'செவ்வாய் தோஷம்' ... வரன்களை இணைப்பதில் பெரும் பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில், இவ்வாறான எந்த 'தோஷங்களையும்', ஜோதிடக் கலையின் விதிகள் வகுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
~ செவ்வாய் பகவான்', ஆற்றலில் நாயகராக இருப்பவர். நவக்கிரகங்களில், 'சூரிய பகவானுக்கு' நிகராகக் கருதப் படுபவர்.
~ 'சூரிய பகவானை'... ஆத்மக் காரகராகவும், 'சந்திர பகவானை'... ஜீவனின் மனதைக் குறிக்கும் மனோகாரகராவும், வகுக்கும் ஜோதிடக் கலை, 'செவ்வாய் பகவானை'... 'ஆத்மாவின்' வெளிப்பாடான 'ஆற்றலுக்கு காரகராக' வகுக்கிறது.
~ அதனால்தான், 'சிவபெருமானாரின்' நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட 'குழந்தையான'... 'முருகப் பெருமானாரை', 'செவ்வாய் பகவானின்' அதி தேவதையாக வகுத்திருக்கிறது ஜோதிடக் கலை.
~ 'சூரிய பகவான்' வலுக் குறைந்து காணப்படும் ஜாதகத்தில், பெரும்பாலும் 'செவ்வாய் பகவானின்' வலிமை கூடியிருப்பதைக் காணலாம்.
'செவ்வாய் பகவானை' அணுகும் பொது, அவரின் 'ஆதிபத்தியத்தை' மூலமாகக் கொண்டுதான் அணுக வேண்டும். அதுதான் முறையான அணுகுமுறையாக இருக்கும்.
உதாரணமாக 'செவ்வாய் பகவானின்' இரண்டு முரண்பட்ட 'ஆதிபத்திய அமைவுகளை' ஆய்ந்து பார்க்கலாம்.
1. 'கடக லக்னத்தில் 'பிறந்த ஒரு ஜாதகரின் 7 ஆம் பாவமான 'மகர இராசியில்' 'செவ்வாய் பகவான்' அமர்கிறார் என்று கொண்டால்...
* 'கடக லகனத்திற்கு' ஒரு திரிகோணத்திற்கும் (5 ஆம் பாவம்)... ஒரு கேந்திரத்திற்கும் (10 ஆம் பாவம்) அதிபதியாகிற 'செவ்வாய் பகவான்'... சுப ஆதிபத்தியங்களுக்கு அதிபதியாகிறார்.
* அவர் 7 ஆம் பாவத்தில் அமர்ந்து, கேந்திரத்தின் உச்சமான 10 ஆம் வீடான ஜீவன பாவத்தை...தனது 4 ஆம் பார்வையாலும், திரிகோணத்தில் முதல் வீடான லக்ன பாவத்தை... தனது 7 ஆம் பார்வையாலும், தன-குடும்ப-வாக்கு ஸ்தானமான 2 ஆம் பாவத்தை... தனது 8 அம் பார்வையாலும், பார்த்து அருள்கிறார்.
* அவரின் 7 ஆம் பாவ அமைவினால்... இந்த ஜாதகருக்கு அமையும் வரன், தனது பூர்வ இடத்துடன் தொடர்புடையவராகவும்... தனது வாழ்வின் கடமைகள் முழுவதிலும் முழுமையாக பங்கேற்பவராகவும்... சிறந்த இல்வாழ்வின் துணைவராகவும் அமைவார்.
2. 'துலா லகனத்தில்' பிறந்த ஒரு ஜாதகரின் 7 ஆம் பாவமான, 'மேஷ இராசியில்' அமர்கிறார் என்று கொண்டால்...
* 'தனம்-குடும்பம்-வாக்கு' என்ற 2 ஆம் பாவத்திற்கும், 'களத்திரம் என்ற வாழ்க்கைத் துணை- நட்பு' என்ற 7 ஆம் பாவத்திற்கும், ஆதிபத்தியம் வகிக்கிறார் 'செவ்வாய் பகவான்'.
* பொதுவாகவே, அனைத்து லகனத்திற்கும் 2 ஆம் பாவம் 'மாரக ஸ்தானமாகிறது'.
* அதுவும், 'சர லகனமான'... 'துலா லக்னத்திற்கு', 2 ஆம் பாவமும்... 7 ஆம் பாவமும்... ';இரு மாரக ஸ்தானங்களாக' அமைகிறது.
* இரு மாரக ஸ்தானங்களுக்கு அதிபதியாகிற 'செவ்வாய் பகவான்'... 7 ஆம் பாவமான 'இணை மற்றும் துணை' ஸ்தானத்தில் அமர்கிறார்.
* அவரின் இந்த ஆதிபத்திய அமைவினால்... ஜாதகர், தனக்கு அமையும் இல்வாழ்வுத் துணைவரின் ஒத்துழைப்பை, தான் பிறந்த குடும்ப கடமைகளில் எதிர்பார்க்க முடியாமல் போகிறது. தனது குடும்பத்திற்கு, தான் ஆற்ற வேண்டிய கடமைகளில், தனது துணைவரின் தலையீடுகளினால்... பெரும் மன வேதனையை அடைய வேண்டியிருக்கும். இந்த வேதனையால், பிறந்த குடும்பத்திலும்... தனக்கு அமைந்த இல் வாழ்விலும்... நிம்மதியற்று வாழ வேண்டிய சூழலும் ஏற்படும்.
மேற்கண்ட இரண்டு அமைவுகளும் உணர்த்துவது... ஒன்றைத்தான். 'செவ்வாய் பகவானின்' ஆதிபத்திய அமைவுகளின் அடிப்படையில்தான் நிகழ்வுகள் நிகழ்கின்றதேயன்றி... அவரின் அமைவினால் ஏற்பட்ட 'தோஷத்தினாலல்ல'.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment