Friday, May 31, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 2.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும - பகுதி 2.

வேதத்தின் அங்கமே ஜோதிடக் கலை. வேதத்தின் மீமாம்ஸம் என்ற பிரிவின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அமைகிறது.

இதன் பயன்பாடு... வேதகாலத்தில் இருந்து தற்போதைய கலிகாலம் வரை விரவி இருக்கிறது. காலத்திற்கேற்ப அதன் அணுகுமுறையில்தான் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தர்மத்தையே ஆதாரமாகக் கொண்டு மனித வாழ்வு அமைந்தபோது, ஆன்மீக வளர்ச்சியின் ஆதரமாக இந்த ஜோதிடக்கலை இருந்தது.

தர்மத்தின் நடைமுறையில் குறைவு ஏற்பட... ஏற்பட... மனிதர்களின் செயல்களில் பொதுநலம் குறைந்து, சுயநலம் மேலோங்க ஆரம்பித்தது. இந்த சுயநலத்தின் போக்கு, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அமைய காரணமானது. இந்த ஏற்றத் தாழ்வுகளால் இன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... என சமூகம் வேறுபட்டு நின்றது. துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்கள்... தமக்கு ஏன் இந்த நிலை... என்று கேள்வியை எழுப்பிய போது... ஜோதிடத்தின் அணுகுமுறையில் மாற்றம் தேவைப்பட்டது.

இந்த மாற்றத்தை புரதான ரிஷிகள்... வேதத்தை ஆதாரமாகக் கொண்டும்... தமது தீர்க்க தரிசனத்தைக் கொண்டும்... ஜோதிட விதிகளை வகுத்து... அதன் மூலம் துன்பப்படும் ஜீவர்களுக்கு ஆறுதலையும்... துன்பத்திலிருந்து நீங்கும் வழிகளையும்... கண்டறிந்து வழி நடத்தினார்கள்.

காலங்களின் மாற்றம் நீண்டு. தற்போதைய கலிகாலத்தில் தர்மத்தின் வழி நடக்கும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த விட்ட நிலையில்... இந்தக் கலையில் மீண்டும் அணுகுமுறை மாற்றங்கள் தேவைப்படுகிறது.

காரணம், இன்றைய சமூகம், உள் வாழ்வான ஆன்மீகத்திலிருந்து... வெளி வாழ்வான உலக வாழ்விற்கு... வெகுவாக ஈர்க்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வுதான் நிரந்தரம் என்றும்... அதிலிருக்கும் அனைத்து அங்கங்களையும் தாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும்... விஞ்சி நிற்கும் வேளையில்... உலக வாழ்வின் நிதர்சன உண்மையை இந்த கலை ஒன்றின் மூலமே உணரவைக்க முடியும்.

இந்தப் பிறவியின் நோக்கம்... பிறவி என்ற தொடர் ஓட்டத்தை முடித்துவைப்பதிற்கான ஒரு வாய்ப்பு... என்பதை உணர வேண்டியதே.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது...' என்பது எவ்வளவு உண்மை என்பதை... இந்தப் பிறவியின் மூலத்தை ஆய்ந்தாலே அறிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ கோடி உயிரணுக்களின் போராட்டத்தில்... ஒரு உயிரணுவுக்கே... இந்த மனித பிறவியை அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. அதற்கான வாழ்வு காலமும் வெகு சொற்பமாக அமைகிறது. இந்த சொற்பக் காலத்திற்குள்... இந்த ஜீவன் தனது கடமைகளையும் முடிக்க வேண்டியுள்ளது... அதே வேளையில் மீண்டும் பிறவாதிருப்பதிற்கும் உழைக்க வேண்டியுள்ளது.

இந்த பூர்வ தேவ ரகசியத்தை... இந்த ஜோதிடக் கலை ஒன்றின் மூலமே வெளிப்படுத்த முடியும்.

ஸாய்ராம்.


திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 2 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 2 : 


'கடுகைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்தக் குறள்' என்பதைச் சற்று மாற்றி... 'அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்தக் குறள்...' என்று அமைத்தார் ஔவையார்.

கண்ணுக்குத் தெரியும் கடுகை விட, கண்ணுக்குத் தெரியாத அணுவைத் துளையிட்டு, அந்தத் துளையின் வழியாக ஏழ் கடலையும் புகுத்தக் கூடிய அளவில், செறிவான பொருள்... உண்மையைக் கொண்டதாக... திருக்குறளுக்கு புகழாரம் சூட்டியிருப்பார் ஔவையார்.

ஏழே சொற்களைக் கொண்டமைந்த இந்த ஈரடி வெண்பா தரும் எண்ணற்ற சிந்தனைகள் அளவிடமுடியாதவைதான்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

என்ற குறள் உணர்த்தும் பொதுவான கருத்து... தீயின் ஜுவாலை சுடுவதை விட, ஒருவரின் நாவிலிருந்து வெளிவரும் கடினமான சொற்கள் கேட்பவரை காயப்படுத்தி... அதை என்றும் ஆறாத காயமாக... நினைவில் நிறுத்தி வைக்கும் என்பதுதான்.

இந்தக் குறளிளமைந்த ஒரு சொல்... இந்த மையக் கருத்தின் ஆழத்தை நமக்கு உணர்த்தும்.  அது 'உள்' என்ற சொல்தான். அதை நீக்கி விட்டு...

தீயினாற் சுட்டபுண் ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

... எந்று... இந்தக் குறளைக் கேட்க நேர்ந்தாலும், பெருமளவில் பொருளில் மாறுபாடு ஏற்படாது.

பின்... எதற்காக இந்த 'உள்' என்றசொல்லை... இந்த 'வார்த்தை சித்தர்' பயன்படுத்துகிறார்...!

தீயின் ஜுவாலை உடலைத் தாகும் போது அது சுலபத்தில் ஆறாத புண்ணாகிக் கடும் துன்பத்தைத் தருகிறது. சிறிது சிறிதாக அந்தப் புண் ஆறி, உடலின் 'உள்' புறத்தில் முழு நிவாரணத்தையும்... உடலின் வெளிப்பகுதியில், என்றும் நீங்காத வடுவாகவும்... இருக்கும். இதையே... 'தீயினாற் சுட்டபுண் 'உள்'ளாறும்...' என்ற சொற்களின் மூலம் அளிக்கிறார்.

அதுவே... வாயிலிருந்து வரும் சுடு சொற்கள் அதை எதிர்கொள்ளும் மனிதரின் உடலில் எந்தக் காயத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவரின் மனதின் 'உள்ளே' என்றும் ஆறாத புண்ணாகவும்... அதன் நினைவுகள் என்றும் நீங்காத வடுவாகவும் தொடரும் என்பதையே...'...ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்று பூரணம் செய்கிறார்.

இந்த...'உள்'... என்ற ஒரு சொல்லைக் கொண்டு... தீயினால் ஏற்படும் தாக்கம் உள்ளே ஆறிவிடும் ஆனால் வெளியே என்றும் நீங்காத வடுவாகத் தோன்றும்... என்பதையும், நாவினால் சுடும் சொற்கள் வெளியே ஆறிவிடும் போலத் தோன்றினாலும், ஆனால் மனத்துள்ளே என்றும் நீங்காத வடுவாக நீடிக்கும்... என்று பகரும் ஞானம்தான் என்னே...!

ஸாய்ராம்.


ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 1.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 1. 

ஜோதிடக் கலையின் அணுகுமுறையில் பிரதானமாகவும்... ஜீவனின் வாழ்வு இரகசியத்தை வெளிப்படுத்தும் மூலமாகவும் திகழ்வது 'திரிகோணம்' என்ற அமைவு.

ஜாதகச் சித்திரத்தில் லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானத்தையும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானத்தையும்... பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானத்தையும்... ஒரு முக்கோணமாக இணைக்கும் போது இந்த 'திரிகோணம்' என்ற அமைவு பூரணமாகிறது.

இது உணர்த்தும் சூட்சுமம் என்னவென்றால்... எத்தனையோ பிறவிகளில் ஜீவன் பெற்றுள்ள... மொத்த வினைகளுக்கான சுமையிலிருந்து (கர்மா - சஞ்சித கர்மா)... இந்த பிறவிக்கான சமமாகக் கலக்கப்பட்ட இன்ப - துன்ப வினைகளை (கர்மா - பிராரப்த கர்மா) சுமந்து கொண்டு இந்தப் பிறவியை எடுக்கிறது ஜீவன். இந்தக் கர்மாவின் வினைகளை இந்த ஜீவன் எதிர்கொள்ளும் போது...அதிலிருந்து விளையும் விளைவுகளை (கர்மா - ஆகாமிய கர்மா) இந்த பிறவியில் அனுபவித்தும்... மீந்துவதைக் கொண்டுபோய் மொத்த வினைகளான 'சஞ்சிதத்திலும் சேர்த்துவிடுகிறது.

இந்த சூட்சுமத்தைத்தான்... இந்த அமைவான 'திரிகோணம்' உணர்த்துகிறது.

லக்னம் என்ற 1 ஆவது ஸ்தானம்... முதல் திரிகோணமாக... 'சஞ்சித கர்மாவகவும்'... அது ஜீவனுக்கு பிறவியாகவும்... பூர்வம் என்ற 5 ஆவது ஸ்தானம்... இரண்டாவது திரிகோணமாக... 'பிராரப்த கர்மாவாகவும்'... பூர்வ வினைகளாகவும்...பாக்கியம் என்ற 9 ஆவது ஸ்தானம்... மூன்றாவது திரிகோணமாக... ஆகாமிய கர்மாவாகவும்... வகைப்படுத்தி... இந்த ஜீவன் இந்தப் பிறவியில்அனுபவிக்கும் பாக்கியங்களாகவும்... இந்த 'திரிகோண' அமைவு பூரணப்படுகிறது.

ஸாய்ராம்.



Thursday, May 30, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 1 : எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 1 : 

காலத்தால் முற்பட்டதும்... காலத்திற்கேற்ப கருத்துக்கள் என்ற ஞானத்தைப் பொலியும் 'சந்திரகாந்தக் கல்லை' போன்றதும்தான் திருக்குறள்.

எண்ணற்ற அறிஞர்கள்... எவ்வளவு முறை திருவள்ளுவரின் குறள்களுக்கு விளக்க உரை அளித்தாலும்... மீண்டும், மீண்டும் அந்தக் குறள்கள் புதுப் புது அர்த்தங்களை வாரி வழங்கிக் கொண்டிருப்பதுதான்... இந்த நூலுக்கான பெருமையே.


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' 

எந்தக் கருத்தையும், எவரிடம் இருந்து கேட்க நேர்ந்தாலும், அதில் இருக்கும் உண்மையை அறிந்து கொள்வதே அறிவு என்பதே இந்தக் குறளின் பொதுக் கருத்தாக அறியப்படுகிறது. 

அது உண்மைதான்... ஆனால் இந்தக் குறளை சற்று ஆழமாகப் பார்க்கும் போது... எது அறிவு...? என்ற கேள்விக்கு, வள்ளுவர் அளிக்கும் பதிலில் பொதிந்துள்ள ஞானம்தான் நம்மை வியக்க வைக்கும். வெறும் ஏழு சொற்களை மட்டும் வைத்து ஒரு வெண்பாவை வடித்த எழுத்து சித்தர்... தனது ஒவ்வொரு சொல்லையும் எவ்வளவு கவனமாகக் கையாள்கிறார்...?  

இந்தக் குறளில் அவர் கையாண்டிருக்கும் இரண்டு சொற்கள்... நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒன்று... 'பொருள்'... இன்னொன்று 'யார்யார்'... என்ற சொற்றாடல்கள்.  

இயல்பாகவே ஒருவரின் சொல்லைத்தான் நாம் முதலில் கேட்கிறோம். அந்த சொல்லிலேயே நாம் நின்றுவிடாமல்... அதன் பொருளைக் கொண்டே அந்த சொல்லை அளவிட வேண்டும் என்ற ஒரு நுட்பத்தை... 'பொருள்' என்ற சொல்லின் மூலம்  நமக்கு அளிக்கிறார். 

அடுத்ததாக, எப்போதும் நாம்... எந்த விடயத்தைக் கேட்க நேர்ந்தாலும்... அந்த விடயத்தின் தன்மையை ஆராய்வதைவிட்டு... அதை யார் சொன்னது...? என்ற கேள்வியைத்தான்... பொதுவாக முனவைப்போம். அந்த வரைமுறையை... இந்த 'யார்யார்' என்ற சொல்லின் மூலம்... உடைத்து எறிகிறார் வள்ளுவர். 

கேட்கும் விடயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்... அவர் கற்றவராகவோ / கல்லாதவராகவோ... செல்வந்தராகவோ / வறியவராகவோ... வயதில் சிறியவராகவோ / பெரியவராகவோ... என்ற எண்ணற்ற விதமான மனிதர்களை... அந்த சொல்லாடலில் கொண்டுவந்து இணைக்கும்... வள்ளுவரின் ஞானம்... அளவிட முடியாதது.                   

அந்த அளவிடமுடியா ஞானம், நமக்கு உணர்த்துவது... 'ஒரு விடயத்தை நாம் கேட்க நேரும் போது... அது உணர்த்தும் உண்மையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்...' என்ற நுட்பத்தைத்தான். 

ஸாய்ராம்.

Wednesday, May 29, 2019

ஸாயீயின் புகழ் பாடும் பாடல் : 1

ஸாயீயின் புகழ் பாடும் பாடல் : 1

எல்லை என்றில்லாமல் எங்கும் நிறைபவனே
இல்லை எனாதபடி எதிலும் உறைபவனே
எங்கோ பிறந்திருந்த அறியாத அடியேனை
கருணை மனம் கொண்டு காத்தருள செய்பவனே.

மாவலியின் முடிமீது ஓரடி வைத்தான் - அந்த
மலர்ப்பாதம் தனைக் கொண்டு சீரடி அளந்தான்
நாளொன்றாய் வித விதமாய் உணவை இரந்தான் - அந்த
உணவோடு அவர் சேர்த்த பாபம் களைந்தான்.          ( எல்லை...)

பரப்பிரமமான தன்னை பக்கிரி என்றான் - வாழும்
அனைவர்க்கும் ஆண்டவனே உரிமை என்றான்
உலகோரின் வினை தீர்க்க விறகை எரித்தான் - அந்த
வினை மீண்டும் தோன்றாமல் விபூதி அளித்தான்.      ( எல்லை...)

பக்தர்களை குருவியென அன்பாய் அழைத்தான் - ஏழ்
கடல் தாண்டி இருந்தாலும் நூலால் இழுத்தான்
அவர் வாழ்வின் சூட்சுமங்கள் அனைத்தும் அறிந்தான் - அந்த
அடியார்க்கு ஆனந்த அருளைப் பொழிந்தான்.      ( எல்லை...)

ஸாய்ராம்.

(அடியேன் மனதில் 29,01,2004 அன்று ஸாயீ மகான் அருளிய பாடல்)



மனம் என்பது என்ன...? பகுதி- 1

மனம் என்பது என்ன...?

உடலின் எந்தப் பகுதியில் மனம் அமைந்திருக்கிறது...? அதன் வடிவம் என்ன...? அதை அறிந்து கொள்ளும் உபாயம் ஏதும் இருக்கிறதா...?                                                                                                                                                                                                        இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஆய்ந்து அறியும் அறிவின் இயலில் பதில் இல்லாமல் போகும் போதுதான்... மனம் என்றால் என்ன என்ற அனுபவித்து உணரும் ஆன்ம இயலில் தேடல் செல்கிறது.                                                                                                                                                                                                                        உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப் படுத்தும் வல்லமை இந்த மனதில் ஒளிந்திருக்கிறது என்ற உண்மையை உணரும் போதுதான் இந்த அற்புதத் தேடலின் அவசியம் புரிகிறது.                               

உடல்... ஜீவன்... ஆத்மா என்ற மூன்று நிலைகளின் கூட்டுதான் இந்த மனித வாழ்வு. ஆத்மா என்ற மகா சக்தியிலிருந்து உருவானதுதான் ஜீவன் என்ற உயிர். அந்த ஜீவனுக்கான வடிவமே இந்த உடல் என்ற உருவம். ஆத்மா நிரந்திரமானது... ஏனெனில் அது என்றும் இருக்கும் இறைவனின் சொரூபம். உடல் மாறுதலுக்கும், அழிவிற்கும் உட்பட்டது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு காரணத்திற்காக உருவானதே... ஜீவன் என்ற பிறவி.

பிறவிக்குக் காரணம் கர்மா என்ற பூர்வ வினைகள்தான். எத்தனையோ பிறவிகளில் இந்த ஜீவன் சேர்த்துக் கொண்ட மொத்த வினைகளின் தொகுப்பிலிருந்து (சஞ்சித கர்மா)...  இந்த பிறவிக்கான இன்ப - துன்ப சம கலவையின் ஒரு தொகுப்பை (பிராரர்த்த கர்மா) அனுபவிப்பதற்காக  ஒரு பிறவியை அடைகிறது. இந்தப் பிறவியில்... தனது வினைகளை இன்பமாகவும்... துன்பமாகவும் அனுபவிக்க அதற்கேற்ற உடலும் அமைகிறது.

அந்த உடலில், இந்த ஜீவன் ஒரு மனமாக உருவெடுக்கிறது, அந்த மனம் என்ற ஊற்றுதான் தொடர்ந்து... இன்பம் மற்றும் துன்பம் என்ற தொடர் வினைகளை ஜீவனின் வாழ்வு முழுவதும் சுரந்து கொண்டிருக்கிறது. அந்த ஊற்று நின்றுவிடும் போது... ஜீவனின் வாழ்வும்... இந்த உடலிலின் பயணத்தை முடித்துக் கொள்கிறது.

அந்த இன்பத்திற்கும்... துன்பத்திற்கும் மூலமான கர்ம வினைகள்... ஜீவனின் மனதில்... எண்ணங்களாக வெளிப்படுகிறது. அந்த எண்ணங்களே, இந்த ஜீவனின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஆதலால், மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகிறது.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...