகவானுடனும்'... 'புத பகவானுடனும்' நிறைந்த நட்பு பாராட்டுபவராக இருக்கும் 'சனி பகவான்'... 'மகரம்', 'கும்பம்' என்ற 'ஆட்சி வீடுகளில்' மட்டுமல்ல... 'சுக்கிர பகவான்' ஆட்சி செய்யும் 'ரிஷபம்', 'துலாம்' வீடுகளிலும்... 'புத பகவான்' ஆட்சி செய்யும் 'மிதுனம்', 'கன்னி' வீடுகளிலும்... தனது ஸ்தான பலத்தை வலுப்படுத்திக் கொள்கிறார்.

* 'சந்திர பகவானுடனும்'... 'சூரிய பகவானுடனும்'... 'செவ்வாய் பகவானுடனும்'... 'எதிர் நிலைகள் என்ற 'பகை' பாராட்டும் கிரகமாக இருக்கும்... 'சனி பகவான்', 'குரு பகவானுடன்' சம நிலையில் 'நட்பு' பாராட்டுகிறார்.

ஆதலால்,  'சந்திர பகவான்' ஆட்சி செய்யும் 'கடக இராசியிலும்'... 'சூரிய பகவான்' ஆட்சி செய்யும் 'சிம்ம இராசியிலும்'... 'செவ்வாய் பகவான்' ஆட்சி செய்யும் 'மேஷம்', 'விருச்சிகம்' இராசி வீடுகளிலும்... தனது 'எதிர் நிலைகள்' என்ற பகைமையைப் பாராட்டும் 'சனி பகவான்', 'குரு பகவான்' ஆட்சி செய்யும் 'தனுர்', 'மீன' இராசி வீடுகளில் 'சமம்' என்ற நட்பு நிலையை உறுதி செய்கிறார்.

* ஜீவனின் தசாக்களில் 19 வருடங்களையும்... அவரது பெயர்ச்சிகளில் 2 1/2 வருடங்களையும்... 'சூரிய பகவானின்' தசாவில், 11 மாதங்கள் 12 நாட்களையும்... 'சந்திர பகவானின்' தசாவில், 1 வருடம் 7 மாதங்களையும்... 'செவ்வாய் பகவானின்' தசாவில், 1 வருடம் 1 மாதம் 9 நாட்களையும்... 'ராகு பகவானின்' தசாவில், 2 வருடம் 10 மாதம் 6 நாட்களையும்... 'குரு பகவானின்' தசாவில்,2 வருடம் 6 மாதம் 12 நாட்களையும்.. 'புத பகவானின்' தசாவில், 2 வருடம் 8 மாதங்கள் 9 நாட்களையும்... 'கேது பகவானின்' தசாவில், 1 வருடம் 1 மாதம் 9 நாட்களையும்,... 'சுக்கிர பகவானின்' தசாவில், 3 வருடம் 2 மாதங்களையும்... 'சனி பகவான்' தனது, ஆளுமைக்குள் கொண்டு வந்து விடுகிறார்.

* கிழமைகளில் 'சனிக் கிழமையை' ஆளும் இவர்... நட்சத்திரங்களில், 'பூசம், அனுஷம் ,மற்றும் உத்திரட்டாதி' நட்சத்திரங்களை தன் வசமாக்கியிருக்கிறார். திதிகளில் 'அஷ்டமியை' ஆளும் இவர், திகதிகளில் 8, 17 மற்றும் 26 ஐயும்... தேதி, மாதம், வருடத்தை கூட்டி வரும் எண் 8 ஆக அமையும் போதும்... ஆங்கில எழுத்துக்களில் அமையும் பெயர்களின் 'எண் கணித முறை' எண்களின் கூட்டுத் தொகையில் 8 ஆம் எண்ணை ஆள்கிறார்.

... தொடர்ந்து, இந்த அமைவுகளின் பலங்களை வலுப்படுத்தவும்... பலவீனங்களில் இருந்து விடுபடவும்... தக்க உபாயங்களின் வழியே பயணிப்போம்... ஈஸ்வரனின் அனுக்கிரகத்தோடு...

ஸாய்ராம்.






ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 165. 'சனி பகவான்'. பகுதி - 1.


 

* நவக்கிரக நாயகர்களில், மேற்கு திசைக்கு அதிபதியாகி, ஈஸ்வரனின் அனுக்கிரகத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக... 'சனீஸ்வரர்' என்ற அருள் நாமத்தைப் பெற்றிருப்பவர்.

* ஒரு ஜீவனின் வாழ்வு நாட்கள் முழுவதிற்குமான, உரிமையைப் பெற்று... அந்த வாழ் நாட்கள் முழுவதுமாக... அந்த ஜீவன், தனது 'கர்ம வினைகளை', ஒவ்வொன்றாக அனுபவித்துக் கடந்து போவதை உறுதி செய்பவர்.

* ஜீவன், தனது 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, தான் 'மேற்கொள்ளும்' (Actions) அல்லது 'எதிர் கொள்ளும்' (Reactions)... 'செயல் பாடுகளையும்... அவை, விளைவிக்கும் விளைவுகளையும்... ஆய்ந்து, அதன் 'பாப - புண்ணியங்களை', ஜீவனின், 'கர்ம வினைத் தொகுப்பில்' கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்பவர்.

* 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுமந்து வந்திருக்கும்... 'ராகு பகவான', 'கர்ம வினைகளின் கட்டுகளிலிருந்து' விடுவிக்கும்... 'கேது பகவான்' உட்பட்ட 'நிழல் கிரகங்களையும்', ஜீவனின் உலக வாழ்வு மற்றும் உள் வாழ்வு நிலைகளை வெளிப்படுத்தும், 'சூரிய, சந்திர, செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சுக்கிர பகவான்களையும், 'ஆயுள்' என்ற தனது கட்டுக்குள் வைத்து... அவர்களை 'கர்ம வினைகள்' என்ற நூற்கள் கொண்டு இயக்கும், 'சூத்திரதாரியாக' இருப்பவர்.

* ஜீவனின், ஜாதகத்தின் ஒவ்வொரு பாவத்திலும்... 'இரண்டரை வருடங்களுக்குக் குறையாமல்' வீற்றிருந்து... அந்த பாவம் வெளிப்படுத்தும், 'கர்ம வினைகளின் விளைவுகளை' கண்கானித்து... 'தர்ம பரிபாலனம் செய்யும் 'தர்மவானாகத்' திகழ்பவர்.

* ஜீவன் தனது வாழ்வை, 'கர்மம்' என்ற 'இகலோக வாழ்வுக்கு' அர்ப்பணித்தாலும்... பக்தி என்ற 'உள் வாழ்விற்கு' அர்ப்பணித்தாலும்... ,ஞானம்' என்ற 'முக்திப் பாதைக்கு' அர்ப்பணித்தாலும்... அதன் முயற்சிக்கேற்ற புண்ணிய பலனை, ஜீவனின் 'கர்ம வினைத் தொகுப்பிலிருந்து அள்ளிக் கொடுக்கும் வள்ளலாகத் திகழ்பவர்.

* ஜீவன், தனது வாழ் நாட்கள் முழுவதுமாக, தனது 'கடமைகள்' என்ற 'விதிக்கப்பட்டவைகளிலிருந்து', விலகி விடாதபடி, கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.

* ஜீவன், தனது கடமையை, நேர்மையுடன் எதிர் கொண்டாலும்... நேர்மையற்று எதிர் கொண்டாலும்... அதை எதிர் கொள்ளும் வல்லமையை... தனது 3 ஆம் பார்வையால அருள்பவர்.

* ஜீவன், தான் கடமைகளை, மேற்கொள்ளும் நிலைகளுக்கு எற்ப... இந்த உலக வாழ்வில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமாக, ஜீவனுக்கு அந்த வல்லமையை... தனது 7 ஆம் பார்வையால் அருள்பவர்.

* ஜீவன், தனது 'விதிக்கப்பட்ட' கடமைகளிலும்... 'விதிக்கப்படாத' கடமைகளிலும்... எவ்வாறு  செயல்படுகிறார் என்பதை உறுதி செய்யும் வகையில்... ஜீவனுக்கு அந்த வாய்ப்புகளை நல்கும் வகையில்... தனது 10 ஆம் பார்வையால் பார்த்து அருள்புரிபவர்.

ஜோதிடக் கலையில், இத்துனை வல்லமை படைத்த 'சனீஸ்வர பகவான்', ஒரு ஜீவனின் ஜாதகத்தில் எவ்வாறெல்லாம் அமைகிறார் என்பதையும்... அவரின் அமைவுகள் உணர்த்தும் பலன்களையும்...அவர் வெளிப்படுத்தும் பலம் மற்றும் பலவீனங்களையும்... அவற்றை எவ்வாறு 'இறைவனின் அருள் கருணை' என்ற 'மதியால்' கடந்து வெற்றி பெறலாம்...என்பதையும் தொடர்ந்து ஆய்வோம்.

ஸாய்ராம்.


Friday, March 5, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 164. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள். உதாரணங்களுடன்... பகுதி - 5.


 இராசியில், ஆட்சி பெற்று அமைந்திருக்கிற 7 கிரகங்களின் இராசி வீடுகளை அடிப்படையாகக் கொண்டு...அவற்றை இரு அணிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மீன இராசி வீடுகளை ஒரு அணியாகவும்...

2. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப இராசி வீடுகளை ஒரு அணியாகவும்...

... பிரித்துக் கொள்ளலாம்.

முதல் அணியில், 'சூரிய பகவானை' முன்னிருத்தி, 'செவ்வாய், குரு பகவான்களின்', தசா - புத்தி - அந்தரங்கங்கள்... முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. அது போல, 'சந்திர பகவானை' முன்னிருத்தி, 'செவ்வாய், குரு பகவான்களின்', தசா - புத்தி - அந்தரங்கங்கள்... முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

ஜாதகத்தில், இந்த கிரகங்களின் அமைவுகள் எவ்வகையாக அமைந்திருந்தாலும், அவற்றிற்கு இடையேயான 'தசா - புத்தி - அந்தரங்கள்', ஜாதகரின் வாழ்வில், ஒரு ஏற்றத்தைத் தரக் கூடிய காலமாக அமைந்து விடுவதை, அனுபவத்தில் காணலாம்.

உதாரணமாக, 

'மேஷ லக்னத்தைச்' சேர்ந்தவர்களுக்கு, செவ்வாய் பகவானின் தசாவில் - சூரிய பகவானின் புத்தியில் - குரு பகவானின் அந்தரமோ... சூரிய பகவானின் தசாவில் - குரு பகவானின் புத்தியில் - செவ்வாய் பகவானின் அந்தரமோ அல்லது, குரு பகவானின் தசாவில் - செவ்வாய் பகவானின் புத்தியில் - சூரிய பகவானின் அந்தரமோ... ஜாதகரின் வாழ்வில், ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடிய, புண்ணிய பலன்களை அளிக்கக் கூடிய காலமாக அமைந்து விடும். 

இரண்டாவது அணியில், 'சுக்கிர, புதன் மற்றும் சனி பகவான்களின்', தசா - புத்தி - அந்தரங்கங்கள்... முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஜாதகங்களில், இந்தக் கிரகங்களின் அமைவுகள், எவ்வாறாக அமைந்திருந்தாலும், அவற்றின் ஒன்றிணைந்த 'தசா - புத்தி - அந்தரங்கங்கள்', ஜாதகர்களின் வாழ்வில் ஒரு ஏற்றத்தை தந்து விடுவதை, அனுபவத்தில் காணலாம்.

உதாரணமாக,

'ரிஷப லக்னத்தைச்' சேர்ந்தவர்களுக்கு, சுக்கிர பகவானின் தசாவில் - புத பகவானின் புத்தியில் - சனி பகவானின் அந்தரமோ... புத பகவானின் தசாவில் - சனி பகவானின் புத்தியில் - சுக்கிர பகவானின் அந்தரமோ...சனி பகவானின் தசாவில் - சுக்கிர பகவானின் புத்தியில் - புத பகவானின் அந்தரமோ... ஜாதகரின் வாழ்வில், ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கக் கூடிய, புண்ணிய பலன்களை அளிக்கக் கூடிய, காலமாக அமைந்து விடும்.

ஸாய்ராம்.


Wednesday, March 3, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 163. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள். உதாரணங்களுடன்... பகுதி - 4.


 ஒரு ஜீவன், தனது வாழ் நாட்களில் அனுபவித்துக் கடக்க வேண்டிய, 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்', ஜாதகத்தில் அமைந்திருக்கும் 'கிரகங்களின் அமைவுகள்' சுட்டிக் காட்டுகின்றன.

ஆனால், அந்த 'கர்ம வினைப் பயன்களை, அந்த ஜீவன், தனது வாழ்வின். எந்தெந்தக் காலக் கட்டங்களில் கடந்து போகப் போகிறது... என்பதை, 'தசா - புத்தி - அந்தரங்கள் என்ற... கிரகங்களின் தசாக் காலங்கள்தான் நிர்ணயிக்கின்றன.

இந்த சூட்சுமத்தை அறிந்து கொள்வதுதான், ஜாதக ஆய்வின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஜீவனின் வாழ்வு காலமும், 'விம்சோத்திரி தசாக் காலம்' என்ற 120 வருடங்களைக் கொண்டதுதான், 

7 வருடக் காலங்களைக் கொண்ட 'கேது பகவானும்'... 20 வருடங்களைக் கொண்ட 'சுக்கிர பகவானும்'... 6 வருடங்களைக் கொண்ட 'சூரிய பகவானும்'... 10 வருடங்களைக் கொண்ட 'சந்திர பகவானும்'... 7 வருடங்களைக் கொண்ட 'செவ்வாய் பகவானும்'... 18 வருடங்களைக் கொண்ட 'ராகு பகவானும்'... 16 வருடங்களைக் கொண்ட 'குரு பகவானும்'... 19 வருடங்களைக் கொண்ட 'சனி பகவானும்'... 17 வருடங்களைக் கொண்ட 'புத பகவானும்'...இந்த 120 வருட 'விம்சோத்திரி தசாக் காலத்தை' பூர்த்தி செய்கிறார்கள்.

இந்த தொடர் 'விம்சோத்திரி தசாக் காலத்தில்', ஏதாவது ஒரு பகுதியில்தான்... ஜீவனின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப ஒரு பிறப்பு நிகழ்கிறது. அதற்கேற்ப, அந்த ஜீவன் தனது சராசரியான 60 முதல் 80 வயதிற்கான வாழ் நாட்களைக் கடந்து போகிறது.

உதாரணமாக, 20 வருட தசாக் காலத்தைக் கொண்ட... 'சுக்கிர பகவானின்' தசாக்.காலம்தான், மிக நீண்ட தசாக் காலமாகக் காணப்படுகிறது.

ஆதிபத்திய ரீதியாக, 'மகர லக்னத்தை' சேர்ந்தவர்களுக்கு யோகமாகக் கருதப்படும் 'சுக்கிர பகவானின்' தசாக் காலம்... மீன லகனத்தைச்' சேர்ந்தவர்களுக்கு கடினமான காலமாகக் கருதப்படுகிறது. 

ஆனால், அவ்வாறாகவே, அவை அந்த அனுபவங்களைக் கொடுத்து விடுவதில்ல. இன்பம் - துன்பம் என்ற 'இரட்டைச் சுழல்கள்' சமமாக நிறைந்த 'கர்ம வினைகளைச்' சுமந்து வந்திருக்கும் ஜீவன்... தனது தசாக் காலங்களிலும், அவை 'யோகமான' காலமாக இருந்தாலும்... அவயோக காலமாக இருந்தாலும்... நன்மை - தீமை என்ற 'புண்ணிய - பாப வினைகளின்' விளைவுகளை சமமாகத்தான் பகிர்ந்தளிக்கின்றன. அதற்கு சாட்சியாகத்தான்... அவைகளின் 'கோள் சார' நிலைகள் அமைகின்றன.

20 வருட, நீண்ட தசாக் காலத்தைக் கொண்ட 'சுக்கிர பகவான்', தனது சுழற்சியை, சராசரியாக 30 நாடகளுக்கு ஒரு முறை நிகழ்த்தி விடுகிறார். ஆகவே, இந்த நீண்ட தசாக் காலத்தை அனுபவிக்கும்... யோகர்களுக்கும்... அவயோகர்களுக்கும்... இந்த 20 வருட 'சுக்கிர பகவான்' தனது, தசாக் காலத்தில், ஏறக் குறைய... 240 முறைகள்,  'பெயர்ச்சி' அடைந்து விடுகிறார்.

இந்தப் பெயர்ச்சி காலங்கள்... யோகர்களுக்கும், அவயோகர்களுக்கும்... 'இன்ப-துன்பம்' என்ற 'இரட்டைச் சூழல்களை' அளித்து விடுகின்றன என்பதுதான் உண்மை.

அது போலவே, 

~ கேது பகவான், தனது தசாக் காலத்தில், ஏறத்தாள 5 முறைகளும்...

~ சூரிய பகவான், ஏறத்தாள 72 முறைகளும்...

~ சந்திர பகவான், ஏறத்தாள  1600 முறைகளும்...

~ செவ்வாய் பகவான் ஏறத்தாள 56 முறைகளும்...

~ ராகு பகவான் ஏறத்தாள 12 முறைகளும்...

~ குரு பகவான் ஏறத்தாள 16 முறைகளும்...

~ சனி பகவான் ஏறத்தாள 7 முறைகளும்...

~ புத பகவான் ஏறத்தாள 204 முறைகளும்...

... தங்களது பெயர்ச்சிகளை அடைந்து, தங்களது தசாக் காலங்களில், ஜீவன் அனுபவித்துக் கடக்க வேண்டிய 'கர்ம வினைகளின் விளைவுகளை'... 'இன்பம் - துன்பம்' என்ற 'புண்ணிய - பாப வினைகளின', சம அளவுக் கலவையாகத்தான் கலந்து அளிக்கின்றன.

ஸாய்ராம்.



Tuesday, March 2, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 162. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள்... உதாரணங்களுடன். பகுதி - 3.


 'மேஷ லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 2 (தனம் - வாக்கு - குடும்பம்) மற்றும் 7 (களத்திரம் என்ற வாழ்க்கைத் துணை மற்றும் நட்பு) ஆம் பாவங்களுக்கு, அதிபதியாகிற 'சுக்கிர பகவான்', 7 ஆம் பாவத்திலேயே அமைகிறார் என்று வைத்துக் கொள்வோம்./

இந்த அமைவு உணர்த்தும் நிலைகளாக...

~ களத்திர பாவாதிபதி, களத்திர பாவத்திலேயே அமைவதால், 'களத்திர தோஷம்' என்பதாகவும்...

~ 'சர லக்னத்திற்கு', 2 மற்றும் 7 ஆம் பாவாங்கள் 'மாரக ஸ்தானங்களாக' அமைவதால்... 'சுக்கிர பகவான்' மாராகாதிபதியாகிறார் என்பதாகவும்...

... விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலைகளினால்,.. ஜாதகர் தனது குடும்ப வாழ்விலும்... தனக்கு அமையும் இல்வாழ்விலும்... எண்ணர்ற துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும்... என்பதாகத்தான், பலன்கள்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இவைகள், உண்மைதான் என்றாலும். இந்த 'சுக்கிர பகவானின்' 20 வருட காலங்களை...

# ஜாதகர் தனது வாழ் நாட்களில் எதிர் கொள்ளாத போதும்...

# ஜாதகரின் பாலப் பருவத்திலேயே, கடந்து போய் விட்டாலும்...

# ஜாதகர் தனது வாழ்வின், இறுதிக் காலங்களில் அனுபவிக்க நேர்ந்தாலும்...

... 'சுக்கிர பகவானின்' ஆட்சி பலத்தினால்... தனது வாழ்நாளில், மாரகம்... காரகம்... என்ற பாதிப்புகளிலிருந்து விடுபட்டு... குடும்பத்திலும், இல்வாழ்விலும்... நிம்மதியான வாழ்க்கை அனுபவத்தை அடைவார் என்பதும் கவனிக்கத் தக்கதே.

ஸாய்ராம்.



Monday, March 1, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 161. தசா, புத்தி, அந்தரங்களுக்குள் அடங்கியிருக்கும் சூட்சுமங்கள்... உதாரணங்களுடன் பகுதி - 2.


 முன் பகுதியின் தொடர்ச்சி...

(... இந்த தசா, புத்தி, அந்தரங்களை நடத்தும் கிரகங்கள், ஜாதகரின் கர்ம வினைகளின் விளைவுகளைத்தான், தங்களுக்கான காலங்களில் வெளிப்படுத்துகின்றன. என்ற போதும்... இவை மூன்றுக்கும் இடையேயான தொடர்புகளும், ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன... )

# தசா, புத்தி, அந்தரங்களுக்கு இடையேயான நட்பு மற்றும் பகை நிலைகள் 

உதாரணமாக, 'மீன லக்ன' ஜாதகருக்கு, 'குரு பகவானின் தசாவில்... புத பகவானின் புத்தியில்...செவ்வாய் பகவானின் அந்தரம்' நடப்பதாகக் கொள்வோம்.

மீன லக்னத்திற்கு, 'லக்னம் (1) மற்றும் ஜீவன (10) பாவங்களுக்கு' அதிபதியான 'குரு பகவானின்' தசா, மிகவும் உத்தமமான தசாதான். 

அது போல 'சுகம் (4) மற்றும் களத்திரம் (7) என்ற பாவங்களுக்கு' அதிபதியான 'புத பகவானின்' புத்தியும், மிகவும் உத்தமாமான புத்திதான். 

மேலும், 'தன-வாக்கு-குடும்ப பாவம்' (2) மற்றும் 'தர்ம-பாக்கிய பாவங்களுக்கு' (9) அதிபதியான 'செவ்வாய் பகவானின்' அந்தரமும், மிகவும் உத்தமமான அந்தரம்தான். 

ஆனால், லக்னாதிபதிக்கு நன்மையை அளிக்க வேண்டிய 'குரு பகவான் தசாவின் - செவ்வாய் பகவானின் அந்தரம்'... அவர்களுக்கு இடையே அமைந்துள்ள, 'செவ்வாய் பகவானுக்கு' பகையாக உள்ள 'புத பகவானின்' புத்தியின் காரணத்தால்... தனது புண்ணிய பலன்களை அளிப்பதில்லை.

# தசா, புத்தி, அந்தரங்களின் 'கோள் சார நிலைகள் :

உதாரணமாக, 'கும்ப லக்ன' ஜாதகருக்கு, 'சனி பகவானின் தசாவில்... குரு பகவானின் புத்தியில்...புத பகவானின் அந்தரம்', நடப்பதாகக் கொள்வோம்.

'கும்ப லக்னத்திற்கு', லக்னாதிபதியாகிய (1) 'சனி பகவானின்' தசா மிகவும் உத்தமமான தசாதான்.

அது போல, 'தன-வாக்கு, குடும்ப' (2) பாவத்திற்கும், 'லாபம்' என்ற 11 ஆம் பாவத்திற்கும், அதிபதியாகிற 'குரு பகவானின்' புத்தியும், மிகவும் உத்தமமான புத்திதான்.

மேலும், 'பூர்வம் (5) மற்றும் ஆயுள் (8) பாவங்களுக்கு அதிபதியாகிற 'புத பகவானின்' அந்தரமும், மிகவும் உத்தமமான அந்தரமே.

இருப்பினும், தசா நாதனுக்கும் (லக்னாதிபதியாகிற 'சனி பகவான்'), அந்தர நாதனுக்கும் (பூர்வ புண்யாதிபதியாகிற 'புத பகவான்'), இடையேயுள்ள புத்தி நாதனான (தன-லாபாதிபதியாகிற...) 'குரு பகவான்', 'கோள் சாரத்தில்', ஆட்சி, உச்சம் பெற்று, வலிமையாக அமையும் போது மட்டுமே, ஜாதகர், தனது புண்ணிய பலன்களை அனுபவிப்பார்.

அதே நேரத்தில், 'குரு பகவான்' கோள் சாரத்தில், வலிமையற்று... 'நீச நிலையில்', பலமிழந்து நிற்கும் போது, ஜாதகர் அனுபவிக்க வேண்டிய 'புண்ணிய பலன்கள்', அவரின் அனுபவத்திற்கு வராமல் போவதை அனுபவத்தில் காணலாம்.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...