ஒரு மழைக்கால காலை நேரம்... கடைக்கு வெளியே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். குளிரிலும், மழையிலும் நனைந்ததால், நடு நடுங்கிக் கொண்டே, முனகிக் கொண்டிருந்தான். கடை திறக்க வேண்டியிருப்பதால், அவனை எழுப்பி ஓரமாய் அமரச் சொல்லிவிட்டு, கடையைத் திறந்தோம்.
தேநீர் குடிக்கும் நேரத்தில், அவனை எழுப்பி, கொஞ்சம் தேநீரை ஊற்றிக் கொடுத்தோம். மெதுவாக எழுந்து, சத்தத்துடன் உறிஞ்சிக் குடித்தான். மீண்டும் கண்ணை மூடியபடியே, சுவற்றில் சாய்ந்து கொண்டான்.
மதியம் வீட்டுக்கு சாப்பிட போனபோது, அம்மாவிடம் காலையில் நடந்ததைச் சொன்னேன். நான் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்குப் போகும் போது, 'இதை கொண்டு போய் கொடு...' என்று இலையில் மடித்து கொஞ்சம் சாம்பார் சாதம் கொடுத்தார்.
அதைக் கொண்டு போய், ஓரமாக முடங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பிக் கொடுத்து சப்பிடச் சொன்னேன். மெதுவாக எழுந்து உட்கார்ந்து, இலையை விரித்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் மீண்டும் படுக்கவே இல்லை. அப்போதுதான், அவன் பசியால் வாடிப் போயிருந்தான்... என்ற உண்மையே எனக்குப் புரிந்தது.
நான் மாலையில், மீண்டும் வீட்டுக்குக் கிளம்பிப் போகும் போது... என்னை அவன் பின் தொடர்ந்து வந்தது... எனக்குத் தெரியாது. ஆனால், வீட்டை நெருங்கிய போதுதான், அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது தெரிந்து, வேகமாக உள்ளே சென்று, பயந்து கொண்டே, 'அம்மா, அந்த ஆளு என் பின்னாலேயே வந்து விட்டான்...' என்று மெதுவாக, அப்பாவுக்குக் கேட்டு விடாமல் சொன்னேன்.
வெளியே வந்து பார்த்த அம்மாவின் முன், கண்களில் கண்ணீர் கசிந்த படியே, நன்றியுடன் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்த போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'யாருப்பா... நீ , எங்கேயிருந்து வந்திருக்கிற ?' அன்று கேட்ட அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கப் போனவனை, அம்மா சற்று விலகி நின்றபடியே பார்த்து, 'சரி... நீ ஒண்ணும் பேச வேணாம். பின்னால போய் விறகுகள் வைக்கிற இடத்தில, சாக்கை விரிச்சு படுத்துக்க,.தம்பிக்கிட்ட ரொட்டி கொஞ்சம் கொடுத்தனுப்பிறேன்.' என்றார்.
காலையில், எழுந்து பார்த்த போது, வீட்டை சுற்றியுள்ள இடம் எல்லாம் கூட்டப்பட்டு சுத்தமாக இருந்தது. தோட்டத்தில் இருந்த செடிகள் அனைத்தும் மழையில் நனைந்தது போல செழிப்பாக இருந்தன. அம்மா, ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, விறகுகள் வைக்கும் இடத்தில் போய் பார்த்த போது, சாக்குகள் எல்லாம் ஒழுங்காக சுருட்டி வைக்கப்பட்டு, அந்த இடம் முழுவதும் மிக சுத்தமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்ததும், 'அம்மா !' என்று ஒரு குரல் கேட்டு நான் வெளியே வந்து பார்த்த போது, நெற்றியில் நிறைந்த விபூதியுடன், உடலில் பிழிந்து உதறிய ஈர உடையுடன், பவ்யமாக நின்று கொண்டிருந்தவனை பார்த்து... நேற்று பார்த்தவனா இன்று இப்படி இருக்கிறான்... என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன்.
பின்னாலெயே, வந்து நின்ற அம்மாவைப் பார்த்து, நேற்று போலவே கண்கள் கலங்கி, கும்பிட்டபடி, 'என் பேரு ராமசாமிம்மா, எனக்கு யாரும் இல்லை, நான் ஒரு அனாதைம்மா..' ன்னு சொன்னவனை, அம்மா பார்த்து, எதுவும் சொல்லாமல், 'போய், தோட்டத்தில ஒரு இலையை பறிச்சிட்டு வா... சாப்பாடு தர்றேன்...' சொன்னதும், கண்களை புறங்கையால் துடைத்த படியே ஓடினான்.
'இப்படி, யாருன்னு தெரியாதவனை எல்லாம், கூட்டிட்டு வந்து தங்க வைச்சு, சாப்பாடு போடு..அப்புறம் ஏதும் பிரச்சனைன்னு வந்து சொல்லு பார்த்துக்கிறேன்...' ன்னு சொன்ன அப்பாவிடம், அம்மா, 'நமக்கு 12 பிள்ளைங்க இருக்காங்க. எதிர்காலத்தில, அவங்க எங்கெங்கெல்லாம் இருக்கப் போறாங்க... எப்படியெல்லாம் வாழப் போறாங்கன்னு தெரியாது... ஆனா, எங்கே இருந்தாலும், இருக்கிறத்துக்கும்... சாப்பிடறத்துக்கும்... மட்டும் அவங்களுக்குப் பஞ்சம் வந்து விடக் கூடாது...' என்று சொன்னார்.
இப்போதெல்லாம், ராமசாமிக்கு விறகு வைக்கும் இடம்தான் வீடு. என்னைப் பார்த்தவுடன், உடனே எழுந்து... 'சின்ன ராஜா..'ன்னு கூப்பிட்டபடியே நான் போகிற இடம், பள்ளிக் கூடமாக இருந்தாலும்... கடையாக இருந்தாலும்...வாசல் வரை துணைக்கு வருவான். சும்மா இருக்கும் நேரங்களில், அருகில் இருக்கும் கடைகளில் சுமை தூக்கி, அதில் வரும் சில்லறைகள மட்டும் சாக்குகளுக்குள், சேமித்து வைப்பான்.
அதை அவன் என்னா செய்கிறான் என்பது, எனக்கும், அம்மாவுக்கும் மட்டுமே தெரியும். 'என்ன... விறகு வைக்கிற இடத்தைச் சுற்றி... ஒரே சுருட்டுப் புகை நாற்றமா இருக்கு... ?' ன்னு அப்பா கேட்கிறப்போ, நானும், அம்மாவும் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொள்வோம்.
எனது 12 ஆவது வயதில், நான் வீட்டை விட்டு, கல்வி கட்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டியதாயிற்று. நான் கிளம்புவதற்கு முதல் நாள், ராமசாமியிடம் இதை சொன்ன போது, தலையை குனிந்த படியே கேட்டுக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலை, என்னை வழியனுப்ப எல்லோரும் வாசலில் காத்துக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்து வந்த ராமசாமி, தயக்கத்துடன் முன்னால் வந்து, இடுப்பில் வைத்திருந்த ஒரு பையில் இருந்து சிறிது விபூதியை எடுத்து, எனது நெற்றியில் வைத்தான்...'
வீட்டு வாசலில் வந்து நிற்கும் பேருந்தில் ஏறி, ஜன்னல் அருகே அமர்ந்து, எல்லோருக்கும் கையை காட்டும் போது... முதல் நாள், நானும், அம்மாவும் பார்த்த போது, எப்படி இருந்ததோ... அது போலவே இருந்தன... என்றும் மறவாத, அந்தக் கலங்கிய கண்கள். அவை, ராமசாமியினுடையது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment