Wednesday, October 20, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 198. ஜாதக நிலைகள் அனைத்தும் சுபிட்சமாக இருந்தும், துன்பத்தை அனுபவிப்பது ஏன் ?


ஒருவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் அனைத்தும், பெரும்பாலும் சாதகமாக அமைந்தும்... ஜாதகருக்குச் சாதகமான தசாக்கள் நடைபெற்றும்... கோள்சார நிலைகளிலும் கிரகங்கள் மிகவும் சாதகமாக அமைந்தாலும்... ஜாதகர், ஒரு கடினமான துன்பத்தை அடைகிறார் எனில், அதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்குமுன், 'கர்ம வினைகளின்' சூட்சுமத்தை அறிந்து கொள்வது அவசியம். நமது கடந்த கால பிறவிகளின் மொத்த கர்ம வினைத் தொகுப்பை 'சஞ்சித கர்மா' என்றும்... அந்த மொத்தத் தொகுப்பிலிருந்து, இந்தப் பிறவிக்காக நாம் சுமந்து வந்திருக்கும் கர்ம வினைத்' தொகுப்பை, 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவியில் நாம் சேர்க்கும் பாப - புண்ணிய செயல்களின் விளைவுகளான கரம வினைகளை, 'ஆகாமிய கர்மா' என்றும்... குறிப்பிடுகிறது வேதம்.

இதில், இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கப் போகும் 'பிராரப்தக் கர்மாவைத்தான்', நமது 'ஜாதக சித்திரத்தில்' கிரகங்களின் அமைவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கிரகங்கள் அமைந்திருக்கும் பாவங்களுக்கும்... அந்த ஸ்தானாதிபதிகளின் வலிமைக்கும்... அவைகளின் பார்வைக்கும்... அவைகளின் சேர்க்கைக்கும்... அவையமைந்திருக்கிற நட்சத்திர சாரங்களுக்கும்... ஜாதகரை வழி நடத்தும் கிரகங்களின் தசாக்களுக்கும்... ஏற்ப, அவை உணர்த்தும் 'பிராரப்த கர்மாக்களை' அறிந்து கொள்ள முடியும்.

அந்த கர்ம வினைகள் வெளிப்படுத்தும் பாப - புண்ணியங்களுக்கு ஏற்ப, ஜாதகர் தனது வாழ்வை எதிர் கொள்ள முடியும். புண்ணிய பலன்கள் வெளிப்படும் காலங்களில், அந்த புண்ணியங்களை சுட்டிக் காட்டும் கிரகங்களின் அதி தேவதைகளின் துணையோடு, கடமைகளை நிறைவேற்றுவதும்... பாப பலன்கள் வெளிப்படும் காலங்களில், அந்த பாபங்களைச் சுட்டிக் காட்டும் கிரகங்களின் அதி தேவதைகளை பிரார்த்தித்து, அந்தக் காலத்தை கடந்து போவதும்... 'ஜோதிடக் கலை' காட்டும் வழியாக இருக்கிறது.

ஆனால், சில வேளைகளில், 'புண்ணிய பலன்களை' அனுபவிக்கும் காலத்திலேயே, ஜாதகர் ஒரு பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கான காரணத்தை, நிச்சயமாக ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரக அமைவுகளால் சுட்டிக் காட்ட முடியாமல் போகிறது.

அப்போதுதான், 'ஆகாமிய கர்மா' என்ற, இந்தப் பிறவியில் நாம் மேற்கொண்ட ஒரு செயலுக்கான பலனாகத்தான் அது நிகழ்ந்திருக்கிறது... என்ற தர்மம் வெளிப்படுகிறது. அதை ஜாதகரால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். 

உதாரணமாக, ஒருவர் நடந்து செல்லும் பாதையில், ஒரு பணப் பையை கண்டெடுக்கிறார். அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஒன்று, அந்தப் பையை அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம். அது உரியவரை போய் சேர்ந்து விடும். கண்டெடுத்தவர்க்கு ஒரு திருப்தியும் ஏற்படும். மாறாக, அதை அவரே எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். முதல் நிகழ்வில் அவரது செயல், புண்ணியமாகவும், இரண்டாவது நிகழ்வில் அது, பாபமாகவும், 'ஆகாமிய கர்மாவில்' கொண்டு சேர்ப்பதாகவும், அமைகிறது.

மேலும், அந்தப் பணப் பையைத் தொலைத்தவரின் மனக் கவலையே, அதை எடுத்துக் கொண்டவரின் வாழ்வில் ஒரு துன்பத்தை நிகழ்த்துவதாக அமையும். இதைத்தான் 'முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்' என்பதாக அறிகிறோம். இந்த 'ஆகாமியக் கர்மா' என்ற, இந்தப் பிறவியில் நாமாக மேற்கொள்ளும் செயலின் விளைவினால்தான், சுபமான ஜாதக அமைவின் போதும், ஜாதகர்  துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

ஸாய்ராம்.




Monday, October 18, 2021

அன்னாபிஷேகம்...

ஐப்பசி மாதப் பௌர்ணமி நாளை, அன்னாபிஷேக நாளாகக் கொண்டாடி மகிழ்கொறோம்.

'அன்னமே பிரதானம்... அன்னமின்றி ஒரு க்ஷணமும் வாழ முடியாது... அன்னமே பிரம்மம்...!' என்ற வாக்கியங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அன்னம் என்பது உணவாக மட்டும் இருந்தால், அது இல்லாமல் உயிர் வாழ முடியாத நிலைதான் ஏற்படும்.

ஆனால், அவ்வாறு நிகழ்வதில்லை. அன்னமின்றி ஒரு நாள், இரண்டு நாள் என உயிர் வாழும் ஜீவர்களை நம்மால் காண முடிகிறது. ஆனால், 'உயிர் வாழ அன்னம் தேவை...' என்றும், 'அன்னமே பிரம்மம்...' என்றும், 'அன்னமின்றி ஒரு க்ஷணமும் வாழ முடியாது...' என்ற வாக்கியங்களும் எதைக் குறிப்பிடுகின்றன...? என்று ஆய்ந்தால், ஒரு சூட்சும உண்மை வெளிப்படும்.

அது, அன்னம் என்ற சொல், 'பிராணன்' என்ற 'மூச்சுக் காற்றை' குறிப்பிடுகிறது. நமது வாயின் உட்புற மேல் பாகத்தை, 'அன்னாக்கு' என்றழைப்பதிலிருந்தே வெளிப்படுகிறது. அந்த உள் பகுதியின் மேலும், கீழும்தான் 'பிராணன்' என்ற சுவாசம் நிகழ்கிறது. 

இந்த சுவாசம், ஒரு கணம் நின்று விட்டால், உயிர் இந்த உடலில் தங்குவதில்லை. ஆதலால், அன்னம் என்பது பிராணனாகிய சுவாசம்தான். அந்த பிராணனாகிய சுவாசம் இருக்கும் வரையில்தான், உயிர் வாழ முடியும். அந்த பிராணனாகிய சுவாசத்தை, பிரணாயமம் என்ற யுக்தியைக் கொண்டு, 'சதா பிரணயாமியாக' இருந்து... பரப்பிரம்மமான, பரமேஸ்வரனை தியானிப்பதுதான்... அன்னாபிஷேகம்.

ஸாய்ராம்.




கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை : பகுதி - 6.


கவிஞருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். அதைத் தனது அனுபவ ஞானத்தை வெளிப்படுத்த, ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக்கொள்வார்.

'ராஜபார்ட் ரங்கதுரை' திரைப்படத்தில், கதாநாயகன் ஒரு நாடக நடிகன். தனது சகோதரன் மற்றும் சகோதரியின் அவமதிப்பால் மனம் குன்றி நிற்கும் வேளையில், ஒரு கோமாளியாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த சூழலுக்கு ஏற்றபடி, ஒரு பாடலைத் தருவார் கவிஞர்...

அந்தப் பாடலில்,

'துன்பம் வரும் வேலையில சிரிங்க

என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க

பாம்பு வந்து கடிக்கையில்

பாழும் உடல் துடிக்கையில்

யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு..'

என்று, வள்ளுவரின் குறளை (இடுக்கண் வருங்கால் நகுக அதனை...அடுத்தூர்வது அஃதொப்பது இல்) மேற்கோள் காட்டுவார். இன்பமும் - துன்பமும் இணைந்ததுதான் வாழ்வு. இன்பத்திற்குப் பின் துன்பமும்... மீண்டும் துன்பத்திற்குப் பின் இன்பமும்... மாறி, மாறி வருவதுதான் வாழ்க்கை. ஆதலால் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் இருப்பதற்கான உபாயத்தைத்தான் 'நகுக' என்ற சொல் கொண்டு விளக்கியிருப்பார்.

ஆனால், சாதாரண மனித வாழ்வில், இதைக் கடைப் பிடிப்பதில் உள்ள சிக்கல்களைத்தான் கவிஞர், தனது வரிகளில் விளக்குகிறார். பாம்பு ஒன்று கடிக்கிறது... அதன் வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால்... எவ்வாறு சிரிக்க முடியும் ? என்ற அனுபவத்தை முன் வைக்கிறார்.

இதற்கு அடுத்த வரிகளில்தான், இந்த சூழலை விவரிப்பதற்காகத் தனது ஞானத்தை வெளிப்படுத்துகிறார்,

'இது கீழ்ப்புறத்தில் இனிப்பு

மேல்புறத்தில் கசப்பு

பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...'

...என்று, பட்டினத்தாரின் ஞானமடைதலை சுட்டிக் காட்டுகிறார். காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து புறப்படும் பட்டினத்தாரின் பயணம்... எப்போது இறைவனின் திருவடிகளில் கலந்து விடுவது... என்ற நினைவிலேயே தொடர்கிறது. இறைவன் அவரின் கனவில் வந்து,'எப்போது நுனிக் கரும்பு இனிக்கிறதோ... அப்போதே உனக்கு முக்தி' என்று அருள்கிரார்.

அடிக் கரும்பு இனிப்பதும்... நுனிக் கரும்பு கசப்பதும்தான்...இயல்பு. அது எவ்வாறு நுனிக் கரும்பு இனிக்கும்...? அடிக் கரும்பு என்பது உலகவாழ்வு. நுனிக் கரும்பு என்பது உள்வாழ்வு. ஒருவருக்கு உலக வாழ்வில் பற்றுதல்கள் மிகும் போது அது அடிக்கரும்புக்கு ஒப்பாகிறது. எப்போது உலக வாழ்வில் பற்றுதல்கள் நீங்கி, உள்வாழ்வில்  மனம் லயிக்கிறதோ, அப்போதுதான், அது நுனிக் கரும்புக்கு ஒப்பாகிறது. 

இனிப்பும் - கசப்பும்... உணர்வுதானே. ஒரு மனிதன் பற்றற் நிலையை அடையும் போது, உலக வாழ்வு அவனுக்கு கசந்து போகிறது. உள்வாழ்வு இனிக்கிறது. இந்த நிலையைத்தான், இறைவன் நுனிக்கருப்பின் இனிப்பாக, பட்டினத்தாருக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

நமது பற்றுதல்கள் நிறைந்திருக்கிற இந்த உலகவாழ்வை.த்தான்... கவிஞர், முக்தியின் பாதையில் பயணிக்கும், பட்டினத்தாரின் கையில் உள்ள கரும்பிற்கு ஒப்பாகக் கூறுகிறார். எப்போது, அந்த பற்றற்ற ஞான வெளிப்பாடு ஏற்படுகிறதோ, அப்போதுதான்... துன்பம் வரும் வேளையில் சிரிக்க முடியும் !

ஸாய்ராம்.



Monday, October 11, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 197. ஜோதிடமும்... உளவியலும்...


ஜோதிடத்திற்குள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. அதன் சில துளிகளைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். ஆதலால்தான் இந்தக் கலையை 'ஆழ் கடலுக்கு' ஒப்பாகக் கூறுகின்றனர்.

'பரம்பொருள்' என்ற பரமாத்ம சொரூபத்திலிருந்து, 'ஆத்மாவாக'... 'ஜீவாத்மாவாக'... வெளிப்பட்டிருக்கிற இந்த 'ஜீவன்', அந்த வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் 'கர்ம வினைகளை' அனுபவித்தபின், மீண்டும் அந்த பரமாத்ம சொரூபத்தில் கலந்து விடுகிறது.

இந்த, ஜீவனது வாழ்க்கைப் பயணத்தைதான், 'ஜோதிட சித்திரம்' மிக சூட்சுமமாக வெளிப்படுத்துகிறது. 'லக்னம்' இந்தப் பிறவியை உணர்த்தினாலும், 12 ஆம் பாவம் கடந்த கால பயணத்தையும், 2 ஆம் பாவம் எதிர்கால பயணத்தையும்... 5 ஆம் பாவம், ஜீவனது 'கர்ம வினைகளது' கட்டுகளைப் பற்றிய சூட்சுமங்களையும் வெளிப்படுத்துகிறது.

பொதுவாக நாம், கல்வி, தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு, நோய் - கடன் - விரோதம் போன்ற, உலகியல் பிரச்சனைகளுக்காகவே, ஜோதிடத்தை அணுகுகிறோம். அது உணர்த்தும் எண்ணற்ற சூட்சுமங்களுக்குள் பயணிப்பதில்லை. ஆதலால்தான், தமக்கு ஏற்படும் இன்ப - துன்பங்களுக்கு கிரகங்களும், அவற்றின் அமைவுகளும்தான் காரணம், என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.

ஆனால், கிரகங்களும் அவற்றின் அமைவுகளும், நமது 'கர்ம வினைகள்' விளைவிக்கும் 'விளைவுகளைத்தான்' சுட்டிக் காட்டுகின்றன. இதை உணர்வதுதான் 'உளவியல்'.

ஒவ்வொரு 'காரியத்தையும்' திட்டமிட்டுதான் செய்கிறோம். ஆனால் அதன் விளைவுகள் நமது எதிர்பார்ப்புகளுக்குள் அடங்குவதில்லை. இந்த சூட்சுமத்தைத்தான், 'காரணம்' என்ற 'கர்ம வினை' என்று கூறுகிறோம். 

கவனமாக நாம் வளர்க்கும் ரோஜாச் செடி பூப்பதில்லை. ஆனால், வேண்டாம் என்று கூட்டித் தள்ளப்பட்ட பூசணி விதைகள், முளைத்து பூ, பூப்பது மட்டுமல்ல காய்களையும் தந்து விடுகிறது.

ஜோதிடத்தில் அமைந்திருக்கிற கிரகங்களும் அவ்வாறுதான், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. நமது கண்ணோட்டத்தை விரிவு படுத்திக் கொண்டால், அதாவது நமது 'அணுகுமுறையில்' மாற்றங்களைக் கொண்டு வரும் போது, தனக்குள் மறைந்திருக்கும் 'ரகசியங்களை', இந்தக் கோள்கள் வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இந்த அணுகுமுறையில், ஜீவனது வாழ்வின் பாதையை, உள்ளங்கை நெல்லிக் கனியென ...' வெளிப்படுத்தி, நாம் மேற்கொள்ளும் செயல்களில், பற்றற்று ஈடுபட வைத்து, அதன் பலன்களில் பற்று வைக்காத 'கர்ம யோகத்தை' கற்றுத் தருகிறது.

ஸாய்ராம்.



Sunday, October 3, 2021

வருணாசிரமம்... இதைத்தான் உணர்த்துகிறது.


பிரம்மச்சர்யம்... கிரகஸ்தம்... வானப்பிரஸ்தம்... சன்னியாஸம்... என்ற 'நால்வகை வாழ்வியலில்', கிரகஸ்தம் என்ற 'இல்வாழ்வு' என்ற உலகவாழ்வை வாழும் போதுதான், இந்த வர்ணாசிரமம்' என்ற 'நால்வகை' வர்ணங்கள் குறுக்கிடுகின்றன.

கிரகஸ்தனாக, தனது 'கர்ம வினைகளின் பாப - புண்ணிய விளைவுகளை' எதிர் கொள்ளும் கிரகஸ்தனான, குடும்பஸ்தன்,

* தனது குடும்ப பாரத்தை சுமந்து, அதற்காக கடுமையாக உழைக்கும் போது, தானே ஒரு 'சூத்திரனாக' இருக்கிறான்.

* தனது குடும்பத்தினரின் வளமான வாழ்வுக்காக திட்டமிடும் போதும், அவைகளை நிறைவேற்ற திரவியங்களைத் திரட்ட முற்படும் போதும், தானே ஒரு 'வைசியனாக' மாறுகிறான்.

* தனது குடும்பத்தினரின் சுக வாழ்வுக்காக போராடும் போதும், அவர்களின் நலத்தில் அக்கறை கொண்டு, அவர்களைப் பாதுகாக்கும் போதும், தானே ஒரு 'சத்திரியனாக' மாறி விடுகிறான்.

* குடும்பம் என்ற இல்லற வாழ்வின் அமைவுக்குக் காரணமே, தனது 'பூர்வ வினைகள்தான' என்ற உண்மையை உணரும் போது, அவைகளிலிருந்து விடுபடுவதற்கு, தான் மேற்கொள்ளும் அல்லது எதிர் கொள்ளும் அனைத்துச் செயல்களையும், 'கடமை' என்று உணர்ந்து, அவற்றை 'பற்றின்றி' மேற்கொள்ளும் போது, தானே ஒரு 'பிராமணனாக'... தனக்குள் இருந்து அருளும் 'பிரம்மத்தை' உணர்ந்தவனாக, உயர்ந்து விடுகிறான்.

இவ்வாறு, ஒரு இல்லறத்தனாக, தனது 'கடமைகளை' மேற்கொள்ளும் ஒரு கிரகஸ்தனின் வாழ்வின் மேம்பாட்டைக் குறிப்பதுதான்... 'வர்ணாசிரமாக' இருக்க முடியும் !

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...