Wednesday, October 12, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும். பகுதி - 236. 'இராசியின் அமைப்பு உணர்த்து சூட்சுமம்' பாகம் - 6.


இராசின் அமைப்பை,  'காலபுருஷ இராசி' அமைப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சில சூட்சும உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதில் ஒன்றைத்தான், இப்போது பார்க்கப் போகின்றோம்!

'சனி பகவான்'... தர்மத்திற்குக் காவலனாக... கர்மம் என்ற நமது பூர்வ வினைகளை வழி நடத்துபவராக... அதற்கான களங்களை அமைத்துக் கொடுப்பவராக... அவரின் பொறுப்பு, ஜோதிடக் கலையில், மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.

இராசி சக்கரத்தில், 'மகரம்' என்ற இராசியிலும்... 'கும்பம்' என்ற இராசியிலும் 'ஆட்சி பலம்' பெறுகிறவர், 'துலாம்' என்ற இராசியில் 'உச்ச பலத்தையும்', 'மேஷம்' என்ற இராசியில் 'நீச பலத்தையும்' பெறுகிறார்.

இந்த அமைவை, 'கால புருஷ இராசியோடு' ஒப்பிட்டு நோக்கும் போது ;

- 'கால புருஷ இராசியில்' (மேஷ இராசியில்) தனது பலத்தை முழுவதுமாக இழந்து நிற்கிறார்... சனி பகவான். அதாவது, பிறப்பெடுக்கும் ஜீவன், அதன் 'புத்தி சக்தி' வெளிப்படும் வரையில், தனது 'கர்ம வினைகளின்' விளைவுகளை தானாக மேற்கொள்ளும் செயல்களாக்க முடியாது... ஆனால் தனக்கு நேர்வதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... என்பதைத்தான் இந்த அமைவு சுட்டிக் காட்டுகிறது.

- 'கால புருஷ இராசியில்' 7 ஆம் வீடான 'துலா இராசியில்' தனது 'உச்ச பலத்தைப்' பெறுகிறார். எப்போது ஜீவன், தனது புத்தி சக்தியை அடைகிறதோ, அப்போதுதான், அது கர்ம வினைகளால் வெளிப்படும் விளைவுகளை எதிர்கொள்ளத் ஆரம்பிக்கிறது. அதற்கான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றாகக் கூடத் தொடங்குகின்றன..

- 'கால புருஷ இராசியின்' 10 ஆம் வீட்டில், 'மகர இராசியில் தனது 'ஆட்சி பலத்தை பெறுகிறார். அப்போதுதான், ஜீவன் தனது 'கர்ம வினைகளின் விளைவுகளை'... தான் மேற்கொள்ளும் செயல்களாகவோ... தான் எதிர் கொள்ளும் செயலகளாகவோ...அணுகி, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செயல்படுத்த ஆரம்பிக்கிறது.

- 'கால புருஷ இராசியின்' 11 ஆம் வீடான 'கும்ப இராசியில்' தனது 'ஆட்சி பலத்தை' பெறும் போதுதான், 10 ஆம் வீட்டில், ஜீவன்... தான் மேற்கொண்ட அல்லது எதிர்கொண்ட செயல்களின் விளைவுகளை... அவைகள் புண்ணியங்களாக இருந்தால் 'லாபமாகவும்'... பாபங்களாக இருந்தால் 'பாதகமாகவும்' சேர்க்கத் தொடங்குகின்றது. இதைக் குறிப்பிடுவதற்காகத்தான், 'சர இராசிக்கு' 11 ஆம் பாவத்தை 'லாப ஸ்தானமாகவும்' (புண்ணியங்கள்)... 'பாதக ஸ்தானமாகவும்' (பாவங்கள்) அமைத்திருக்கிறார்கள்... ரிஷி புங்கவர்கள்.

தொடர்ந்து ஆய்வோம்...

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...