இந்தப் புற உலக வாழ்வில்.... மூன்று நிலைகளை நாம் அனுபவிப்பதாக உணர்கிறோம். அவை, விழிப்பு நிலை... தூக்க நிலை.... கனவு நிலை.
இதில் விழிப்பு நிலையை, நாம் இப்போது உலக வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையாகவும்... தூக்க நிலையை, நாம் ஒவ்வொரு இரவிலும் உறங்கி ஓய்வெடுக்கும் நிலையாகவும்... கனவு என்ற நிலையை, நாம் தூக்கத்தில் அனுபவிக்கும் நிகழ்வாகவும்... வரையறுத்துக் கொள்கிறோம்.
வேதாந்தம் இந்த மூன்று நிலைகளையுமே 'ஒரு கனவுதான்' என்று வரையறுத்தாலும்... அன்றாட அனுபவத்தில் நாம் காணும் கனவுகளை ஒதுக்கி விட்டு கடந்து போக முடிவதில்லை. கனவின் இறுதியில் ஏற்படும் விழிப்பு... அந்தக் கனவுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து விடுகிறது.
விழிப்பு நிலையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும், நமது 'பூர்வ வினைகளுடன்' தொடர்புடையாதாக இருக்கிறதோ, அதே போல, பெரும்பாலும் கனவுகளில் நாம் காணும் நிகழ்வுகளும், நமது 'பூர்வ வினைகளுடன்' தொடர்பு உடையதாகவே இருக்கும்.
எவ்வாறு, நமது இயல்பான விழிப்பு நிலையில் நிகழும் பல நிகழ்வுகள், நமக்கு 'விதிக்கப்படாத நிகழ்வுகளாக', நமது ஞாபகத்தில் இருப்பதில்லையோ, அதே போல, நமக்கு ஏற்படும் பல கனவுகளும், நாம் விழித்த உடன், பெரும்பாலும் நமது ஞாபகத்தில் இருப்பதில்லை. இவாறான கனவுகள் அனைத்தையும் 'நினைவுகள்' என்றே கருத வேண்டும்.
அதே போல, நமது வாழ்வில் நிகழும் 'விதிக்கப்பட்ட நிகழ்வுகள்' அனைத்தும் நமது நினைவுகளில் ஆழப் பதிந்து விடுவதைப் போல, கனவு நிலையில் நிகழும் 'விதிக்கப்பட்ட நிகழ்வுகளும்', நமது நினைவுகளில் ஆழப் பதிந்து விடுகின்றன. இவற்றைத்தான் 'காட்சிகள்' எனக் கொண்டு, அது உணர்த்தும் 'உள்ளுணர்வுக் குறிப்புகளை', 'கனவிற்கான பலன்களாக' அறிந்து கொள்கிறோம்.
இவ்வாறான காட்சிகளைக் கனவிலிருந்து எளிதில் பிரித்தறியலாம். இவ்வாறான காட்சிகள் நம்மை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டு விடும்... நம்மையும் அறியாமல், நள்ளிரவானாலும், அதிகாலையானாலும், அந்த நேரத்தைப் பார்க்கத் தூண்டும்.... அந்தக் காட்சிகளின் ஒவ்வொரு அம்சமும் நமது நினைவுகளில், நினைவுகளாகப் பதிந்து விடும்... மீண்டும் தூக்கம் வரும் வரை, அந்தக் காட்சி மனதின் திரையில் ஓடிக் கொண்டே இருக்கும்.
இவ்வாறான கனவுக் காட்சிகளுக்குத்தான் 'பலன்களை' அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் 'கனவுக் காட்சிகள்தான்', நமக்கு சில 'முன்னறிவுப்புகளை' அளித்து உதவுகிறது. இதைத்தான், 'கனவுகளுக்கான பலன்கள்' என்கிறார்கள்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment