ஒவ்வொரு ஜீவனும், தனது 'புண்ணியம் - பாவம்' என்ற இரண்டு சமவிகித கலவைகளைக் கொண்ட 'பூர்வ கர்ம வினைகளைத்தான்' சுமந்து கொண்டு வந்திருக்கின்றன. ஆதலால்தான், ஒவ்வொருவர் வாழ்விலும், இன்பமும்... துன்பமும்... மாறி, மாறி வந்து கொண்டே இருக்கின்றன.
இன்பத்தை அனுபவிக்கும் போது, ஒரு துன்ப நிலை நிகழ்வதும்... துன்ப நிலையில் தவிக்கும் போது, மனதிற்கு இதமாக, ஒரு இன்ப சூழல் ஏற்படுவதும்... அனைவரும் அனுபவிக்கும் அனுபவம்தான்.
இவ்வாறுதான், 30 வயதைக் கடந்து கொண்டிருந்த 'மீன லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, 'சூரிய பகவானது' தசாக் காலம்... 25 ஆவது வயதிலிருந்து நடந்து கொண்டிருந்தது. 6 ஆம் பாவாதிபதியான, 'சூரிய பகவானின்' தசாக் காலம், ஜாதகரை ஒரு இறுக்கமான சூழலில் கட்டிப் போட்டு வைத்தது.
சேரக் கூடாத நண்பர்களின் சேர்க்கை, அவரை, கிடைக்கும் வழிகளிலெல்லாம், நுட்பமாக சட்டத்தை வளைத்து, அதன் ஓட்டைகளின் வழியே பொருள் சேர்க்கும் கூட்டத்தில் கொண்டு சேர்த்தது. அவரின் வாழ்வில், 'சூரிய பகவானின் தசாவில் - இறுதிப் புத்தியான, 3 மற்றும் 8 க்குறிய, சுக்கிர பகவானின் புத்தியில் - 'லக்னாதிபதியான குரு பகவானின் அந்தரம்' நடந்து கொண்டிருந்த வேளை.
இறைவனின் அருளால், அவர் தக்க ஜோதிட ஆலோசனையின் பேரில்... 'சுக்கிர பகவானின்' அதி தேவதையான, 'ஸ்ரீ ரெங்கநாத பகவானின்' திருவடி தரிசனத்தையும்... 'குரு தக்ஷ்ணமுர்த்தி பகவானின்' திருவடியிலும்... பூரண சரணாகதியடைந்தார்.
ஒரு வியாழன்று, அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில், காவல் துறையினரின், அதிரடி சோதனையில், அந்தத் தகாத தொழில் துறையில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சோதனை நேரத்தில், இவர், 'குரு தக்ஷ்ணாமுர்த்தி பகவானை', திருவிளக்கு ஏற்றி வழி பட்டுக் கொண்டிருந்தார்.
விடுதிக்குத் திரும்பி வந்த போது, மேலாளரிடமிருந்து, நடந்தவைகள் யாவற்றையும் அறிந்து, நிம்மதிப் பெருமூச்சு விட்டார். தன்னை இந்தத் துன்பத்திலிருந்து விடுவித்த இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு, அந்த விடுதியை விட்டு விலகி, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தொடர்ந்த, பூர்வ புண்ணியாதிபதியான 'சந்திர பகவான்' தசா, அவரை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்தது. 10 வருட உழைப்பு, அவரையும், அவரது குடும்பத்தையும் உயர்த்தியது. தற்போது நடக்கும்' செவ்வாய் பகவான்' தசாவில், நாடு திரும்பி, ஒரு உணவு விடுதியை ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.
இந்த அனைத்து மாற்றங்களுக்கும் வித்திட்டது... 'சூரிய பகவானின்' தசாவில், 'சுக்கிர பகவானின்' புத்தியில் நடந்த 'குரு பகவானின்' அந்தரக் காலம்தான்.
ஆம், நமது கர்ம வினைகளின், புண்ணிய பலன்... ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தால் போதும்... எவ்வளவு துன்ப நிலையில் நாம் தவித்திருக்கும் போதும்... இறைவனின் அருளால், உடனே வெளிப்பட்டு நம்மைக் காத்து விடும். தேவை, நம்பிக்கையும்... பொறுமையும்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment