Thursday, May 30, 2019

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 1 : எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருக்குறள் உணர்த்தும் ஞானம் - பகுதி 1 : 

காலத்தால் முற்பட்டதும்... காலத்திற்கேற்ப கருத்துக்கள் என்ற ஞானத்தைப் பொலியும் 'சந்திரகாந்தக் கல்லை' போன்றதும்தான் திருக்குறள்.

எண்ணற்ற அறிஞர்கள்... எவ்வளவு முறை திருவள்ளுவரின் குறள்களுக்கு விளக்க உரை அளித்தாலும்... மீண்டும், மீண்டும் அந்தக் குறள்கள் புதுப் புது அர்த்தங்களை வாரி வழங்கிக் கொண்டிருப்பதுதான்... இந்த நூலுக்கான பெருமையே.


'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' 

எந்தக் கருத்தையும், எவரிடம் இருந்து கேட்க நேர்ந்தாலும், அதில் இருக்கும் உண்மையை அறிந்து கொள்வதே அறிவு என்பதே இந்தக் குறளின் பொதுக் கருத்தாக அறியப்படுகிறது. 

அது உண்மைதான்... ஆனால் இந்தக் குறளை சற்று ஆழமாகப் பார்க்கும் போது... எது அறிவு...? என்ற கேள்விக்கு, வள்ளுவர் அளிக்கும் பதிலில் பொதிந்துள்ள ஞானம்தான் நம்மை வியக்க வைக்கும். வெறும் ஏழு சொற்களை மட்டும் வைத்து ஒரு வெண்பாவை வடித்த எழுத்து சித்தர்... தனது ஒவ்வொரு சொல்லையும் எவ்வளவு கவனமாகக் கையாள்கிறார்...?  

இந்தக் குறளில் அவர் கையாண்டிருக்கும் இரண்டு சொற்கள்... நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. ஒன்று... 'பொருள்'... இன்னொன்று 'யார்யார்'... என்ற சொற்றாடல்கள்.  

இயல்பாகவே ஒருவரின் சொல்லைத்தான் நாம் முதலில் கேட்கிறோம். அந்த சொல்லிலேயே நாம் நின்றுவிடாமல்... அதன் பொருளைக் கொண்டே அந்த சொல்லை அளவிட வேண்டும் என்ற ஒரு நுட்பத்தை... 'பொருள்' என்ற சொல்லின் மூலம்  நமக்கு அளிக்கிறார். 

அடுத்ததாக, எப்போதும் நாம்... எந்த விடயத்தைக் கேட்க நேர்ந்தாலும்... அந்த விடயத்தின் தன்மையை ஆராய்வதைவிட்டு... அதை யார் சொன்னது...? என்ற கேள்வியைத்தான்... பொதுவாக முனவைப்போம். அந்த வரைமுறையை... இந்த 'யார்யார்' என்ற சொல்லின் மூலம்... உடைத்து எறிகிறார் வள்ளுவர். 

கேட்கும் விடயத்தை யார் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்... அவர் கற்றவராகவோ / கல்லாதவராகவோ... செல்வந்தராகவோ / வறியவராகவோ... வயதில் சிறியவராகவோ / பெரியவராகவோ... என்ற எண்ணற்ற விதமான மனிதர்களை... அந்த சொல்லாடலில் கொண்டுவந்து இணைக்கும்... வள்ளுவரின் ஞானம்... அளவிட முடியாதது.                   

அந்த அளவிடமுடியா ஞானம், நமக்கு உணர்த்துவது... 'ஒரு விடயத்தை நாம் கேட்க நேரும் போது... அது உணர்த்தும் உண்மையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்...' என்ற நுட்பத்தைத்தான். 

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...