பூர்வ புண்ணிய ஸ்தானம்... ஒரு ஜீவன் சுமந்து கொண்டு வந்திருக்கிற, இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை' சுட்டிக் காட்டுகிறது.
பொதுவாக, இந்தக் 'கர்ம வினைகளின் விளைவுகளை', பாபம் - புண்ணியம் என்ற இரு கூறுகளாகப் பகுத்துக் கொள்ளலாம்.
இதில் 'புண்ணிய பலன்களை, ஜாதகரின் பாக்கிய ஸ்தானத்தையும், பாக்கியாதிபதியையும், அதனோடு தொடர்பு கொண்டுள்ள கிரகம், பாக்கியாதிபதி சாரம் பெற்ற கிரகம்... அவற்றின் தசா - புத்தி - அந்தரங்களைக் கொண்டு ஜாதகர், எப்போது... எவ்வாறு... அனுபவிப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, 'மேஷ லக்னத்திற்கு', 'சிம்ம இராசி', பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 'சூரிய பகவான' பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். 'தனுர் இராசி' பாக்கிய ஸ்தானமாகவும், 'குரு பகவான்' பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். பாக்கிய ஸ்தானத்திலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கியமாக அமைகிறது. இந்த பாக்கியாதிபதியாகிய. 'குரு பகவானின்' ஸ்தானம்... பலம்... அதனோடு தொடர்புடைய கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... என, ஆய்ந்து, அவற்றின் தசா - புத்தி - அந்தரங்களின் வழியாக, ஜாதகர் அனுபவிக்கும் 'புண்ணிய பலன்களை' கணித்தறியலாம்.
அது போல, 'கர்ம வினைகள்' விளைவிக்கும்' பாப வினைகளை, ஜாதகரின் 'அட்டம ஸ்தானத்தை' (8 ஆம் பாவம்), ஆதாரமாகக் கொண்டு ஆய்ந்து அறிந்து கொள்ளலாம். அட்டம ஸ்தானம்... ஸ்தானாதிபதி... இணைந்திருக்கும் கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... அவற்றின் தசா - புத்தி - அந்தரம், இவற்றின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
அட்டம ஸ்தானத்திலிருந்து, பூர்வ புண்ணிய ஸ்தானம், 10 ஆம் பாவமாக அமைகிறது. ஒரு ஜீவன் தான் 'மேற் கொள்ளும்' அல்லது 'எதிர் கொள்ளும்' செயல்களின் மூலமாகத்தன், இன்ப - துன்பங்களை அனுபவிக்கிறது. ஆகவே, இந்த அட்டம ஸ்தானத்தின் வாயிலாக, துன்ப விளைவுகளை விளைவிக்கும் 'கர்ம வினைகளை' அறிந்து, அதற்கேற்றாற் போல, அதை எதிர் கொள்ள, இந்தக் கணிப்பு உதவி செய்கிறது.
உதாரணமாக, 'ரிஷப லக்னத்திற்கு', 'கன்னி இராசி' பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும், 'புத பகவான்'. ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். அது போல, 'தனுர் இராசி' அட்டம ஸ்தானமாகவும், 'குரு பகவான்' ஸ்தானாதிபதியாகவும் அமைகிறார். அட்டம ஸ்தானத்திற்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் 'ஜீவன - கர்ம' பாவமாக அமைகிறது. ஆகவே, 'குரு பகவானின்' நிலை... அதனோடு தொடர்பு பெற்றுள்ள கிரகம்... சாரம் பெற்ற கிரகம்... தசா - புத்தி - அந்தரங்கள் வழியாக, ஜாதகர் அனுபவிக்கும் துன்ப நிலைகளை வெளிப்படுத்தும், கர்ம வினைகளின் பாப வினைகளை அறிந்து, அதை எதிர் கொள்ளலாம்.
ஸாய்ராம்.
