ஒருவரது ஜாதகத்தில் கிரக நிலைகள் அனைத்தும், பெரும்பாலும் சாதகமாக அமைந்தும்... ஜாதகருக்குச் சாதகமான தசாக்கள் நடைபெற்றும்... கோள்சார நிலைகளிலும் கிரகங்கள் மிகவும் சாதகமாக அமைந்தாலும்... ஜாதகர், ஒரு கடினமான துன்பத்தை அடைகிறார் எனில், அதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்குமுன், 'கர்ம வினைகளின்' சூட்சுமத்தை அறிந்து கொள்வது அவசியம். நமது கடந்த கால பிறவிகளின் மொத்த கர்ம வினைத் தொகுப்பை 'சஞ்சித கர்மா' என்றும்... அந்த மொத்தத் தொகுப்பிலிருந்து, இந்தப் பிறவிக்காக நாம் சுமந்து வந்திருக்கும் கர்ம வினைத்' தொகுப்பை, 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவியில் நாம் சேர்க்கும் பாப - புண்ணிய செயல்களின் விளைவுகளான கரம வினைகளை, 'ஆகாமிய கர்மா' என்றும்... குறிப்பிடுகிறது வேதம்.
இதில், இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கப் போகும் 'பிராரப்தக் கர்மாவைத்தான்', நமது 'ஜாதக சித்திரத்தில்' கிரகங்களின் அமைவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கிரகங்கள் அமைந்திருக்கும் பாவங்களுக்கும்... அந்த ஸ்தானாதிபதிகளின் வலிமைக்கும்... அவைகளின் பார்வைக்கும்... அவைகளின் சேர்க்கைக்கும்... அவையமைந்திருக்கிற நட்சத்திர சாரங்களுக்கும்... ஜாதகரை வழி நடத்தும் கிரகங்களின் தசாக்களுக்கும்... ஏற்ப, அவை உணர்த்தும் 'பிராரப்த கர்மாக்களை' அறிந்து கொள்ள முடியும்.
அந்த கர்ம வினைகள் வெளிப்படுத்தும் பாப - புண்ணியங்களுக்கு ஏற்ப, ஜாதகர் தனது வாழ்வை எதிர் கொள்ள முடியும். புண்ணிய பலன்கள் வெளிப்படும் காலங்களில், அந்த புண்ணியங்களை சுட்டிக் காட்டும் கிரகங்களின் அதி தேவதைகளின் துணையோடு, கடமைகளை நிறைவேற்றுவதும்... பாப பலன்கள் வெளிப்படும் காலங்களில், அந்த பாபங்களைச் சுட்டிக் காட்டும் கிரகங்களின் அதி தேவதைகளை பிரார்த்தித்து, அந்தக் காலத்தை கடந்து போவதும்... 'ஜோதிடக் கலை' காட்டும் வழியாக இருக்கிறது.
ஆனால், சில வேளைகளில், 'புண்ணிய பலன்களை' அனுபவிக்கும் காலத்திலேயே, ஜாதகர் ஒரு பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கான காரணத்தை, நிச்சயமாக ஜாதகத்தில் அமைந்திருக்கிற கிரக அமைவுகளால் சுட்டிக் காட்ட முடியாமல் போகிறது.
அப்போதுதான், 'ஆகாமிய கர்மா' என்ற, இந்தப் பிறவியில் நாம் மேற்கொண்ட ஒரு செயலுக்கான பலனாகத்தான் அது நிகழ்ந்திருக்கிறது... என்ற தர்மம் வெளிப்படுகிறது. அதை ஜாதகரால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
உதாரணமாக, ஒருவர் நடந்து செல்லும் பாதையில், ஒரு பணப் பையை கண்டெடுக்கிறார். அவருக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஒன்று, அந்தப் பையை அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம். அது உரியவரை போய் சேர்ந்து விடும். கண்டெடுத்தவர்க்கு ஒரு திருப்தியும் ஏற்படும். மாறாக, அதை அவரே எடுத்துக் கொள்ளும் பட்சத்தில், அது அவருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தும். முதல் நிகழ்வில் அவரது செயல், புண்ணியமாகவும், இரண்டாவது நிகழ்வில் அது, பாபமாகவும், 'ஆகாமிய கர்மாவில்' கொண்டு சேர்ப்பதாகவும், அமைகிறது.
மேலும், அந்தப் பணப் பையைத் தொலைத்தவரின் மனக் கவலையே, அதை எடுத்துக் கொண்டவரின் வாழ்வில் ஒரு துன்பத்தை நிகழ்த்துவதாக அமையும். இதைத்தான் 'முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்' என்பதாக அறிகிறோம். இந்த 'ஆகாமியக் கர்மா' என்ற, இந்தப் பிறவியில் நாமாக மேற்கொள்ளும் செயலின் விளைவினால்தான், சுபமான ஜாதக அமைவின் போதும், ஜாதகர் துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment