Wednesday, October 12, 2022

'கிரகங்களை எள்ளி நகையாடுதல் கூடாது...!', ஒரு ஜோதிடருக்கு, மகா பெரியவர் அருளியது!


 

பெரியவரின் தரிசனத்திற்காக வந்த ஜோதிடர் ஒருவர், 'எனது குடும்பமோ பெரியது... ஆனால், வருமானமோ மிகவும் குறைவாக இருக்கிறது. எனது தொழிலிருந்து வரும் வருமானம் வாழ்க்கை நடத்துவதற்கே போதாமலிருக்கிறது பெரியவா!' என்றார்.

சற்று அமைதியாக இருந்த பெரியவர், 'ஓ, உனது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில்தானே வசித்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'இல்லை பெரியவா, அதில் எனது அண்ணார் இருக்கிறார். நான் அந்த வீட்டிற்கு மேற்குப் புறமாக ஒரு வாடகை வீட்டில் இருக்கிறேன்' என்றார். அதற்குப் பெரியவர், 'அங்கு நீ இருக்க வேண்டாம், உங்களது பூர்வ வீட்டின் கிழக்குப் புறமாக, ஒரு பழைய மாட்டுக் கொட்டகை இருக்கிறது அல்லவா? அங்குதான், உன் முன்னோர்கள் பாரம்பரியமாக அம்பாள் பூஜையை நடத்தி வந்தார்கள். ஆதலால், அந்த இடத்தில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு குடியிருந்து வா!. என்றார்.

பெரியவர் தொடர்ந்து, 'இன்னொன்றையும் நீ மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அனைத்துக் கிரகங்களையும் எள்ளி நகையாடுவது போலவோ, தரம் குறைத்தோ, பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாய், குரு நீசன்... சனி பாபி... புதன் வக்கிரன்... என்பதைப் போல. அது போன்று சொல்லக்கூடாது. 'குரு பகவான்' மிக உயர்வான கிரகம். அவர் 'தக்ஷ்ணாமூர்த்தி பகவானின்' சொரூபம். 'சனி பகவான்', 'சூரிய பகவானின்'  புத்திரர், 'ஈஸ்வரன்' என்ற பட்டம் பெற்றவர். அவர்களை முன்னிட்டு இது போன்று சொல்லக்கூடாது. 'கிரக நிலைகளின் அமைவுகள் தற்போது சாதகமாக இல்லை. ஆதலால் தற்போதைய நேரம் சாதகமாக இல்லை.' என்றுதான் சொல்ல வேண்டும்.'

தொடர்ந்து பெரியவர், 'பெற்றோர்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்க்கக் கொண்டு வரும்போது, ஜாதகத்தில் பொருத்தம் இல்லாத போது, அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைக் கூறி, அவற்றை நிராகரிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பெண்ணுக்கு இன்னும் சிறிது காலம் கழித்துத் திருமணம் செய்யலாம் என்றோ... வரனுக்கு தற்போது தந்தையாகும் பாக்கியம் இல்லாமல் இருக்கிறது என்றோ... கூறலாமே! இன்றைய காலத்தில் முப்பது வயதையும் தாண்டி பெண் குழந்தைகள் இருக்கைறார்கள், கூடுமானவரை, அது போன்ற நிலைகயில் வரும் பெற்றோர்கள் மனம் புண்படும்படியாக பலன்களை சொல்லக் கூடாது. அது போன்ற வரன்களுக்கு, ஜாதகங்களின் முக்கியத்துவத்தை விட, அவர்கள் சார்ந்த குடும்பம், கோத்திரம், அவர்களது மன விருப்பம்... இவை சார்ந்தே பொருத்தம் பார்க்க வேண்டும்' என்றார்.

'உங்களின் அற்வுரையின் படியே இனி நடந்து கொள்கிறேன், பெரியவா!' என்று மகிழ்வுடன் கூறி, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றார் ஜோதிடர்.

(ஸ்ரீ மடத்தில் பணிபுரிந்தவரினால் விவரிக்கப்பட்டது.  மூலம் : 'மகா பெரியவர் தரிசன அனுபவங்கள்' பகுதி - 3.)

நன்றி : ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா Fb யிலிருந்து தொகுக்கப்பட்டது)

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும். பகுதி - 236. 'இராசியின் அமைப்பு உணர்த்து சூட்சுமம்' பாகம் - 6.


இராசின் அமைப்பை,  'காலபுருஷ இராசி' அமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சில சூட்சும உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதில் ஒன்றைத்தான், இப்போது பார்க்கப் போகின்றோம்!

'சனி பகவான்'... தர்மத்திற்குக் காவலனாக... கர்மம் என்ற நமது பூர்வ வினைகளை வழி நடத்துபவராக... அதற்கான களங்களை அமைத்துக் கொடுப்பவராக... அவரின் பொறுப்பு, ஜோதிடக் கலையில், மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.

இராசி சக்கரத்தில், 'மகரம்' என்ற இராசியிலும்... 'கும்பம்' என்ற இராசியிலும் 'ஆட்சி பலம்' பெறுகிறவர், 'துலாம்' என்ற இராசியில் 'உச்ச பலத்தையும்', 'மேஷம்' என்ற இராசியில் 'நீச பலத்தையும்' பெறுகிறார்.

இந்த அமைவை, 'கால புருஷ இராசியோடு' ஒப்பிட்டு நோக்கும் போது ;

- 'கால புருஷ இராசியில்' (மேஷ இராசியில்) தனது பலத்தை முழுவதுமாக இழந்து நிற்கிறார்... சனி பகவான். அதாவது, பிறப்பெடுக்கும் ஜீவன், அதன் 'புத்தி சக்தி' வெளிப்படும் வரையில், தனது 'கர்ம வினைகளின்' விளைவுகளை தானாக மேற்கொள்ளும் செயல்களாக்க முடியாது... ஆனால் தனக்கு நேர்வதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... என்பதைத்தான் இந்த அமைவு சுட்டிக் காட்டுகிறது.

- 'கால புருஷ இராசியில்' 7 ஆம் வீடான 'துலா இராசியில்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். எப்போது ஜீவன், தனது புத்தி சக்தியை அடைகிறதோ, அப்போதுதான், அது கர்ம வினைகளால் வெளிப்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் ஆரம்பிக்கிறது. அதற்கான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றாகக் கூடத் தொடங்குகின்றன..

- 'கால புருஷ இராசியின்' 10 ஆம் வீட்டில், 'மகர இராசியில் தனது 'ஆட்சி பலத்தை பெறுகிறார். அப்போதுதான், ஜீவன் தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை'... தான் மேற்கொள்ளும் செயல்களாகவோ... தான் எதிர் கொள்ளும் செயலகளாகவோ...அணுகி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செயல்படுத்த ஆரம்பிக்கிறது.

- 'கால புருஷ இராசியின்' 11 ஆம் வீடான 'கும்ப இராசியில்' தனது 'ஆட்சி பலத்தை' பெறும் போதுதான், 10 ஆம் வீட்டில், ஜீவன்... தான் மேற்கொண்ட அல்லது எதிர்கொண்ட செயல்களின் விளைவுகளை... அவைகள் புண்ணியங்களாக இருந்தால் 'லாபமாகவும்'... பாபங்களாக இருந்தால் 'பாதகமாகவும்' சேர்க்கத் தொடங்குகின்றது. இதைக் குறிப்பிடுவதற்காகத்தான், 'சர இராசிக்கு' 11 ஆம் பாவத்தை 'லாப ஸ்தானமாகவும்' (புண்ணியங்கள்)... 'பாதக ஸ்தானமாகவும்' (பாவங்கள்) அமைத்திருக்கிறார்கள்... ரிஷி புங்கவர்கள்.

தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.


Tuesday, October 11, 2022

'காற்றில் கை அசைத்து, பழங்களைக் கொண்டு வரும் சித்தருக்கு, மகா பெரியவர் அருளிய மாண்பு!

     

காசியிலிருந்து வந்திருந்த ஒரு வேதப் பண்டிதர், பெரியவரை தரிசிப்பதற்காக தேங்காய், பழங்களுடன் வரிசையில் காத்திருந்தார். அவருக்கு முன்னால், சித்து லீலைகளில் கைதேர்ந்த ஒரு சித்தர் நின்றிருந்தார். அவரிடம், பெரியவருக்கு சமர்ப்பிக்க அவர் ஏதும் கொண்டு வரவில்லையா... என்று கேட்ட போது, பொறுத்திருந்து பாருங்கள்... என்ற பதில் வந்தது.

பெரியவரை தரிசனம் செய்ய அவரின் வாய்ப்பு வந்த போது, அந்த சித்தர் தனது கைகளை காற்றில் அசைக்க ஒரு கூடை நிறையப் பழங்கள் வந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தார்கள். புன்னகைத்தபடி இருந்த பெரியவர், 'இதைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு எவ்வளவு காலம் பிடித்தது?' என்று கேடக, அவர், 'பல காலம் ஆயிற்று...' என்று கூறியபடியே, மீண்டும் தனது கைகளை காற்றில் அசைக்க, அழகிய பூக்கள் வந்தன. மீண்டும் மகா பெரியவர் புன்னகைக்த்தபடியே, அந்த பழங்களையும்... பூக்களையும்... தனது விழிகளால் நோக்கினார்.

அனைவரின் ஆச்சரியங்கு ஏற்ப, அந்தபழங்கள், பூக்கள் என அனைத்தும், மண்துகள்களாக மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த அந்த சித்தர், தாம் எவ்வளவுவு முறை முயன்றும், அந்த மண் துகள்களிலிருந்து அவர் உருவாக்கிய பழங்களையும், பூக்களையும் மீண்டும் மீட்க முடியாது தோற்றுப் போனார். இப்போது பெரியவர் சொன்னார், 'மக்களுக்கு மிகவும் உபயோகும்படியான ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்!' என்று.

( நன்றி : Prof. S. Kalyanaraman, Neurosurgeon, Chennai. Jagadguru Sri Maha Periyava - Kanji Paramacharya F/B லிருந்து தொகுக்கப்பட்டது...)

தமிழாக்கம்... அடியேன்

ஸாய்ராம்.

Monday, October 10, 2022

'தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை... 'திருமூலர்' அருளிய 'திருமந்திரம்' பாடல் - 98.


 

'தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை

முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்

ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமை யால்இப் பயனறி யாரே'

(திருமந்திரம் : பாடல் - 98)

'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும் மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிடம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 'உள்வாழ்வில்' தாம் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் வருடம் ஒரு பாடலாக வடித்தார்... எனக் கூறப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் அவரின் வாழ்வு பற்றிய இந்தக் கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும் நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தைப் பயிற்சியில் அனுபவிக்கும் போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கைகூடுகிறது.

அது போலவே, இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம்.

தத்துவ ஞானம் உரைப்பது ஒன்றைத்தான்... அது, 'இந்த ஜீவன் உறைந்திருக்கும் உடலுக்குள்ளேயே இருந்து... இந்த ஜீவனுக்கும், உடலுக்கும், அது உலவும் உலகத்திற்கும் மூலமாக இருப்பவனே... இறைவன்!'

ஆகவே, இந்த உடலை விட்டுப் பிரித்துத் தனியாக, அன்னியமாக அந்த இறைவனை வழிபடுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், இந்த உடலை விட்டு அவர் பிரிந்து விட்டால், நாம் உயிர்வாழ்வதில்லை. அந்த நிலையில் நமக்கு, ஜீவனும் இல்லை... உடலும் இல்லை... இந்த உலகமும் இல்லை.

இந்த தத்துவ ஞானத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள், முக்தி என்ற இறைவனோடு ஒன்று கலந்துவிடும் முயற்சியில் ஈடுபடும் முனிவர்களாக இருந்தாலும்... தேவர்களாக இருந்தாலும்... அதன் பயனை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஜீவனும்... சிவனும்... ஒன்றாகியிருக்கும் தத்துவத்தை... இவர் போன்று அனுபவித்து உணர்ந்த, ஞானிகளால்தான் அருள முடியும்! பெருமானாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'திரு மந்திரங்கள்தாம்'.

ஸாய்ராம்.



Tuesday, October 4, 2022

உந்திச் சுழியு டனேர் பிராணனைச்... 'திருமூலர் அருளிய திருமந்திரம்' பாடல் - 732.


 

'உந்திச் சுழியு னுடனேர் பிராணனைச்

சிந்தித் தெழுப்பிச் சிவமந்த் திரத்தினால்

முந்தி முகத்தின் நிறுத்திய பானனைச்

சிந்தித் தெழுப்பவே சிவனவ நாமே.'


'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும், மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 'உள்வாழ்வில்' தான் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் வருடம் ஒரு பாடலாக வடித்தார்... எனக் கூறப்படுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில், அவரின் இந்த வாழ்வு பற்றிய கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும் நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தை பயிற்சியில் அனுபவிக்கும் போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கைகூடுகிறது.

அது போலவே, இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' , கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம் ;

'சகஸ்ரம்' என்ற தலைப் பகுதியின் உச்சத்தில் இருக்கும் 'சதாசிவனான' சக்திதான், 'ஜீவ சக்தி வாயுவாக' உயிர் பெறுகிறது. அந்த வாயு நமக்குள்ளேயே சலித்துக் கொண்டிருக்கும் போது 'பிராணனாக' இருக்கிறது. நமக்கு வெளியே சலிக்கும் போதுதான் 'அபானனாக' மாறுகிறது.

பிராணனாக சலிக்கும் போது, உள்ளிருக்கும் சக்தியோடு ஒன்றியிருக்கும் ஜீவ சக்தியான வாயு... அபானனாக சலிக்கும் போது, உலகவாழ்வோடு நம்மை இணைத்து விடுகிறது.

இறைவனின் பேரருளால், நமது ஜீவனை, அதன் மூலமான ஆத்மாவோடு சங்கமிக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பு (உந்துதல்) ஏற்படும் போது, வெளியே சலித்துக் கொண்டிருக்கிற 'அபானனான' ஜீவ சக்தி வாயுவை, 'பிரணாயமம்' என்ற இறைவனின் உந்து சக்தியினால் (சிவ மந்திரம்) 'பிராணனாக' , அதன் மூலமான 'சுழுமுனையில்' (இரு புருவங்களுக்கு இடையேயான பகுதி), அந்த உற்பத்தி ஸ்தானத்தில் நிலை நிருத்தும் போது, ஜீவ சக்தியான வாயு, அதன் மூலமான 'சகஸ்திரத்தில்' ஒடுங்கிவிடுகிறது.

இந்த 'ஜீவன் - சிவனாகும்' நுட்பத்தைத்தான், இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்... திருமூலப் பெருமானார். பெருமானாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'திருமந்திரம்தான்'!

ஸாய்ராம்.



Saturday, October 1, 2022

திருக்குறள் உணர்த்தும் ஞானம் : பகுதி - 9. 'கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி'


 

'கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி'  (திருக்குறள் ; இல்லறவியல் : குறள் எண்  115)


'கேடும், பெருக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆதலால் உள்ளத்தில் நடுவுநிலைமையுடன் இருப்பதுதான் சான்றோர்களுக்கு அழகாகும்...' என்பதாகத்தான் பொதுவான கருத்துரைகள் உரைக்கின்றன.

இவை மேலோட்டமாகப் பார்க்கும் போது, உண்மையாக இருப்பினும், சற்று ஆழ்ந்து சிந்திக்கும் போது, மிக உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

ஆதலால்தான், 'ஔவைப் பிராட்டியார்', திருகுறளைப் பற்றிக் கூறும் போது, 'அணுவைத் துளைத்து... அதில் ஏழ் கடலைப் புகுத்திக்... குறுகத்தரித்த குறள்' என்று வருணிக்கிறார்.

இந்தக் குறளில் மூன்று முக்கியமான சொல்லாடல்களை வள்ளுவர் கையாண்டிருக்கிறார். 'கேடு... 'பெருக்கம்'...'கோடாமை'. 

நமது முன் வினைகளின் விளைவுகளால், நாம் 'பாபம்'... 'புண்ணியம்' என்ற இரண்டையும் சுமந்து கொண்டு,  இவை இரண்டும் விளைவிக்கும் 'இன்பம் - துன்பம்' என்ற இடைவிடா 'இரட்டைச் சுழல்களை' அனுபவித்து வருகிறோம். இது உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவான அனுபவமாக இருக்கிறது. இந்த பாப - புண்ணியங்களைத்தான், வள்ளுவர், 'கேடு - பெருக்கம்' என்ற இரு சொற்களால் வருணிக்கிறார்.

இன்பம் வரும் போது துள்ளுகிற மனம், துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறது. இவையிரண்டுமே நமது பூர்வத்தில், நாம் 'பற்றுடன்' செய்திருக்கிற 'கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' விளைந்திருக்கிறது, என்ற 'ஞானம்' வரும் போதுதான், 'கோடாமை' என்ற 'பற்றற்ற நிலையில்' (செயல்களின் விளைவுகளில் பற்று வைக்காமல்...) செயல்களை மேற்கொள்ளும் பக்குவம் வந்து சேர்கிறது.

'இது எனக்கு நன்மை அளிக்கக் கூடியது' என்று நினைத்து 'அதிக விருப்பத்துடனும்'... 'இதில் எனக்கு எதுவும் நன்மை கிடைக்கப் போகிறதில்லை' என்ற 'விருப்பமற்றும்... செயலாற்றுவதிலிருந்து மனம் விடுபட்டு, இந்தச் செயல்கள் 'எனக்குண்டான கடமை' என்றுணர்ந்து, அதன் 'பலன்களில் பற்று வைக்காமல்'. செயல்களின் 'பூரணத்தை' மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதுதான்... வள்ளுவப் பெருந்தகை உணர்த்தும் 'கோடாமை'. என்ற 'ஞானியர்க்கான குணம்'.

ஆகவே, 'அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பாபங்களும் - புண்ணியங்களும் நிறைந்திருக்கிற வாழ்வில், அவற்றிலிருந்து விடுபட்டு, தாம் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செயல்களை 'பற்றற்று' அணுகுவதுதான், சான்றோர்களான ஞானிகளின் பெருமையாக இருக்கிறது.'... என்பதுதான் இந்தக் குறளின், உள்ளார்ந்த பொருளாக இருக்கிறது.

ஞான வள்ளலான 'வள்ளுவப் பெருந்தகையின்' ஈரடி வெண்பாக்கள், ஏழு கடல்களையொத்த சொற்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதில் நீந்தி, முழுகி முத்தெடுப்பவர்களே பாக்யவான்கள்!

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...