Friday, March 4, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 214. 'குரு பகவான்'


 'குரு பகவான்'... ஜோதிடக் கலையில் ஆர்வமுள்ள அனைவருமே, வியந்து பார்க்கும் ஒரு கிரகமாக இருக்கிறார். நவக்கிரகங்களில் ஒருவராக இருந்தாலும், 'சுபக் கிரகங்களில்' இவர்தான் முதன்மையானவர்.

இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும், இருவகையான வாழ்வை எதிர்கொள்கிறது. அவை, 'உலக வாழ்வு' மற்றும் 'உள் வாழ்வு' என்ற ஆன்மீக வாழ்வு. 

உலக வாழ்வு, முற்றிலும் ஜீவர்களின் 'கர்ம வினைகளை' பொருத்ததாகவே அமைகிறது. அவரவர்களின் 'கர்ம வினைகள்' விளைவிக்கும் விளைவுகளான 'இன்ப - துன்பங்களை' அவை அனுபவித்துக் கடந்து போகின்றன. இந்தக் 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்', ஜோதிடச் சித்திரத்தில் 'நவக்கிரகங்களின் அமைவுகள்' சுட்டிக் காட்டுகின்றன. 'குரு பகவானும்' ஏனைய கிரகங்களைப் போல, தனது 'பாவாங்களுக்கு' ஏற்ப 'கர்ம வினைகளின் விளைவுகளை' அளிப்பதற்குத் தவறுவதில்லை.

ஆனால், 'நிழல் கிரகங்களைத்' தவிர்த்து (ராகு - கேது பகவான்கள்) ஏனைய கிரகங்களுக்கு விதி விலக்காக, 'உள் வாழ்வு' என்ற ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டும் ஒரே கிரகமாக 'குரு பகவான்' மட்டுமே அமைந்து விடுகிறார். இவரின் ஆளுமைதான், ஒரு ஜீவனின் 'உலக வாழ்வு' எப்போது 'உள் வாழ்வின்' பக்கம் திரும்புகிறது... என்பதை நிர்ணயிக்கிறது.

ஏனைய கிரகங்கள் அனைத்தும், அதனதன் உச்சம்... ஆட்சி... நீசம்... என்ற 'கிரக பலத்தையொட்டியும்', அதனதன் பாவம்... ஆதிபத்தியம்... மறைவு...என்ற 'ஸ்தான பலத்தையொட்டியும்'... பலன்களை அளிப்பதுடன் நின்று விடுகின்றன. ஆனால், 'குரு பகவான்' மட்டுமே, அவரது 'கிரக பலம்' எவ்வாறு இருந்தாலும்... அவரது 'ஸ்தான பலம்' எவ்வாறு இருந்தாலும், ஒவ்வொரு ஜீவனையும் அவரின் 'தசாக் காலத்திலோ'... 'புத்திக் காலத்திலோ'... 'அந்தரக் காலத்திலோ'... உள் வாழ்வின் பாதையில் திருப்பி விடும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்.

ஒரு ஜீவனின் 'பூர்வத்தில்', ஏதாவது ஒரு சிறிய புண்ணிய பலன்... இருந்தாலே போதும், அதைப் பயன்படுத்தி, தனது 'ஹோரா' காலத்திலாவது, அந்த ஜீவனை 'உள் வாழ்வின்' பாதையில் திருப்பி விடுவார். அதைத்தான் 'மௌன தீக்ஷா' என்று அழைக்கிறோம்.

அந்த தீக்ஷையைத்தான், 'சனாதன முனிவர்கள்' நால்வருக்கும், மௌனமாகவே இருந்து அருள் செய்கிறார்... சிவ முர்த்தங்களில்' ஒருவரான 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்'. அதனால்தான், நவக்கிரக குருபகவானுக்கு அதிதேவதையாக... 'குரு தக்ஷ்ணாமுர்த்தி பகவானே' அமைந்திருக்கிறார். 

ஆகவேதான், 'குருவருள் இருந்தால் திருவருள் கூடும்' என்பர் பெரியோர்.

குருப் பிரம்மா... குரு விஷ்ணு.... குருத் தேவோ மஹேஸ்வரஹ... குரு சாக்ஷாத்... பரப் பிரம்மா... தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ !'

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...