Wednesday, December 30, 2020

நினைவுப் பெட்டகத்திலிருந்து... 'ராமசாமி'

                    
    
 ஒரு மழைக்கால காலை நேரம்... கடைக்கு வெளியே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். குளிரிலும், மழையிலும் நனைந்ததால், நடு நடுங்கிக் கொண்டே, முனகிக் கொண்டிருந்தான். கடை திறக்க வேண்டியிருப்பதால், அவனை எழுப்பி ஓரமாய் அமரச் சொல்லிவிட்டு, கடையைத் திறந்தோம்.

தேநீர் குடிக்கும் நேரத்தில், அவனை எழுப்பி, கொஞ்சம் தேநீரை ஊற்றிக் கொடுத்தோம். மெதுவாக எழுந்து, சத்தத்துடன் உறிஞ்சிக் குடித்தான். மீண்டும் கண்ணை மூடியபடியே, சுவற்றில் சாய்ந்து கொண்டான்.

மதியம் வீட்டுக்கு சாப்பிட போனபோது, அம்மாவிடம் காலையில் நடந்ததைச் சொன்னேன். நான் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்குப் போகும் போது, 'இதை கொண்டு போய் கொடு...' என்று இலையில் மடித்து கொஞ்சம் சாம்பார் சாதம் கொடுத்தார்.

அதைக் கொண்டு போய், ஓரமாக முடங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிக் கொடுத்து சப்பிடச் சொன்னேன். மெதுவாக எழுந்து உட்கார்ந்து, இலையை விரித்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் மீண்டும் படுக்கவே இல்லை. அப்போதுதான், அவன் பசியால் வாடிப் போயிருந்தான்... என்ற உண்மையே எனக்குப் புரிந்தது.

நான் மாலையில், மீண்டும் வீட்டுக்குக் கிளம்பிப் போகும் போது... என்னை அவன் பின் தொடர்ந்து வந்தது... எனக்குத் தெரியாது. ஆனால், வீட்டை நெருங்கிய போதுதான், அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது தெரிந்து, வேகமாக உள்ளே சென்று, பயந்து கொண்டே, 'அம்மா, அந்த ஆளு என் பின்னாலேயே வந்து விட்டான்...' என்று மெதுவாக, அப்பாவுக்குக் கேட்டு விடாமல் சொன்னேன்.

வெளியே வந்து பார்த்த அம்மாவின் முன், கண்களில் கண்ணீர் கசிந்த படியே, நன்றியுடன் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்த போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'யாருப்பா... நீ , எங்கேயிருந்து வந்திருக்கிற ?' அன்று கேட்ட அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கப் போனவனை, அம்மா சற்று விலகி நின்றபடியே பார்த்து, 'சரி... நீ ஒண்ணும் பேச வேணாம். பின்னால போய் விறகுகள் வைக்கிற இடத்தில, சாக்கை விரிச்சு படுத்துக்க,.தம்பிக்கிட்ட ரொட்டி கொஞ்சம் கொடுத்தனுப்பிறேன்.' என்றார்.

காலையில், எழுந்து பார்த்த போது, வீட்டை சுற்றியுள்ள இடம் எல்லாம் கூட்டப்பட்டு சுத்தமாக இருந்தது. தோட்டத்தில் இருந்த செடிகள் அனைத்தும் மழையில் நனைந்தது போல செழிப்பாக இருந்தன. அம்மா, ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, விறகுகள் வைக்கும் இடத்தில் போய் பார்த்த போது, சாக்குகள் எல்லாம் ஒழுங்காக சுருட்டி வைக்கப்பட்டு, அந்த இடம் முழுவதும் மிக சுத்தமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்ததும், 'அம்மா !' என்று ஒரு குரல் கேட்டு நான் வெளியே வந்து பார்த்த போது, நெற்றியில் நிறைந்த விபூதியுடன், உடலில் பிழிந்து உதறிய ஈர உடையுடன், பவ்யமாக நின்று கொண்டிருந்தவனை பார்த்து... நேற்று பார்த்தவனா இன்று இப்படி இருக்கிறான்... என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன்.

பின்னாலெயே, வந்து நின்ற அம்மாவைப் பார்த்து, நேற்று போலவே கண்கள் கலங்கி, கும்பிட்டபடி, 'என் பேரு ராமசாமிம்மா, எனக்கு யாரும் இல்லை, நான் ஒரு அனாதைம்மா..' ன்னு சொன்னவனை, அம்மா பார்த்து, எதுவும் சொல்லாமல், 'போய், தோட்டத்தில ஒரு இலையை பறிச்சிட்டு வா... சாப்பாடு தர்றேன்...' சொன்னதும், கண்களை புறங்கையால் துடைத்த படியே ஓடினான்.

'இப்படி, யாருன்னு தெரியாதவனை எல்லாம், கூட்டிட்டு வந்து தங்க வைச்சு, சாப்பாடு போடு..அப்புறம் ஏதும் பிரச்சனைன்னு வந்து சொல்லு பார்த்துக்கிறேன்...' ன்னு சொன்ன அப்பாவிடம், அம்மா,  'நமக்கு 12 பிள்ளைங்க இருக்காங்க. எதிர்காலத்தில, அவங்க எங்கெங்கெல்லாம் இருக்கப் போறாங்க... எப்படியெல்லாம் வாழப் போறாங்கன்னு தெரியாது... ஆனா, எங்கே இருந்தாலும், இருக்கிறத்துக்கும்... சாப்பிடறத்துக்கும்... மட்டும் அவங்களுக்குப் பஞ்சம் வந்து விடக் கூடாது...' என்று சொன்னார்.

இப்போதெல்லாம், ராமசாமிக்கு விறகு வைக்கும் இடம்தான் வீடு. என்னைப் பார்த்தவுடன், உடனே எழுந்து... 'சின்ன ராஜா..'ன்னு கூப்பிட்டபடியே நான் போகிற இடம், பள்ளிக் கூடமாக இருந்தாலும்... கடையாக இருந்தாலும்...வாசல் வரை துணைக்கு வருவான். சும்மா இருக்கும் நேரங்களில், அருகில் இருக்கும் கடைகளில் சுமை தூக்கி, அதில் வரும் சில்லறைகள மட்டும் சாக்குகளுக்குள், சேமித்து வைப்பான்.

அதை அவன் என்னா செய்கிறான் என்பது, எனக்கும், அம்மாவுக்கும் மட்டுமே தெரியும். 'என்ன... விறகு வைக்கிற இடத்தைச் சுற்றி... ஒரே சுருட்டுப் புகை நாற்றமா இருக்கு... ?' ன்னு அப்பா கேட்கிறப்போ, நானும், அம்மாவும் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொள்வோம்.

எனது 12 ஆவது வயதில், நான் வீட்டை விட்டு, கல்வி கட்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டியதாயிற்று. நான் கிளம்புவதற்கு முதல் நாள், ராமசாமியிடம் இதை சொன்ன போது, தலையை குனிந்த படியே கேட்டுக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலை, என்னை வழியனுப்ப எல்லோரும் வாசலில் காத்துக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்து வந்த ராமசாமி, தயக்கத்துடன் முன்னால் வந்து, இடுப்பில் வைத்திருந்த ஒரு பையில் இருந்து சிறிது விபூதியை எடுத்து, எனது நெற்றியில் வைத்தான்...'

வீட்டு வாசலில் வந்து நிற்கும் பேருந்தில் ஏறி, ஜன்னல் அருகே அமர்ந்து, எல்லோருக்கும் கையை காட்டும் போது... முதல் நாள், நானும், அம்மாவும் பார்த்த போது, எப்படி  இருந்ததோ... அது போலவே இருந்தன... என்றும் மறவாத, அந்தக் கலங்கிய கண்கள். அவை, ராமசாமியினுடையது.

ஸாய்ராம்.


Monday, December 28, 2020

'ஆருத்ரா' ... ஒரு ஆழ்ந்த பார்வை

            

ஜோதிடக் கலை வகைப்படுத்தும் 27 நட்சத்திரங்களில், இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே... 'திரு' என்ற அடைமொழி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒன்று... 'திருவாதிரை', இன்னொன்று... 'திருவோணம்'

திருவாதிரை நட்சத்திரம் 'சிவ பெருமாநாருக்கு' உகந்ததாகவும்... திருவோண நட்சத்திரம் 'விஷ்ணு பகவானுக்கு' உகந்ததாகவும்... வகைப்படுத்தப் பட்டிருக்கிறது.

பரம் பொருளாக... சுய ஒளிப் பிரகாசமாக... அங்கெங்கெனாதபடி, எங்கும் வியாபித்திருக்கும் பரமானந்த சொரூபமாக... இருக்கும் அருள் சக்தி, ஒரு கட்டுக்குள் இருக்கும் போது 'சிவமாகிறது' அதனால்தான், ஒரு உருவமற்ற நிலையை வெளிப்படுத்தும் வண்ணமாக. 'லிங்க வடிவத்தைத்' தாங்கியிருக்கிறது.

இந்த அருள் சக்தி ஒரு ஜீவனுக்குள் வடிவெடுக்கும் போது, 'சத்து - சித்து - ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபமாக' மாறுகிறது. இந்த அசைவைத்தான் 'ஆனந்த நடனம் புரியும்' ஒரு அருள் வடிவமாக... ஆருத்ரா என்ற 'திருவாதிரை நட்சத்திரத்தின்' அன்று உணர்த்தப் படுகிறது.

அதைத்தான்... 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டு பிறப்பெடுக்கும் ஜீவன், அதன் கர்ம வினைகளை 'எண்ணங்களாக வெளிப்படுத்தும்', 'மனதை' குறிக்கும் 'சந்திர பகவான்'... கர்ம வினைகளைக் குறிக்கும் 'ராகு பகவானின்' பாதசாரத்தில் உலவும்... 'திருவாதிரை நட்சத்திரம்' சுட்டிக் காட்டுகிறது. 

அந்த அருள் பெரும் சக்தி... இந்த பிரபஞ்சமாக விரியும் போது... 'விஸ்வம்' என்ற 'வியாபகமாக'... விரிந்து விடுகிறது. அந்த விரிதலை விவரிப்பதே... மகாபலியின் சரித்திரத்தில், மண்ணையும்... விண்ணையும்...கடந்து, பாதாளம் வரை பதியும் பாதங்களின் மகிமையை விளக்கும் 'விஷ்ணு பகவானின்' அவதாரமான.. 'வாமனரின்' வடிவம் வெளிப்படுத்துகிறது. இதைத்தான்... ஆத்மாவை மூலமாகக் கொண்ட மனம் என்னும் சக்தியின் விரிவாக... 'திருவோண நட்சத்திரம்' உணர்த்துகிறது.

அதைத்தான், கர்ம வினைகளை' சுமந்து கொண்டிருக்கும் ஜீவன், அதன் வினைகளை எண்ணங்களாக வெளிப்படுத்தும் 'மனம்' என்னும் மூலத்தைக் குறிக்கும் 'சந்திர பகவான்'... 'மனோகாரகனான'சந்திர பகவானின் சாரத்தில் உலவும்... 'திருவோண நட்சத்திரம்' சுட்டிக் காட்டுகிறது.

'கர்ம வினைகளின்' வழியே பயணித்துக் களைத்து போகும் ஜீவன்... அதன் தொடர் பிறவிகள் என்ற பிறவிப் பிணியிலிருந்து நீங்குவதற்கு... அந்த ஜீவனுக்கு மூலமாக இருக்கும் 'ஆத்ம சொரூபத்தின்' அருள் பெரும் கருணையில் கலந்து போவதொன்றே வழி !

அதனால்தான், திருவாதிரை நட்சத்திரத்தன்று, 'ஆனந்த நடனம்' புரியும் 'நடராஜரையும், திருவோண நட்சத்திரத்தன்று, 'அரி துயில் புரியும்' அரங்கநாதரையும், தரிசித்து மகிழ்கிறோம்.

ஸாய்ராம்.


Saturday, December 26, 2020

'ஆத்ம விசாரணை' - பகவான் ரமண மகிரிஷி

           

இறைவனால் ஆட்கொளப்படுதல்... என்ற நிலைதான், ஆத்ம விசாரணையின் இறுதியில் நிகழும் அற்புதம் !

சீர்காழியில் பிறந்த சின்னக் குழந்தையான 'சம்பந்தனை' தனது அருள் கருணையினால்... தாயாரின் மூலமாக ஆட்கொண்டு... 'ஞான சம்பந்தனாக' மாற்றியருளினார்... சர்வேஸ்வரன்.

அதே அற்புதம்தான்... இளம் பிராயத்தினரான 'வேங்கடராமனின்' வாழ்விலும் நிகழ்ந்தது. திருவண்ணாமலையில் உறையும் 'அண்ணாமலையாரே', இந்த சிறுவனின் மனதில் எழுந்திருந்து, உலக வாழ்வின் சூழலிலிருந்து மீட்டு, அகத்துள் 'ஆத்ம அனுபவத்தைக்' கொடுத்தது மட்டுமல்ல... தனது வடிவேயான 'அருணை மலையிலேயே' அணைத்தும் கொண்டார்.

இந்த அனுபவத்தைத்தான்... தனது 'அருணாசல அக்ஷரமணமாலையில்'...

'அகம் புகுந்து ஈர்த்து உன் அகக் குகை சிறையாய்

அமர்வித்தது என்கொல் அருணாசலா...'

... என்று, தன்னை ஆட்கொண்டதையும்... தனக்குள்ளேயே தன்னை ஈர்த்துக் கொண்டதையும்...அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஸாய்ராம்.



 

Thursday, December 24, 2020

'சனி பகவான்' பெயர்ச்சி - 2020.

    


    
    

27.12.2020, மார்கழி மாதம் 12 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அதிகாலை 5.25 மணியளவில்...'விருச்சிக லக்னத்தில்'... உத்திராட நட்சத்திரத்தின் 3 ஆம் பாதத்தில்... தனுர் லக்னத்திலிருந்து... மகர லக்னத்திற்கு, 'சனி பகவான் 'பெயர்ச்சி அடைகிறார்.

1. சனி பகவான், தைர்ய ஸ்தானாதிபதியாகி, இராசியிலும்... நவாம்ஸத்திலும்... 'வர்க்கோத்துமம்' பெற்று வலுத்திருக்கிறார்.

2.  நீசம் பெற்றுள்ள 'தன - பஞ்சமாதிபதியாகிய', 'குரு பகவானுக்கு...' தனது அதீத பலத்தால்... 'நீச பங்கம்' என்ற யோகத்தை அளித்து... குரு பகவானுக்கு வலிமை சேர்க்கிறார்.

3. குரு பகவானின் வீடாகிய... தன பாவத்தில் இருக்கும் 'ஜீவன - லாபாதிபதிகளான'... 'சூரிய பகவானுக்கும், புத பகவானுக்கும்... ஸ்தான பலத்தை அளிக்கிறார்.

4. தான், 'தன - பூர்வ புண்ணியாதிபதியான', 'குரு பகவானுடன்' இணைந்து, பூர்வ புண்ணிய ஸ்தானத்தைத் தனது 3 ஆம் பார்வையால் பார்த்து அருள்கிறார்.

5. தனது 7 ஆம் பார்வையால் 'பாக்கிய ஸ்தானத்தையும்'... 10 ஆம் பார்வையால் 'சுக - சயன ஸ்தானத்தையும்' பார்த்து அருள்கிறார்.

6. தன்னோடு இணைந்திருக்கும்  'குரு பகவானின்' 5 ஆம் பார்வையால், பாக்கியாதிபதியாகிய 'சந்திர பகவானையும்'... தனது 7 ஆம் பார்வையால் 'பாக்கிய ஸ்தானத்தையும்' பார்வை செய்கிறார்.

7. லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்', 6 ஆம் இடத்தில், வலுத்திருக்கிறார். லக்னத்திலேயே, 7 ஆம் ஸ்தானாதிபதியாகிய 'சுக்கிர பகவானை' அமர்த்தி... தனது 4 ஆம் பார்வையால், 'பாக்கிய ஸ்தானத்தையும்'... 7 ஆம் பார்வையால் 'சுக - சயன ஸ்தானத்தையும்'... 8 ஆம் பார்வையால், 'லகனத்தையும்'... பார்வை செய்கிறார்.

8. கார்த்திகை நட்சத்திரத்தில் இந்தப் பெயர்ச்சி நிகழ்ந்து... 'சூரிய பகவானின்' 6 வருட தசாவில்... தற்போது எஞ்சியிருக்கும் காலம்... 2 வருடம், 1 மாதம், 2 நாளை கடந்து கொண்டிருக்கிறது.

9. ஜீவனாதிபதியாகிய 'சூரிய பகவான்' தன பாவத்தில்... லாபாதிபதியாகிய 'புத பகவானோடு' இணைந்தது மட்டுமல்ல... தனது 'நட்சத்திர சாரத்தால்'... 'சனி பகவானையும்', 'குரு பகவானையும்' இயக்கிக் கொண்டும் இருக்கிறார்.

... இந்த அம்சங்கள் அளிக்கும் பலன்கள் :

 17.10.2020 லிருந்து 29.1.2023 வரையிலான காலம்...

* கடந்த ஒரு வருடமாக நிலவி வந்த பொருளாதர நெருக்கடிகளை... இனி எதிர்கொள்ளும் தொழில் முயற்சிகளாலும், அதிலிருந்து பெறும் லாபத்தைக் கொண்டும்... கடந்து போக முடியும்.

* தற்போது எதிர்கொள்ள வேண்டிய சூழல் மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த காலம்தான்... ஆனால் அதை எதிர் கொள்ளும் தைர்யமும், போராடி இறுதியில் வெற்றி பெறும் சூழலும்.. அமையும்.

* ஒவ்வொருவரும்... அவரவர்களுக்கான கடமைகள் அனைத்தையும்... அவரவர்களின் சூழ்நிலைகளுக்கு  ஏற்ப... பூர்த்தி செய்வர்.

* தன்னோடு இணைந்து, வாழ்வில் பயணிக்கும் நபர்களினால் அழுத்தங்களும்... நெருக்கடிகளும்... கூடினாலும், அதைப் பொறுமையாகவும்... திறமையாகவும்... கையாண்டு, தமது அனைத்துக் கடமைகளையும் பூர்த்தி செய்யும் வல்லமை கூடும்.

* 17.10.2020 முதல் 23.9.2021 வரை பொருளாதர முன்னேற்றமும்...

* 23.9.2021 முதல் 29.1.2022 வரை சற்று மன அழுத்தங்களும்...

* 29.1.2022 முதல் 29.1.2023 வரை அழுத்தங்களில் இருந்து மீண்டு... அனைவரின் ஒத்துழைப்பையும் பெறும் காலமாகவும்...

* 29.1.2023 க்கு மேல்... மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி... மன நிம்மதியான வாழ்வும் அமையும்.

''சங்கடம் தீர்க்கும் சனி பகவானே ! 

மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய் !

சச்சரவின்றிச் சாகா நெறியில்...

இச்சகம் வாழ இன்னருள் தருவாய் !'

ஸாய்ராம்.

Friday, December 4, 2020

'கர்ம வினைகள் களைந்து போகும் மாயம்'

                                                                



ஜீவ வாழ்வின் மூலமாக இருப்பது, அதன் 'கர்ம வினைகளே'. அந்தக் 'கர்ம வினைகளின்', பாப மற்றும் புண்ணிய விளைவுகளைச் சுமந்து கொண்டுதான், ஜீவன் ஒரு பிறவியை அடைகிறது.

தனது வாழ் நாட்கள் முழுவதும், இந்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, தனது செயல்களால், துன்பங்களையும், இன்பங்களையும் மாறி, மாறி அனுபவிக்கும் ஜீவன், இறுதியில் இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகள்' அனைத்தும் பூரணமான பின்... இந்தப் பிறவியில் தான் சேர்த்த 'கர்ம வினைகளையும்' சேர்த்துக் கொண்டு.. அடுத்தப்   பிறவியை நோக்கி நகர்கிறது.

இவ்வாறு, தொடர்ந்து பிறவிகளையே அனுபவித்துக் கொண்டு அல்லலுறும் ஜீவன், எப்போதோ ஒரு பிறவியில்... தனது புண்ணிய பலன்களின் பூரணத்துவத்தால், தனது 'கர்ம வினைகளின்' மொத்தத்தையும் களைந்து விடத் துணிகிறது.

அந்தத் துணிவுதான், ஜீவனை, 'கர்ம யோகத்திலோ'... 'பக்தி யோகத்திலோ'... ஞான யோகத்திலோ'... பயணிக்க வைக்கிறது.

இதில், எந்தப் பாதையை, ஜீவன் தேர்ந்தெடுத்தாலும்... அது, அந்த ஜீவனை, அதன் 'கர்ம வினைக்' கட்டுகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கும் வகையில் பயணிக்க வைக்கிறது.

ஒவ்வொரு பாதையும், மிகவும் கடினமானது என்பதில். சந்தேகமே இல்லை. ஆனால், அதில் பயணிக்கும் வல்லமை ஜீவனுக்கு இருக்கிறது. தான் தேர்ந்தெடுக்கும் பாதையோ... அல்லது தனக்கு அமையும் பாதையோ... அதில் இடைவிடாது பயணிப்பதே.... ஜீவனின் கடமை, இதுதான் கர்ம வினைகள் களைந்து போவதின் மாயம்.

ஸாய்ராம்.



Tuesday, December 1, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 147. 'செய்வினைகள்'




'செய்வினைகள்' என்ற உடனேயே, நமது எண்ணங்களில் வெளிப்படுவது பில்லி... சூனியம்... ஏவல் என்ற சொற்களே. ஆனால், செய்வினை என்பதிலேயே, அதற்கான 'அர்த்தம்' பொதிந்திருக்கிறது, அது நாம் முற்பிறப்புகளிலும்... இப்பிறப்பிலும்... செய்த மற்றும் செய்து கொண்டிருக்கிற வினைகளின் விளைவுகள்... அதாவது 'செய்த வினைகளின் விளைவுகள்தான்'.

அவ்வாறு, நமது முந்தைய பிறவிகள் தோறும், 'செய்த வினைகளை' வேதம், 'கர்ம வினைகள்' என்ற மொத்தக் கர்மங்களின் தொகுப்பாக, 'சஞ்சித கர்மா' என்று குறிப்பிடுகிறது. இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை', 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவியில் மேற்கொள்ளும் வினைகளின் விளைவை 'ஆகாமிய கர்மா' என்றும் அழைக்கிறது.

இந்த 'வினைகளின் விளைவுகளைத்தான்' ஒவ்வொரு ஜீவனும், தங்களது வாழ்நாட்களில் இன்பமும் - துன்பமுமான, 'இரட்டைச் சூழல்களாக அனுபவித்து வருகின்றது. இந்த 'கர்ம வினைகள்' என்ற ஜீவனின் 'வாழ்க்கை இரகசியத்தை' வெளிப்படுத்தும் கலைதான்... ரிஷிகளால் வகுத்தளிக்கப்பட்ட வேதத்தின் அங்கமான 'ஜோதிடக் கலை'.

இந்த வாழ்க்கை இரகசியத்தைத்தான், ஜோதிடச் சித்திரத்தில் அமைந்திருக்கிற 'நவக்கிரகங்கள்' சூட்சுமமாக விளக்குகின்றன. ஜோதிடச் சித்திரத்தில் அமைந்திருக்கிற 12 பாவங்களின் வழியாக... ஜீவனின். 

~ 'சூக்ஷும வாழ்வை', 1, 5 மற்றும் 9 ஆகிய 'திரிகோண பாவங்களும்',

~ ஸ்தூல வாழ்வை, 1, 4, 7 மற்றும் 10 ஆகிய 'கேந்திர பாவங்களும்'.

~ புண்ணிய விளைவுகளை, 2 மற்றும் 11 ஆகிய 'பண பர ஸ்தானங்களும்',

~ பாப விளைவுகளை, 3,6,8 மற்றும் 12 ஆகிய 'துர் மற்றும் மறைவு ஸ்தானங்களும்', வெளிப்படுத்துகின்றன்.

'செய்வினைகள்' என்ற 'பாப மற்றும் புண்ணிய விளைவுகளை' பிரித்து அறியும் பாவங்கள்தான்... 'துர் மற்றும் மறைவு ஸ்தானங்கள்'. இதில்,

* 3 ஆம் பாவம், அந்த வினைகள் எந்தத் தொடர்புகளால் ஏற்படப் போகிறது... என்பதையும்,

* 6 ஆம் பாவம், அந்த வினைகள் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதை, அது ருணமாகவா (கடன் தொல்லைகள்)... ரோகங்களாகவா (நோய்கள்)... சத்ருக்களாகவா (எதிரிகள்)... என்பதையும்...

* 8 ஆம் பாவம், அந்த வினைகள், ஜீவனது ஆயுட்காலங்களில் எவ்வாறெல்லாம் நிகழப் போகிறது, அதை அந்த ஜீவன் எவ்வாறு அனுபவிக்கப் போகிறது... என்பதையும்,

* 12 ஆம் பாவம், அந்த வினைகளை, ஜீவன் எவ்வாறு கடந்து போகிறது என்பதையும்... அதை எதிர்கொள்ளும் போது, அது எவ்வாறு தனது பற்றுக்களை துறக்கப் போகிறது என்பதையும், வெளிப்படுத்துகிறது.

மேற்கண்ட 4 பாவங்களின் துல்லியமான ஆய்வுகள், ஒவ்வொரு ஜீவனின் 'வாழ்க்கை இரகசியங்களான' செய்வினைகளை பகுத்து அளித்து விடும். அதற்கேற்ப ஜீவன் தனது வாழ்வை மேற்கொள்ளும் போது, ஜீவன், தனது பாப வினைகளை மிக எளிதாகக் கடந்து போகலாம்.

இதிலிருக்கும் மிக முக்கியமான சூட்சுமம் என்னவெனில், இந்த 4 பாவங்களையும் துல்லியமாக அறிந்து சொல்பவர்கள், ஜீவனின் நல் வாழ்வுக்கு வழி காட்டும் 'தெய்வக்யஞர்களான' ஜோதிடர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். 

அதற்காகத்தான்,'குல தெய்வ'... 'இஷ்ட தெய்வ'... 'குருவருள்'... கருணையை வேண்டி, அவர்களின் திருவடியில் ஜாதகத்தை வைத்து வணங்கிப் பிரார்த்தித்து, அதன் பின்னர் அவர்கள் வழிகாட்டும் ஒரு ஜோதிடரை அணுக வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் மனதில் இருந்து, தெய்வங்கள் இந்த வழி காட்டுதலை அளிக்கும் என்பது திண்ணம்.

மேலும், பொதுவழிகளில் ஜாதகத்தை வெளியிடும் போது, பல நேரங்களில் ஜாதகருக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. ஜாதகரின் நல்வாழ்வை விரும்பாதவர்களின் பார்வையில், ஜாதகரின் துன்ப காலங்களின் நிலைகள் தெரியும் பட்சத்தில், அந்தக் காலங்களை அறிந்து, அவர்கள் ஏற்படுத்தும்,துன்பங்களால், ஜாதகர் பெரும் அவதிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...