Tuesday, March 8, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 216. 'திரிகோணம் உணர்த்தும் சூட்சுமம்'


'ஜோதிடக் கலை'... ஒரு ஜீவனின் 'பிறப்பு முதல் மறைவு' வரையிலான வாழ்வை மட்டுமல்ல, அந்த ஜீவன், 'பரம சொரூபத்திலிருந்து' வேறுபட்டு வந்ததிலிருந்து, மீண்டும் அந்த சொரூபத்தில் சேரும் காலம் வரையிலான சூட்சுமங்களையும் அறிவிக்கும் கலையாக அமைந்திருக்கிறது.

ஆதலால்தான், இந்தக் கலை, 'வேதத்தின்', 'ஆறு அங்கங்களில்' ஒன்றாக வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையை வகுத்தளித்த ரிஷிகள், இந்தக் கலையை தெய்வீக உணர்வுடன் அணுக வேண்டும் என்பதற்காகத்தான், இதைக் கையாள்பவர்களை 'தெய்வக்யஞர்கள்' என்று வகுத்தும் வைத்தனர்.

இதற்குச் சாட்சியாகத்தான், நவக்கிரகங்கள் அமைந்திருக்கிற 'இராசிச் சக்கரத்தை', திரிகோணம் (1,5,9)... கேந்திரம் (1,4,7,10)... உப ஜெயம் (2, 11)... மறைவு (3,6,8,12)... என்பவையான சூட்சும ஸ்தானங்களாக வகுத்தளித்துள்ளனர்.

இதில், 'திரிகோணம்' என்பது ஜீவனின் 'பிறவி இரகசியத்தை' உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. 'லக்னம்' என்ற 1 ஆம் பாவம் ஜீவனின்' பிறப்பைப் பற்றியும்... 'பூர்வம்' என்ற 5 ஆம் பாவம் ஜீவனின் இந்தப் பிறப்பிற்கான 'கர்ம வினைகளையும்'... 'பாக்கியம்' என்ற 9 ஆம் பாவம், ஜீவன் அந்த கர்ம வினைகளை எவ்வாறு அனுபவிக்கப் போகிறது என்ற சூட்சுமங்களையும்... உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.

ஜீவன் தனக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற வாழ் நாட்களில், இந்தத் 'திரிகோண' அமைவுகள் உள்ளடக்கிக் கொண்டுள்ள சூட்சுமங்களை, எவ்வாறெல்லாம் இந்த 'உலக வாழ்வில்' கடந்து போகப் போகிறது...? என்பதை, கேந்திரங்களும்... உபஜெய ஸ்தானங்களும்... மறைவு ஸ்தானங்களும்...விரிவாக வகுத்தளிக்கின்றன.

'திரிகோணம்' அளிக்கின்ற 'கர்ம வினைகளின் சூட்சுமங்களை' அறிந்து, கேந்திரம், உபஜெயம் மற்றும் மறைவு ஸ்தானனங்கள் வழியாக, நவக்கிரகங்களின் அமைவுகளை மூலமாகக் கொண்டு, உலக வாழ்வில், அந்தக் கர்ம வினைகளைக் களைந்து, அதிலிருந்து மீண்டு, மீண்டும் ஒரு பிறவியை எடுத்து விடாமல், தனது மூலமான 'ஈஸ்வர சொரூபமான' பரம சொரூபத்தில் சேர்ந்து விடும் வாழ்வைத்தான், ஜீவன், இந்த உலக வாழ்வில் வாழ்ந்திட வேண்டும்.

இதற்கான முன்னறிவைப்பத்தான் திரிகோணம், ஜீவனுக்கு உணர்த்தி அருள்கிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...