பிறப்பின் சூட்சுமத்தைப் பற்றி விளக்க, எங்களது குருநாதர் ஒரு சிறு கதையைக் கூறினார் அது இறுதியில், மஹாபலிச் சக்கரவர்த்தியின் கதையாகவும் மலர்ந்தது.
'ஒரு நாள் ஈஸ்வரன், 'இன்று இரவு முழுவதும் கவனித்துக் கொண்டிருப்பேன். எவர், என்னை இன்று, தேடி வருகிறாரோ... அவருக்கு சகல சௌபாக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய, ஒரு பிறவியை அளிப்பேன்'... என்று சங்கல்ப்பம் ஏற்றுக் கொண்டார்.'
'அவ்வாறே, அன்றைய இரவின் நடுநிசி நேரத்தில், சர்வேஸ்வரனுக்கு முன்னாலே, சுடர் விட்டுக் கொண்டிருந்த தீபத்தின் ஒளி, மங்க ஆரம்பித்தது. அப்போது, அந்தக் கருவறையில், அங்குமிங்குமாக ஒரு எலி ஓடிக் கொண்டிருந்தது.'
'அது தனது பசியைப் போக்கிக் கொள்ள, விளக்கில் இருக்கும் எண்ணையைக் குடிக்க வந்தது. எண்ணையைக் குடிக்கும் போது, அதன் வால் பட்டு, திரி உயர்ந்தது. தீபத்தின் ஒளி பிரகாசமாகியது. தனது சங்கல்ப்பத்தின் படியே, அந்த எலிக்கு ஒரு பிறவியை அளித்தார். அதுதான் மஹாபலியாகப் பிறந்தது.'
'எலிக்கு வால் போன்றதுதான்... மனிதனுக்குப் பிறப்பு... அது நம்மோடு எப்போதும் ஒட்டிக் கொண்டே இருக்கிறது' என்று கூறி, மஹாபலிச் சக்கரவர்த்தியின் பிறப்பு இரகசியத்தோடு... ஜீவர்களின் பிறப்பின் இரகசியத்தையும் கூறி... கதையைப் பூரணமாக்கினார், எங்கள் குருநாதர்.
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment