'கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி' (திருக்குறள் ; இல்லறவியல் : குறள் எண் 115)
'கேடும், பெருக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல. ஆதலால் உள்ளத்தில் நடுவுநிலைமையுடன் இருப்பதுதான் சான்றோர்களுக்கு அழகாகும்...' என்பதாகத்தான் பொதுவான கருத்துரைகள் உரைக்கின்றன.
இவை மேலோட்டமாகப் பார்க்கும் போது, உண்மையாக இருப்பினும், சற்று ஆழ்ந்து சிந்திக்கும் போது, மிக உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
ஆதலால்தான், 'ஔவைப் பிராட்டியார்', திருகுறளைப் பற்றிக் கூறும் போது, 'அணுவைத் துளைத்து... அதில் ஏழ் கடலைப் புகுத்திக்... குறுகத்தரித்த குறள்' என்று வருணிக்கிறார்.
இந்தக் குறளில் மூன்று முக்கியமான சொல்லாடல்களை வள்ளுவர் கையாண்டிருக்கிறார். 'கேடு... 'பெருக்கம்'...'கோடாமை'.
நமது முன் வினைகளின் விளைவுகளால், நாம் 'பாபம்'... 'புண்ணியம்' என்ற இரண்டையும் சுமந்து கொண்டு, இவை இரண்டும் விளைவிக்கும் 'இன்பம் - துன்பம்' என்ற இடைவிடா 'இரட்டைச் சுழல்களை' அனுபவித்து வருகிறோம். இது உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொதுவான அனுபவமாக இருக்கிறது. இந்த பாப - புண்ணியங்களைத்தான், வள்ளுவர், 'கேடு - பெருக்கம்' என்ற இரு சொற்களால் வருணிக்கிறார்.
இன்பம் வரும் போது துள்ளுகிற மனம், துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறது. இவையிரண்டுமே நமது பூர்வத்தில், நாம் 'பற்றுடன்' செய்திருக்கிற 'கர்ம வினைகளின் விளைவுகளால்தான்' விளைந்திருக்கிறது, என்ற 'ஞானம்' வரும் போதுதான், 'கோடாமை' என்ற 'பற்றற்ற நிலையில்' (செயல்களின் விளைவுகளில் பற்று வைக்காமல்...) செயல்களை மேற்கொள்ளும் பக்குவம் வந்து சேர்கிறது.
'இது எனக்கு நன்மை அளிக்கக் கூடியது' என்று நினைத்து 'அதிக விருப்பத்துடனும்'... 'இதில் எனக்கு எதுவும் நன்மை கிடைக்கப் போகிறதில்லை' என்ற 'விருப்பமற்றும்... செயலாற்றுவதிலிருந்து மனம் விடுபட்டு, இந்தச் செயல்கள் 'எனக்குண்டான கடமை' என்றுணர்ந்து, அதன் 'பலன்களில் பற்று வைக்காமல்'. செயல்களின் 'பூரணத்தை' மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதுதான்... வள்ளுவப் பெருந்தகை உணர்த்தும் 'கோடாமை'. என்ற 'ஞானியர்க்கான குணம்'.
ஆகவே, 'அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பாபங்களும் - புண்ணியங்களும் நிறைந்திருக்கிற வாழ்வில், அவற்றிலிருந்து விடுபட்டு, தாம் மேற்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளும் செயல்களை 'பற்றற்று' அணுகுவதுதான், சான்றோர்களான ஞானிகளின் பெருமையாக இருக்கிறது.'... என்பதுதான் இந்தக் குறளின், உள்ளார்ந்த பொருளாக இருக்கிறது.
ஞான வள்ளலான 'வள்ளுவப் பெருந்தகையின்' ஈரடி வெண்பாக்கள், ஏழு கடல்களையொத்த சொற்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அதில் நீந்தி, முழுகி முத்தெடுப்பவர்களே பாக்யவான்கள்!
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment