Tuesday, December 1, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 147. 'செய்வினைகள்'




'செய்வினைகள்' என்ற உடனேயே, நமது எண்ணங்களில் வெளிப்படுவது பில்லி... சூனியம்... ஏவல் என்ற சொற்களே. ஆனால், செய்வினை என்பதிலேயே, அதற்கான 'அர்த்தம்' பொதிந்திருக்கிறது, அது நாம் முற்பிறப்புகளிலும்... இப்பிறப்பிலும்... செய்த மற்றும் செய்து கொண்டிருக்கிற வினைகளின் விளைவுகள்... அதாவது 'செய்த வினைகளின் விளைவுகள்தான்'.

அவ்வாறு, நமது முந்தைய பிறவிகள் தோறும், 'செய்த வினைகளை' வேதம், 'கர்ம வினைகள்' என்ற மொத்தக் கர்மங்களின் தொகுப்பாக, 'சஞ்சித கர்மா' என்று குறிப்பிடுகிறது. இந்தப் பிறவிக்கான 'கர்ம வினைகளின் தொகுப்பை', 'பிராரப்த கர்மா' என்றும்... இந்தப் பிறவியில் மேற்கொள்ளும் வினைகளின் விளைவை 'ஆகாமிய கர்மா' என்றும் அழைக்கிறது.

இந்த 'வினைகளின் விளைவுகளைத்தான்' ஒவ்வொரு ஜீவனும், தங்களது வாழ்நாட்களில் இன்பமும் - துன்பமுமான, 'இரட்டைச் சூழல்களாக அனுபவித்து வருகின்றது. இந்த 'கர்ம வினைகள்' என்ற ஜீவனின் 'வாழ்க்கை இரகசியத்தை' வெளிப்படுத்தும் கலைதான்... ரிஷிகளால் வகுத்தளிக்கப்பட்ட வேதத்தின் அங்கமான 'ஜோதிடக் கலை'.

இந்த வாழ்க்கை இரகசியத்தைத்தான், ஜோதிடச் சித்திரத்தில் அமைந்திருக்கிற 'நவக்கிரகங்கள்' சூட்சுமமாக விளக்குகின்றன. ஜோதிடச் சித்திரத்தில் அமைந்திருக்கிற 12 பாவங்களின் வழியாக... ஜீவனின். 

~ 'சூக்ஷும வாழ்வை', 1, 5 மற்றும் 9 ஆகிய 'திரிகோண பாவங்களும்',

~ ஸ்தூல வாழ்வை, 1, 4, 7 மற்றும் 10 ஆகிய 'கேந்திர பாவங்களும்'.

~ புண்ணிய விளைவுகளை, 2 மற்றும் 11 ஆகிய 'பண பர ஸ்தானங்களும்',

~ பாப விளைவுகளை, 3,6,8 மற்றும் 12 ஆகிய 'துர் மற்றும் மறைவு ஸ்தானங்களும்', வெளிப்படுத்துகின்றன்.

'செய்வினைகள்' என்ற 'பாப மற்றும் புண்ணிய விளைவுகளை' பிரித்து அறியும் பாவங்கள்தான்... 'துர் மற்றும் மறைவு ஸ்தானங்கள்'. இதில்,

* 3 ஆம் பாவம், அந்த வினைகள் எந்தத் தொடர்புகளால் ஏற்படப் போகிறது... என்பதையும்,

* 6 ஆம் பாவம், அந்த வினைகள் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதை, அது ருணமாகவா (கடன் தொல்லைகள்)... ரோகங்களாகவா (நோய்கள்)... சத்ருக்களாகவா (எதிரிகள்)... என்பதையும்...

* 8 ஆம் பாவம், அந்த வினைகள், ஜீவனது ஆயுட்காலங்களில் எவ்வாறெல்லாம் நிகழப் போகிறது, அதை அந்த ஜீவன் எவ்வாறு அனுபவிக்கப் போகிறது... என்பதையும்,

* 12 ஆம் பாவம், அந்த வினைகளை, ஜீவன் எவ்வாறு கடந்து போகிறது என்பதையும்... அதை எதிர்கொள்ளும் போது, அது எவ்வாறு தனது பற்றுக்களை துறக்கப் போகிறது என்பதையும், வெளிப்படுத்துகிறது.

மேற்கண்ட 4 பாவங்களின் துல்லியமான ஆய்வுகள், ஒவ்வொரு ஜீவனின் 'வாழ்க்கை இரகசியங்களான' செய்வினைகளை பகுத்து அளித்து விடும். அதற்கேற்ப ஜீவன் தனது வாழ்வை மேற்கொள்ளும் போது, ஜீவன், தனது பாப வினைகளை மிக எளிதாகக் கடந்து போகலாம்.

இதிலிருக்கும் மிக முக்கியமான சூட்சுமம் என்னவெனில், இந்த 4 பாவங்களையும் துல்லியமாக அறிந்து சொல்பவர்கள், ஜீவனின் நல் வாழ்வுக்கு வழி காட்டும் 'தெய்வக்யஞர்களான' ஜோதிடர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். 

அதற்காகத்தான்,'குல தெய்வ'... 'இஷ்ட தெய்வ'... 'குருவருள்'... கருணையை வேண்டி, அவர்களின் திருவடியில் ஜாதகத்தை வைத்து வணங்கிப் பிரார்த்தித்து, அதன் பின்னர் அவர்கள் வழிகாட்டும் ஒரு ஜோதிடரை அணுக வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் மனதில் இருந்து, தெய்வங்கள் இந்த வழி காட்டுதலை அளிக்கும் என்பது திண்ணம்.

மேலும், பொதுவழிகளில் ஜாதகத்தை வெளியிடும் போது, பல நேரங்களில் ஜாதகருக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. ஜாதகரின் நல்வாழ்வை விரும்பாதவர்களின் பார்வையில், ஜாதகரின் துன்ப காலங்களின் நிலைகள் தெரியும் பட்சத்தில், அந்தக் காலங்களை அறிந்து, அவர்கள் ஏற்படுத்தும்,துன்பங்களால், ஜாதகர் பெரும் அவதிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...