ஜோதிடத்திற்குள் அனைத்தும் அடங்கியிருக்கிறது. அதன் சில துளிகளைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். ஆதலால்தான் இந்தக் கலையை 'ஆழ் கடலுக்கு' ஒப்பாகக் கூறுகின்றனர்.
'பரம்பொருள்' என்ற பரமாத்ம சொரூபத்திலிருந்து, 'ஆத்மாவாக'... 'ஜீவாத்மாவாக'... வெளிப்பட்டிருக்கிற இந்த 'ஜீவன்', அந்த வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் 'கர்ம வினைகளை' அனுபவித்தபின், மீண்டும் அந்த பரமாத்ம சொரூபத்தில் கலந்து விடுகிறது.
இந்த, ஜீவனது வாழ்க்கைப் பயணத்தைதான், 'ஜோதிட சித்திரம்' மிக சூட்சுமமாக வெளிப்படுத்துகிறது. 'லக்னம்' இந்தப் பிறவியை உணர்த்தினாலும், 12 ஆம் பாவம் கடந்த கால பயணத்தையும், 2 ஆம் பாவம் எதிர்கால பயணத்தையும்... 5 ஆம் பாவம், ஜீவனது 'கர்ம வினைகளது' கட்டுகளைப் பற்றிய சூட்சுமங்களையும் வெளிப்படுத்துகிறது.
பொதுவாக நாம், கல்வி, தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தைப் பேறு, நோய் - கடன் - விரோதம் போன்ற, உலகியல் பிரச்சனைகளுக்காகவே, ஜோதிடத்தை அணுகுகிறோம். அது உணர்த்தும் எண்ணற்ற சூட்சுமங்களுக்குள் பயணிப்பதில்லை. ஆதலால்தான், தமக்கு ஏற்படும் இன்ப - துன்பங்களுக்கு கிரகங்களும், அவற்றின் அமைவுகளும்தான் காரணம், என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம்.
ஆனால், கிரகங்களும் அவற்றின் அமைவுகளும், நமது 'கர்ம வினைகள்' விளைவிக்கும் 'விளைவுகளைத்தான்' சுட்டிக் காட்டுகின்றன. இதை உணர்வதுதான் 'உளவியல்'.
ஒவ்வொரு 'காரியத்தையும்' திட்டமிட்டுதான் செய்கிறோம். ஆனால் அதன் விளைவுகள் நமது எதிர்பார்ப்புகளுக்குள் அடங்குவதில்லை. இந்த சூட்சுமத்தைத்தான், 'காரணம்' என்ற 'கர்ம வினை' என்று கூறுகிறோம்.
கவனமாக நாம் வளர்க்கும் ரோஜாச் செடி பூப்பதில்லை. ஆனால், வேண்டாம் என்று கூட்டித் தள்ளப்பட்ட பூசணி விதைகள், முளைத்து பூ, பூப்பது மட்டுமல்ல காய்களையும் தந்து விடுகிறது.
ஜோதிடத்தில் அமைந்திருக்கிற கிரகங்களும் அவ்வாறுதான், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சுட்டிக் காட்டுகிறது. நமது கண்ணோட்டத்தை விரிவு படுத்திக் கொண்டால், அதாவது நமது 'அணுகுமுறையில்' மாற்றங்களைக் கொண்டு வரும் போது, தனக்குள் மறைந்திருக்கும் 'ரகசியங்களை', இந்தக் கோள்கள் வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த அணுகுமுறையில், ஜீவனது வாழ்வின் பாதையை, உள்ளங்கை நெல்லிக் கனியென ...' வெளிப்படுத்தி, நாம் மேற்கொள்ளும் செயல்களில், பற்றற்று ஈடுபட வைத்து, அதன் பலன்களில் பற்று வைக்காத 'கர்ம யோகத்தை' கற்றுத் தருகிறது.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment