Sunday, August 30, 2020

மஹாபலிச் சக்கரவர்த்தியின் பிறவி இரகசியத்தைப் பற்றி, குருநாதர் அருளிய சிறு கதை...


    

பிறப்பின் சூட்சுமத்தைப் பற்றி விளக்க, எங்களது குருநாதர் ஒரு சிறு கதையைக் கூறினார் அது இறுதியில், மஹாபலிச் சக்கரவர்த்தியின் கதையாகவும் மலர்ந்தது.

'ஒரு நாள் ஈஸ்வரன், 'இன்று இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருப்பேன். எவர், என்னை இன்று, தேடி வருகிறாரோ... அவருக்கு சகல சௌபாக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய, ஒரு பிறவியை அளிப்பேன்'... என்று சங்கல்ப்பம் ஏற்றுக் கொண்டார்.'

'அவ்வாறே, அன்றைய இரவின் நடுநிசி நேரத்தில், சர்வேஸ்வரனுக்கு முன்னாலே, சுடர் விட்டுக் கொண்டிருந்த தீபத்தின் ஒளி, மங்க ஆரம்பித்தது. அப்போது, அந்தக் கருவறையில், அங்குமிங்குமாக ஒரு எலி ஓடிக் கொண்டிருந்தது.'

'அது தனது பசியைப் போக்கிக் கொள்ள, விளக்கில் இருக்கும் எண்ணையைக் குடிக்க வந்தது. எண்ணையைக் குடிக்கும் போது, அதன் வால் பட்டு, திரி உயர்ந்தது. தீபத்தின் ஒளி பிரகாசமாகியது. தனது சங்கல்ப்பத்தின் படியே, அந்த எலிக்கு ஒரு பிறவியை அளித்தார். அதுதான் மஹாபலியாகப் பிறந்தது.'

'எலிக்கு வால் போன்றதுதான்... மனிதனுக்குப் பிறப்பு... அது நம்மோடு எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது' என்று கூறி, மஹாபலிச் சக்கரவர்த்தியின் பிறப்பு இரகசியத்தோடு... ஜீவர்களின் பிறப்பின் இரகசியத்தையும் கூறி... கதையைப் பூரணமாக்கினார், எங்கள் குருநாதர்.

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.

Wednesday, August 26, 2020

பிரகார வலம் வருதலின் சூட்சுமம்.


         

மாட்டை மேய விடுவதற்காக, அதை நல்ல புற்கள் மிகுந்திருக்கும் பகுதியில், ஒரு குச்சியை ஊன்றி, ஒரு குறிப்பிட்டுள்ள சுற்றளவு மேய்வதற்கு வசதியாக, ஒரு கயிற்றைக் கொண்டு கட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

பசியுடன் இருக்கும் மாடு, முதலில் பரபரப்புடன் மேய ஆரம்பிக்கும். கயற்றின் நீளத்திற்கு ஏற்ப, புற்களைச் சாப்பிடும் மாடு, தன்னையறியாமல் மெதுவாக அந்தக் குச்சியை சுற்ற ஆரம்பிக்கும். தனது கழுத்தில் கட்டியிருக்கும் கயறும், மெதுவாக அந்த குச்சியைச் சுற்ற ஆரம்பிக்கும்.

ஒரு வட்டத்தின் விளிம்பிலிருந்து புற்களைச் சாப்பிடும் மாடு, மெதுவாக நகர்ந்து, நகர்ந்து, அந்த வட்டத்தின் மூலமான குச்சியை நோக்கி நெருங்க ஆரம்பிக்கும். இப்போது மாட்டின் மேயும் பகுதி மெதுவாகக் குறையும். தனது கழுத்தில் கட்டியிருக்கும் பெரும் பகுதிக் கயிற்றின் நீளம், அந்தக் குச்சியை சுற்றியபடி இருப்பதால், நீளம் குறைந்து, சுற்றுவதற்கு வழியில்லாமலும்... மேய்வதற்கும் புற்கள் இல்லாமலும்... வயறு நிறைந்ததாலும்... மாடு அமைதியுடன் அமர்ந்து, தான்  வாய்ப் பகுதியில் சேமித்து வைத்திருக்கும் புற்களை அமைதியாக அசை போட ஆரம்பிக்கும்.

அதுபோலத்தான், ஆலயங்களின் பிரகார வலம் வருதலும். பரபரப்புடனும், அவசர அவசரமாகவும். மனதில் சுற்றுக்களை எண்ணியபடியே, ஆரம்பிக்கப்படும் பிரகார வலம்... சற்று நேரத்தில் பரபரப்பும் குறைந்து, வேகமும் குறைந்து, எண்ணிக்க்கையும் மறந்து, மனம் தன்னையறியாமல், எந்த எண்ணமும் இன்றி , அதுவாக ஒடுங்க ஆரம்பிக்கும்.

இப்போது, ஓரிடத்தில் அமர்ந்து, கண்களை மூட... எந்த வித சிரமமுன்றி மனம் தானாக உள் திரும்புதலை... எல்லோரும் அனுபவிக்கலாம்.

இதுதான், பிரகார வலம் வருதலின் சூட்சுமம்.

ஸாய்ராம்.

Tuesday, August 25, 2020

'பகவான்... பாகவதன்... பக்தன்' : குருநாதரின் அருளுரை.


'பகவான்... பாகவதன்... பக்தன்',  ஆகிய மூவரும் ஒருவரே... என்பதை, எங்களது குருநாதர், ஒரு சிறு கதையின் மூலம் விளக்கியருளினார்.

'ஒரு முறை ஆஞ்சநேயருக்கும், ஒரு பக்தருக்கும் இடையே ஒரு போட்டி நிலவியது. அது, 108 கற்களை ஒவ்வொன்றாக எடுத்து, அருகில் உள்ள கிணற்றில் போட வேண்டும்.யார் முதலில் போடுகிறார்களோ... அவர்களே வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவர்... என்பதுதான் போட்டியின் தாராம்ஸம்.'

'ஆஞ்சநேயர் ஒவ்வொரு கல்லாக எடுத்து, அதில் 'பகவான் இராமபிரானது' பெயரைப் பொறித்து, அதன் பின்னர், அதைக் கிணற்றில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், ஆஞ்சநேய பக்தரோ, ஒவ்வொரு கல்லிலும், 'பகவான் ஆஞ்சநேயரின்' பெயரைப் பொறித்து, அதன் பின்னர், அதை ஒவ்வொன்றாகக் கிணற்றில் போட்டுக் கொண்டிருந்தார்.'

'இறுதியில் வெற்றி பெற்றது, ஆஞ்சநேய பக்தர்தான். இது எவ்வாறு நிகழ்ந்தது...? என்று, ஆஞ்சநேயப் பிரபு, பகவான் ஸ்ரீ இராமபிரானிடம் கேட்கும் போது, பகவான், 'ஆஞ்ஞநேயா... ! பகவானை விட பாகவதன் உயர்ந்தவன், அவனைவிட உயர்ந்தவன் பாகவத பக்தன்...!' என்று பகர்ந்தார்.'

குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.

ஸாய்ராம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

Sunday, August 9, 2020

துயில், கனவு, நனவு.

    

நனவு என்ற நிலையில் நானும், எனக்கு முன்னால் இந்த உலகமும், அதில் இருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினங்களும் இருக்கும். இது அனைவருக்கும் அனுபவமாகும்.

அது போலவே, கனவு என்ற நிலையிலும், நானும், எனக்கு முன்னால் ஒரு உலகமும், அதில் இருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினஙளும் இருக்கும். இதுவும் அனைவருக்கும் அனுபவமாகும்.

ஆனால், துயில் என்ற தூக்கத்தில் நான் என்ற அனுபவம் மட்டும்தான் இருக்கும். அதுவும் தூக்கம் கலைந்த பின்தான் அந்த அனுபவமும் தெரிய வரும்.

நனவு, கனவு மற்றும் துயில் என்ற மூன்று நிலைகளிலும் இருக்கும் ஒரே நிலை 'நான்' என்ற அனுபவம் மட்டுமே. ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலையில் இல்லாததற்குத்தான் மாயை என்று பெயர். 

ஆதலால், இந்த உலகமும், அதிலிருக்கும் படர்க்கை என்ற ஜடம் மற்றும் உயிரினங்களும் மாயையாகும்.

ஸாய்ராம்.

Friday, August 7, 2020

பகவான் ஸ்ரீ இராமபிரான்.

                                                                                                                                                                                                                                                                                                                                     wwwww
                                                                                                          

பகவான் ஸ்ரீ இராமபிரான், பிள்ளைப் பிராயத்திலிருக்கும் போது, அவரது தந்தையாரான, தசரத மகாராஜா, அவரின் முன்னழகை ரசிப்பதற்காக, 'ராமா, இங்கே வா... !' என்று அழைப்பார். வந்து நிற்கிற இராமரை ரசித்துப் பார்த்து விட்டு, ' சரி... ராமா, சென்று வா... !' என்று சொல்லி, அவர் செல்லும் போது அவரது பின்னழகிக் கண்டு ரசிப்பாராம்.

இதைத்தான், கம்ப நாட்டாழ்வார், தனது 'இராமகாதையில்', பகவான் இராமரை வருணிக்கும் போது, 

'தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் 

கமலமன்னத் தாள் கண்டார் தாளே கண்டார் 

தடக்கைக் கண்டாரும் அஃதே வாள் கொண்ட 

விழியார் யாரோ வடிவினை முடியக் காண்பார் ... ! '

... என்று சிலாகிருத்திருப்பார்.

ஸாய்ராம்.


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...