Monday, October 18, 2021

கவிஞர் கண்ணதாஸன் - ஒரு பார்வை : பகுதி - 6.


கவிஞருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும். அதைத் தனது அனுபவ ஞானத்தை வெளிப்படுத்த, ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக்கொள்வார்.

'ராஜபார்ட் ரங்கதுரை' திரைப்படத்தில், கதாநாயகன் ஒரு நாடக நடிகன். தனது சகோதரன் மற்றும் சகோதரியின் அவமதிப்பால் மனம் குன்றி நிற்கும் வேளையில், ஒரு கோமாளியாக நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த சூழலுக்கு ஏற்றபடி, ஒரு பாடலைத் தருவார் கவிஞர்...

அந்தப் பாடலில்,

'துன்பம் வரும் வேலையில சிரிங்க

என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க

பாம்பு வந்து கடிக்கையில்

பாழும் உடல் துடிக்கையில்

யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு..'

என்று, வள்ளுவரின் குறளை (இடுக்கண் வருங்கால் நகுக அதனை...அடுத்தூர்வது அஃதொப்பது இல்) மேற்கோள் காட்டுவார். இன்பமும் - துன்பமும் இணைந்ததுதான் வாழ்வு. இன்பத்திற்குப் பின் துன்பமும்... மீண்டும் துன்பத்திற்குப் பின் இன்பமும்... மாறி, மாறி வருவதுதான் வாழ்க்கை. ஆதலால் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் இருப்பதற்கான உபாயத்தைத்தான் 'நகுக' என்ற சொல் கொண்டு விளக்கியிருப்பார்.

ஆனால், சாதாரண மனித வாழ்வில், இதைக் கடைப் பிடிப்பதில் உள்ள சிக்கல்களைத்தான் கவிஞர், தனது வரிகளில் விளக்குகிறார். பாம்பு ஒன்று கடிக்கிறது... அதன் வலியின் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவனால்... எவ்வாறு சிரிக்க முடியும் ? என்ற அனுபவத்தை முன் வைக்கிறார்.

இதற்கு அடுத்த வரிகளில்தான், இந்த சூழலை விவரிப்பதற்காகத் தனது ஞானத்தை வெளிப்படுத்துகிறார்,

'இது கீழ்ப்புறத்தில் இனிப்பு

மேல்புறத்தில் கசப்பு

பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...'

...என்று, பட்டினத்தாரின் ஞானமடைதலை சுட்டிக் காட்டுகிறார். காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து புறப்படும் பட்டினத்தாரின் பயணம்... எப்போது இறைவனின் திருவடிகளில் கலந்து விடுவது... என்ற நினைவிலேயே தொடர்கிறது. இறைவன் அவரின் கனவில் வந்து,'எப்போது நுனிக் கரும்பு இனிக்கிறதோ... அப்போதே உனக்கு முக்தி' என்று அருள்கிரார்.

அடிக் கரும்பு இனிப்பதும்... நுனிக் கரும்பு கசப்பதும்தான்...இயல்பு. அது எவ்வாறு நுனிக் கரும்பு இனிக்கும்...? அடிக் கரும்பு என்பது உலகவாழ்வு. நுனிக் கரும்பு என்பது உள்வாழ்வு. ஒருவருக்கு உலக வாழ்வில் பற்றுதல்கள் மிகும் போது அது அடிக்கரும்புக்கு ஒப்பாகிறது. எப்போது உலக வாழ்வில் பற்றுதல்கள் நீங்கி, உள்வாழ்வில்  மனம் லயிக்கிறதோ, அப்போதுதான், அது நுனிக் கரும்புக்கு ஒப்பாகிறது. 

இனிப்பும் - கசப்பும்... உணர்வுதானே. ஒரு மனிதன் பற்றற் நிலையை அடையும் போது, உலக வாழ்வு அவனுக்கு கசந்து போகிறது. உள்வாழ்வு இனிக்கிறது. இந்த நிலையைத்தான், இறைவன் நுனிக்கருப்பின் இனிப்பாக, பட்டினத்தாருக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

நமது பற்றுதல்கள் நிறைந்திருக்கிற இந்த உலகவாழ்வை.த்தான்... கவிஞர், முக்தியின் பாதையில் பயணிக்கும், பட்டினத்தாரின் கையில் உள்ள கரும்பிற்கு ஒப்பாகக் கூறுகிறார். எப்போது, அந்த பற்றற்ற ஞான வெளிப்பாடு ஏற்படுகிறதோ, அப்போதுதான்... துன்பம் வரும் வேளையில் சிரிக்க முடியும் !

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...