'உந்திச் சுழியு னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந்த் திரத்தினால்
முந்தி முகத்தின் நிறுத்திய பானனைச்
சிந்தித் தெழுப்பவே சிவனவ நாமே.'
'திருமூலப் பெருமானரது', 'திருமந்திரப் பாடல்கள்' ஒவ்வொன்றும், மிக மிகக் கருத்தாழமிக்கவைகள். ஏறத்தாள மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 'உள்வாழ்வில்' தான் அனுபவித்து உணர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றையும் வருடம் ஒரு பாடலாக வடித்தார்... எனக் கூறப்படுகிறது.
இன்றைய காலக் கட்டத்தில், அவரின் இந்த வாழ்வு பற்றிய கருத்து சற்று மிகையானதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு பாடலையும் நாம் புரிந்து கொண்டு, அதன் அனுபவத்தை பயிற்சியில் அனுபவிக்கும் போது மட்டுமே, அவர் வடித்த பாடலின் கருத்தும்... அதன் அனுபவமும்... நமக்குக் கைகூடுகிறது.
அது போலவே, இந்தப் பாடல் உணர்த்தும் 'உட்பொருளை' , கருத்துடனும்... அனுபவத்துடனும்... ஆய்ந்து பார்ப்போம் ;
'சகஸ்ரம்' என்ற தலைப் பகுதியின் உச்சத்தில் இருக்கும் 'சதாசிவனான' சக்திதான், 'ஜீவ சக்தி வாயுவாக' உயிர் பெறுகிறது. அந்த வாயு நமக்குள்ளேயே சலித்துக் கொண்டிருக்கும் போது 'பிராணனாக' இருக்கிறது. நமக்கு வெளியே சலிக்கும் போதுதான் 'அபானனாக' மாறுகிறது.
பிராணனாக சலிக்கும் போது, உள்ளிருக்கும் சக்தியோடு ஒன்றியிருக்கும் ஜீவ சக்தியான வாயு... அபானனாக சலிக்கும் போது, உலகவாழ்வோடு நம்மை இணைத்து விடுகிறது.
இறைவனின் பேரருளால், நமது ஜீவனை, அதன் மூலமான ஆத்மாவோடு சங்கமிக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பு (உந்துதல்) ஏற்படும் போது, வெளியே சலித்துக் கொண்டிருக்கிற 'அபானனான' ஜீவ சக்தி வாயுவை, 'பிரணாயமம்' என்ற இறைவனின் உந்து சக்தியினால் (சிவ மந்திரம்) 'பிராணனாக' , அதன் மூலமான 'சுழுமுனையில்' (இரு புருவங்களுக்கு இடையேயான பகுதி), அந்த உற்பத்தி ஸ்தானத்தில் நிலை நிருத்தும் போது, ஜீவ சக்தியான வாயு, அதன் மூலமான 'சகஸ்திரத்தில்' ஒடுங்கிவிடுகிறது.
இந்த 'ஜீவன் - சிவனாகும்' நுட்பத்தைத்தான், இந்தப் பாடலில் வடித்திருக்கிறார்... திருமூலப் பெருமானார். பெருமானாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'திருமந்திரம்தான்'!
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment