Wednesday, October 12, 2022

'கிரகங்களை எள்ளி நகையாடுதல் கூடாது...!', ஒரு ஜோதிடருக்கு, மகா பெரியவர் அருளியது!


 

பெரியவரின் தரிசனத்திற்காக வந்த ஜோதிடர் ஒருவர், 'எனது குடும்பமோ பெரியது... ஆனால், வருமானமோ மிகவும் குறைவாக இருக்கிறது. எனது தொழிலிருந்து வரும் வருமானம் வாழ்க்கை நடத்துவதற்கே போதாமலிருக்கிறது பெரியவா!' என்றார்.

சற்று அமைதியாக இருந்த பெரியவர், 'ஓ, உனது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில்தானே வசித்துக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'இல்லை பெரியவா, அதில் எனது அண்ணார் இருக்கிறார். நான் அந்த வீட்டிற்கு மேற்குப் புறமாக ஒரு வாடகை வீட்டில் இருக்கிறேன்' என்றார். அதற்குப் பெரியவர், 'அங்கு நீ இருக்க வேண்டாம், உங்களது பூர்வ வீட்டின் கிழக்குப் புறமாக, ஒரு பழைய மாட்டுக் கொட்டகை இருக்கிறது அல்லவா? அங்குதான், உன் முன்னோர்கள் பாரம்பரியமாக அம்பாள் பூஜையை நடத்தி வந்தார்கள். ஆதலால், அந்த இடத்தில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு குடியிருந்து வா!. என்றார்.

பெரியவர் தொடர்ந்து, 'இன்னொன்றையும் நீ மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அனைத்துக் கிரகங்களையும் எள்ளி நகையாடுவது போலவோ, தரம் குறைத்தோ, பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாய், குரு நீசன்... சனி பாபி... புதன் வக்கிரன்... என்பதைப் போல. அது போன்று சொல்லக்கூடாது. 'குரு பகவான்' மிக உயர்வான கிரகம். அவர் 'தக்ஷ்ணாமூர்த்தி பகவானின்' சொரூபம். 'சனி பகவான்', 'சூரிய பகவானின்'  புத்திரர், 'ஈஸ்வரன்' என்ற பட்டம் பெற்றவர். அவர்களை முன்னிட்டு இது போன்று சொல்லக்கூடாது. 'கிரக நிலைகளின் அமைவுகள் தற்போது சாதகமாக இல்லை. ஆதலால் தற்போதைய நேரம் சாதகமாக இல்லை.' என்றுதான் சொல்ல வேண்டும்.'

தொடர்ந்து பெரியவர், 'பெற்றோர்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்க்கக் கொண்டு வரும்போது, ஜாதகத்தில் பொருத்தம் இல்லாத போது, அவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைக் கூறி, அவற்றை நிராகரிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பெண்ணுக்கு இன்னும் சிறிது காலம் கழித்துத் திருமணம் செய்யலாம் என்றோ... வரனுக்கு தற்போது தந்தையாகும் பாக்கியம் இல்லாமல் இருக்கிறது என்றோ... கூறலாமே! இன்றைய காலத்தில் முப்பது வயதையும் தாண்டி பெண் குழந்தைகள் இருக்கைறார்கள், கூடுமானவரை, அது போன்ற நிலைகயில் வரும் பெற்றோர்கள் மனம் புண்படும்படியாக பலன்களை சொல்லக் கூடாது. அது போன்ற வரன்களுக்கு, ஜாதகங்களின் முக்கியத்துவத்தை விட, அவர்கள் சார்ந்த குடும்பம், கோத்திரம், அவர்களது மன விருப்பம்... இவை சார்ந்தே பொருத்தம் பார்க்க வேண்டும்' என்றார்.

'உங்களின் அற்வுரையின் படியே இனி நடந்து கொள்கிறேன், பெரியவா!' என்று மகிழ்வுடன் கூறி, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றார் ஜோதிடர்.

(ஸ்ரீ மடத்தில் பணிபுரிந்தவரினால் விவரிக்கப்பட்டது.  மூலம் : 'மகா பெரியவர் தரிசன அனுபவங்கள்' பகுதி - 3.)

நன்றி : ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா Fb யிலிருந்து தொகுக்கப்பட்டது)

தமிழாக்கம்... அடியேன்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...