Tuesday, July 22, 2025

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம். 

அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவான் சிரீடி ஸாயிமஹானின்' திருவடியில் கலந்து விட்ட, திரு ராஜ்மோகன் அவர்களுக்கும், எங்களது பலமுறைப் பயணமாகிய 'திருவண்ணாமலைப்' பயணத்தின் போதுதான் இந்த அற்புத வாய்ப்பு  நிகழ்ந்தது.                                 

பகவான் சேஷாத்திரி ...ரமண மகிரிஷிகள் ...யோகி ராம்சுரத்குமார் ஆசிரமங்களை சேவித்துவிட்டு, அன்று, சேஷாத்திரி ஆசிரமத்தில் சற்று உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த, 'ஸ்ரீ உமாதேவி தாயரை' தரிசனம் செய்ய முயன்று, வாய்ப்பில்லாது போகவே, அவரின் குடில் வாசலில் எங்களது அன்பை சமர்ப்பிவித்து விட்டு வெளியே வந்தோம்.  

ஆசிரமத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்த எங்களுக்கு அருகே இருவர் ஒரு 'அறிவிப்புப் பலகையை'  ஊன்றினார்கள். அந்த அறிவுப்பு பலகையில்தான் 'தாயாரின் ஆசிரமத்திற்கு செல்லும் வழி' என்ற வாசகம் பதிவாகியிருந்தது.

உடனே எங்களது பயணம் தாயாரின் ஆசிரமத்தை நோக்கி தொடர்ந்தது. மாடியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்த 'திரு வேலன்' அவர்களை கீழிருந்து பார்த்தோம். அன்புடன் எங்களை மேலே அழைத்து எங்களிடம்  நீண்ட நேரம் உரையாடினார்.  

தாயாரின் தரிசனத்திற்கு தற்போது வாய்ப்பில்லை என்று கூறியவரிடம், நாங்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு திருவண்ணாமலையில்தான் இருப்போம் என்றும், இருக்கும் வரை ஆசிரமம் வந்து செல்கிறோம் என்றும் கூறி ... தாயாரின் குடிலை நொக்கி வணங்கி எழுந்து வந்தோம்.                   

அடுத்த நாள் காலையிலும் ... அதற்கு அடுத்த நாள் மாலையிலும் தாயாரின் குடிலுக்குச் சென்றோம். அந்த மாலை வேளையின் அனுபவத்தை, என்றுமே மறக்கமுடியாது.                        

எங்களது அன்பை வெளிப்படுத்த சிறிது பழங்களை சமர்ப்பித்துவிட்டு, பின்னர்  ஊர் திரும்பலாம் என்பதுதான் எங்கள் திட்டம்.  திரு. வேலன் அவர்கள் எங்களிடம் அன்புடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.          

எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்த திரு. வேலன் அவர்களின் பின்னால் இருந்து ... தாயார் மெல்ல நடந்து வந்ததைக் கண்ட நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம்.                                            

இன்றும் அந்த நிகழ்வு என் கண் முன்னே நிலைத்து நிற்கிறது. 'ஒரு வண்ணத்துப் பூச்சி, மெல்லப் பறந்து வந்து , ஒரு மலரின் இதழ் மேலே, மெல்ல அமர்வது போல ...' தாயார் அங்கிருந்த இருக்கையில் மெல்ல அமர்ந்தார். பத்து நிமிடங்களுக்கு மேலாக, அந்த இருக்கையில் அமர்ந்தபடியே, எங்களை ஆழ்ந்து நோக்கி அருள் செய்தார். பின்னர் எழுந்து நின்று, தனது கையை உயர்த்தி,அனுக்கிரகம் செய்து விட்டு, மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே சென்றார்.                                            

வஜ்ராஸ்னத்தில் அமர்ந்திருந்த நான், இந்த நிகழ்வு முழுவதும் ... கண்களில் நீர்மழ்க ... அணு அணுவாக உள்வாங்கிக் கொண்டேன். அருகிலே அண்ணார் , கண்களை மூடியபடியே ஆனந்தத்தில் திழைத்திருந்ததை பிறகுதான் என்னால் உணரமுடிந்தது.                                                  

தாயாரால் அனுக்கிரகிக்கப்பட்ட பின்னர் ... திரு. வேலன் அவர்களால் வழங்கப்பட்ட பிரசாதமான பழங்கள், தாயாரின் திருவுருவப் படங்களுடனும், நிறைந்த மனதுடன்  திரும்பியதும் ... அன்று இரவு கிரிவலப் பயணத்தின் போது திரு, வேலன் அவர்களுடன் மீண்டும் ஒரு தேநீர் விடுதியில் சந்திப்பு நிகழ்ந்ததும் ...இன்றும் பசுமையாக மனதில் நிழலாடுகிறது.                                                   

ஸாய்ராம்.




Thursday, January 25, 2024

வக்கிரம் ... ஒரு பார்வை

 ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தில் இருந்தோ அல்லது இராசியில் இருந்தோ, பின்னோக்கி செல்வதை, 'வக்ரம்' என்று அழைக்கிறோம். 

இதன் விளைவுகள், ஜீவர்களின் 'புண்ணிய - பாவங்களை' ஒட்டி நிகழ்கின்றன. 

உதாரணமாக, மதிய 1 மணிக்கு அவசியமாக சென்னையில்  இருக்க வேண்டிய ஒருவர், மிக அவசரமாக திருச்சியிலிருந்து காலை 6.40 ரயிலுக்கு புறப்படுகிறார். 

ரயில்வே நிலையம் செல்லும் வழியில் ஏற்படும் வாகன நெரிசல், அவரை 6.50 க்கு கொண்டு சேர்க்கிறது. நம்பிக்கை இழந்த நிலையில், நடை மேடைக்கு சென்றவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. இவருக்காகவே காத்திருந்தது போல, இவர் ஏறிய பின், ரயில் 7 மணிக்கு கிளம்பியது. 

இந்த ரயிலின் தாமதத்தை போன்றதுதான், வக்கிர நிலையிலிருக்கும் கிரகம் விளைவிக்கும் 'புண்ணிய வினைகள்'.

கிரகங்கள் எப்போதும் நமது 'கர்ம வினைகளின் விளைவுகளைத் தான் சுட்டிக் காட்டுகின்றன. 

ஸாய்ராம். 


Thursday, January 18, 2024

ஆளவந்தார் அருளிய 'ஸ்தோத்திர ரத்தினம்'.

 

அவி வேக - கனாந்த - திங்முகே

பஹுதர ஸந்தத - து : க - வர்ஷிணி /

பகவன் ! பவ -  துர்தினே பத :

ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத //

(ஆளவந்தார் பிரபு அருளிய 'ஸ்தோத்திர ரத்தினம்' ; ஸ்லோகம் 49 ) 

பகவானே  !  அடியவரை கைவிடாதவனே  ! விகேமின்மை என்ற முகிலகளினால் திசைகள் இருளடைந்துள்ளன ; இடைவிடாமல் பலவகைகளாகத் துன்பமழை பொழிகிறது ; சம்சாரம் என்ற மழைக்கால இருள் என்னை சூழ்ந்துள்ளது ; நல் வழியிலிருந்து தவறியிருக்கிறேன். இத்தகைய என்னிடம் அருட்பார்வை கொள்வாய. 

நமோ நாராயணாய நமஹ

ஸாய்ராம்

Monday, January 30, 2023

'கொல்லான் பொய்கூறான் களவிலான்...' திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல் ; 'இயமம்' ; பாடல்-554.


 

'கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்

நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய

வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லா நியமத் திடைநின் றானே'

(திருமந்திரம் ; இயமம் ; பாடல் 0 554)

'பதஞ்சலி மகாமுனிவர் வகுத்தளிக்கும் 'அட்டாங்க யோகத்தின்' முதல் படியாக இந்த 'இயமம்' என்ற 'பக்தி நெறி' வருகிறது.

அட்டாங்க யோகம் (இயமம்- நியமம்-ஆசனம்-பிரணாயாமம்-பிரத்யாகாரம்-தாரணை-தியானம்-சமாதி) என்பது, யோக மார்க்கமாக இறைவனை அடையும் வழியாகும். இந்த யோகம்.... இவ்வுயிரையும் (ஜீவன்), உடலையும் (உடல்), இவற்றிற்கு மூலமாக இருக்கும் இறைவனிடம் (ஆத்மா) கொண்டு சேர்க்கும் உபாயத்தை பயிற்றுவிக்கிறது.

இதன் முதல் படியாக பக்தியை (இயமம்) முன்வைக்கிறார், பதஞ்சலி தேவர். அந்த பக்திதான் படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு ஜீவனை இட்டுச் செல்கிறது.

இறைவனின் மீது வைக்கும் பக்தியினால் விளைவதுதான் என்ன ? 

இந்த கேள்விக்கு 'திருமூலர்' அளிக்கும் பதிலாகத்தான் இந்த திருமந்திரப் பாடல் அமைகிறது. 

~ மனதளவிலும் தீங்கு நினைக்காதவனாய்...

~ பொய் கூறாதவனாய்...

~ பிறர் பொருளை அபகரிக்காதவனாய்...

~ அன்பு, அமைதி, பொறாமையின்மை, தூய்மை, ஏற்றுக்கொள்ளும் தன்மை, ஆனந்தம், தர்மம், ஆசையின்மை என்ற 'எண் குணங்களைக்' கொண்டவனாய்...

~ பணிவுடையவனாய்...

~ நீதி தவறாமல் இருப்பவனாய்...

~ பகிர்ந்து கொடுப்பவனாய்...

~ குற்றமில்லாதவனாய்...

~ முறையற்ற காமமில்லாதவனாய்...

ஒருவனை மாற்றி விடும் வல்லமையை இந்த 'பக்தி' என்ற இயமம் நமக்கு அளித்து விடுகிறது. இந்த பக்தியே தொடரும் யோகங்களுக்கு அடிப்படையாகவும் அமைகிறது.

பக்தியின் பெருமையை, இதை விட வேறு எவ்வாறு எடுத்தியம்ப முடியும் ! 

ஸாய்ராம்.


Saturday, January 28, 2023

நினைவுப் பெட்டகத்திலிருந்து... சந்யாசி ஒருவரின் தரிசனமும், அவரளித்த அனுபவமும்


 

எங்களது நண்பர் ஒருவரின் இல்லத் துயர நிகழ்ச்சிக்காக, கரூருக்கு அருகிலிருந்த அவரது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தோம். இப்போது இருப்பதைப் போன்ற, நெடுஞ்சாலைகள் அப்போது இல்லாத நேரம். ஆனால், குளு குளு என்ற நிழலை அளிக்கும் மரங்கள் சாலையின் இருபுறமும் குடைகள் விரித்தாற்போல இருக்கும்..

லாலாபேட்டை என்ற இடத்தில், ரெயில்வே கேட்டிற்கு முன்பாக, ரயில் கடந்து போவதற்காக,  வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. எங்கள் வாகனமும் நின்றது. எப்போதும் போல, வெள்ளரிப் பிஞ்சுகள்... கொய்யாப் பழங்கள்... வேர்க்கடலைகள்... என வியாபாரம் செய்பவர்கள் வாகனங்களை சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்க, சற்று தூரத்திலிருந்து, ஒரு சந்யாசி எங்கள் வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், ரயில் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னால் இருந்து வாகனங்கள் புறப்பட ஆரம்பித்தன. அந்த சந்யாசியின் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. அவர் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த என்னை நோக்கி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தார், வாகனம் புறப்படுவதற்கு முன், அவருக்கு ஏதாவது தக்ஷணை கொடுத்து விட வேண்டுமென எனது பர்ஸை திறந்து, பணத்தை மடித்து கையில் வைத்துக் கொண்டேன். அதற்குள் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த எனது நண்பர், அவசர அவசராமக ஓட்டுநரை காரை எடுக்கச் சொன்னார். சில நிமிடங்களில் எங்களை அணுகிவிடும் அவரை நோக்கி, இவர் கும்பிட்டபடி 'சீக்கிரம்... சீக்கிரம்... 'எனக் கூற, வண்டியும் வேகமெடுத்துக் கிளம்பியது.

நான், சற்று ஏமாற்றத்துடன், கண்ணாடி வழியே திரும்பிப் பார்த்தேன். சாலையோரத்தில் சிரித்தபடியே நின்ற அவரின் முகம் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தது. '/என்னண்ணா இப்படி பண்ணீட்டிங்க ?' என்ற என் ஆதங்கத்துக்கு, 'நாம போகிற வழியில ஒரு சந்யாசி மடம் ஒண்னு இருக்கு. அதுல இன்னைக்கு அன்னதானம் நடக்கும். அதுக்காகத்தான் அந்த ஆளு, நம்ம காரை நிருத்தி, வழியில தன்னை இறக்கிவிடச் சொல்வதற்காக வந்தாரு. இதான் நமக்கு வேலையா ?'என்ற என் நண்பரின் சாமர்த்தியத்தை நினைத்து வண்டியில் என்னோடு பயணித்த நண்பர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனால், எனது மனக் கண்ணில், அந்த 'கனிவாகப் புன்னகைத்த முகம்' அழியாது இருந்தது.

சற்று பயணித்த போது, சாலையின் இடது புறத்தில் சில சந்யாசிகள் நடந்து போய்க் கொண்டிருந்ததையும், நண்பர், 'இந்த மடத்திலதான் அன்னதானம் நடக்கும்' என்று சுட்டிக் காட்டிய மடமும், கடந்து போக ஆரம்பித்தது. அப்போது எங்களது வாகனத்தைக் கடந்த ஒரு பேருந்து, சாலையின் முன்பு, பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்றது. எதிர்புற வலது புறமும் வாகனங்கள் வருவதால், எங்களது வாகனம் தடை பட்டு நின்றது.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது, முன் புறப் பேருந்திலிருந்து, அதே சந்யாசி இறங்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து பயணிகள் இறங்க ஆரம்பிக்க, அவர் இப்போது எங்களுக்கு எதிர்திசையில் எங்களது வாகனத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே மறக்கவொண்ணா புன்னகையுடன்... எங்களை நெருங்கியவர், ஒரு நொடி நின்று, முன் சீட்டில் இருந்த எனது நண்பரைப் பார்த்து விட்டு, என்னை நோக்கி வந்து  நின்ற அவரின் கைகளில், நான் அப்போதிருந்தே கையில் மடித்து வைத்திருந்த அதே தக்ஷணையை, அன்புடன் கொடுத்தேன். பெற்றுக் கொண்டு, எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.

எங்களது வாகனமும்... அதில் பயணித்த அனைவரும்... இறுதிவரை, மௌனமாகவே பயணித்தோம்.

ஸாய்ராம்.


Wednesday, January 25, 2023

பெரியவர் பயன்படுத்திய 'மந்திரக் கடிகாரம்'


 

திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில், புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் பெரியவர். சந்திரமௌளீஸ்வர பூஜைக்குப் பின், இரவு ஓய்வுக்கு செல்லுமுன், தனக்குப் பணிவிடை செய்யும் நாகராஜனிடம், 'அப்பா நாகு ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஸ்நானத்திற்கு எழுந்திருக்க வேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்' என்றார்.

நாகராஜன் பணிவுடன், 'உத்தரவு பெரியவா ! நாளை அதிகாலை 3.30 மணிக்கு, 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற நாமாவளியைப் பாடுகிறேன், பெரியவா !' என்றார்.

நாகுவின் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டே, பெரியவர், 'நான் உங்களை 3.30 மணிக்கு எழுப்புகிறேன், என்று சொல்வது முறையாக இருக்காது என்பதனால், ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர... எனச் சொல்வதாகக் கூறுகிறாயா ?' என்றதற்கு, பதில் என்ன சொல்வது என்பது தெரியாமல், தலையைக் குனிந்து கொண்டே சிரித்தார் நாகராஜன்.

'சரி அப்படியெ செய் !' என்ற படியெ பெரியவர், தனது அறைக்குள் சென்றார்.

ஆனால், நாகராஜனுக்கு இருந்த சிக்கல், அந்த சத்திரத்தில் கடிகாரம் இல்லை. இவரிடமும் அலாரம் அடித்து எழுப்பிவிடக் கூடிய கடிகாரம் இல்லை. இவரிடம் இருந்தது என்னவோ, ஒரு சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் மட்டும்ந்தான். அதுவும் அவரது மாமா, உபநயனத்தின் போது கொடுத்தது. சாமான்கள் வைக்கும் அறையிலிருந்த பெட்டியிலிருந்து அந்தக் கடிகாரத்தை எடுத்து, அதற்குச் சாவி கொடுத்துக் கட்டிக் கொண்டார். பின், பெரியவரின் அறைக் கதவுக்கு அருகே அமர்ந்து மெதுவாக 'விஷ்ணு சகஸ்ரநாமாவை' சொல்ல ஆரம்பித்தார், 

அடிக்கொரு தடவை கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், காலை சரியாக 3.30 மணிக்கு எழுந்திருந்து, கதவுக்கு முன் நின்று 'ஹர ஹர சங்கர,,,' என்ற அடுத்த நொடி, கதவு திறந்து தேஜஸ்ரூபியாக மகா பெரியவர் தரிசனமளித்தார். இந்த 'சுப்ரபாத தர்சினத்தை' காணும் பேறு நாகராஜனுக்குக் கிட்டியது. பின் வாசலை நோக்கி நடந்த பெரியவருக்குக் கைக்ங்கர்யம் செய்வதற்காக பின்னால் சென்றார்.

அடுத்த இரண்டு நாட்களும் இதே போல, நாகராஜனின் சகஸ்ரநாம பாராயானமும், சரியான நேரத்திற்கு 'ஹர ஹர சங்கர...; நாமஸ்மரணமும் தொடர்ந்தன. நான்காம் நாள் அதிகாலை வரை விழித்திருந்த நாகராஜன், சற்று அயர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்தார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர,,,; என்ற மகா பெரியவரின் குரலைக் கேட்டு விழித்ததும்தான், நாகராஜனுக்கு தான் நன்றாக தூங்கிவிட்டது தெரிய வந்தது. 

பெரியவரை வாஞ்சையுடன் பார்த்த நாகரஜனிடம், 'குழந்தாய் ! நேரம் இப்போது 3.30 மணி. முழுநாள் சேவையினால் நீ சோர்வுற்று, அதனால்தான் சற்று அயர்ந்து விட்டாய். இது இயற்கையாக நடப்பதுதான்.' என்று கூறியபடி, வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கும் போதுதான், நாகராஜன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்... மணி சரியாக 3.30.

அடுத்த ஐந்தாம் நாள் நாகராஜன் கங்கணம் கட்டிக் கொண்டு , ஒரு பானையில் தண்ணீரைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு, சகஸ்ரநாம பாராயணமும் அவ்வப்போது, குடத்து நீரினால் கண்களை கழுவிக் கொண்டும் அமர்ந்திருந்தார்.  இருந்தும், 2.30 மணியளவில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனார். 

ஆனால், பெரியவரின் அறைக்கதவு சரியாக 3.30 க்குத் திறந்தது. வெளியே வந்த பெரியவர், நாகராஜன், சரிந்து தரையில் படுத்து உறங்குவதைக் கண்டார். 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...' என்ற பெரியவரின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நாகராஜனைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, 'இன்னைக்கும் பாவம் உன்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. சரி ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்'. என்றபடி நடந்தார். மீண்டும், நாகராஜன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தர். மணி சரியாக 3.30.

எந்தக் கடிகாரமும் இல்லாம, எப்படி பெரியவா தினம் தினமும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார் ?' இந்த கேள்வி நாகராஜனின் மனதை துளைத்துக் கொண்டே இருந்தது. எப்படியும் இன்று மதிய ஓய்வின் போது அவரிடம் கேட்டு விட வேண்டும், என்று நினைத்தார். அது போலவே பெரியவர், ஓய்வாக அமர்ந்திருந்த போது, அருகே சென்று  நமஸ்கரித்த போது, 'ஏதோ கேட்கனுனும்னு. வந்திருக்க... தயக்கமில்லாம கேட்டுடு' என்றர் பெரியவர்.

'நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால சரியான நேரத்திற்கு எழுந்திருக்க முடியல. ஆனால், பெரியவா ஒவொரு நாளும் சரியான நேரத்திற்கு எழுந்திடுறார். பெரியவாளுக்கு எப்படி சரியான நேரம் தெரிகிறது ? என்பதுதான் எனது சந்தேகம்... பெரியவா !' என்றார் நாகராஜன்.

'ஏதோ ஒரு கர்ண யக்ஷணி வந்து என்னை சரியான நேரத்திற்கு எழுப்பி விடுறாளாங்கிற சந்தேகமா ?' என்று சிரித்த பெரியவர், 'அதெல்லாம் ஒண்னும் இல்லே, மதுரையிலிருந்து இங்கே புதுக்கோட்டைக்கு வருகிற டி.வி.எஸ் பஸ்தான் என்னை சரியான நேரத்திற்கு எழுப்பிவிடுது. நான் முதல் நாள் எழுந்து வந்த போது கேட்டுக்கு முன்னால அந்த பஸ் போறதை பார்த்தேன். விசரிச்சதில, அந்த பஸ் ஒவ்வொரு நாளும் சரியா 3.30 க்கு இந்த சத்திரத்தை கடந்து போகுன்னு சொன்னாங்க. அந்த பஸ்சின் நேரத்தைப் பார்த்து நம்ம கடிகாரத்தை சரி செய்து வைச்சுக்கலாங்கிற அளவிற்கு, நேரத்தை சரியா கடைப்பிடிக்கிற கம்பெனின்னு சொன்னாங்க. தொடர்ந்து அந்த பஸ் அதே நேரத்தில தினமும் தவாறம வந்தது. அந்த பஸ்தான் எனக்குக் கடிகாரம்' என்று பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னார் !

ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர...

(நன்றி : ஆசிரியர் 'திரு ரமணி அண்ணா. ஜகத்குரு ஸ்ரீ மகா பெரியவா - காஞ்சி பரமாச்சார்யா / Fb யிலிருந்து தொகுக்கப்பட்டது. )

தமிழாக்கம்.... அடியேன்.

ஸாய்ராம்.

Tuesday, January 24, 2023

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 242. சந்திர பகவானைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய குறிப்புகள்...


 

1. பூமியை, 27 நட்சத்திர மண்டலங்களில் வழியாக சுற்றி வருபவர்.

2. இந்த 27 நட்சத்திரங்களின் 108 பாதசாரங்களை, 30 நாட்களில் கடந்து செல்பவர்.

3. சராசரியாக 2 1/4 நாட்களில், 9 நட்சத்திர பாதசாரங்கள் கொண்ட ஒரு          இராசியைக் கடப்பவர்.

4. சூரிய பகவானின் பார்வையை கடக்கும் போது, வளர் பிறைச் சந்திரனாக...

சுபராகவும், அவரின் பார்வையிலிருந்து மறையும் போது, தேய்பிறைச்                  சந்திரனாக... அசுபராகவும் கணிக்கப்படுபவர்.

5. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்கும் போதும், அந்த நட்சத்திரத்தின்            பாதசாரக் கிரகத்தின் 'நவாம்ஸ பலத்தைப் பொருத்து, பலன்களை                          வெளிப்படுத்துபவர். 

உதரணமாக 'ரிஷப இராசியைக்' கடக்கும் போது, கார்த்திகை நட்சத்திரத்தின்      சாராதிபதியான 'சூரிய பகவானின்' நவாம்ஸ பலத்தையும்...ரோகிணி                      நட்சத்திரத்தைக் கடக்கும் போது, 'சந்திர பகவானின்' நவாம்ஸ நிலை                      பலத்தையும்... மிருகஷீரிட நட்சத்திரத்தைக் கடக்கும் போது, நவாம்ச        '    செவ்வாய் பகவானின்' பலத்தையும் கொண்டு, ஜாதகரின் கர்ம                                பலன்களை வெளிப்படுத்துபவர்.

6. ஒரு நிலையில், நிலைத்து நிற்காமல், தொடர்ந்து சுழற்சியை                                  மேற்கொள்வதால்தான் என்னவோ, அவரை, ஜீவனின் ஒரு நிலையில்                  நில்லாத 'மனதைக்' குறிக்கும் வண்ணமாக 'மனோகரகன்' என்று                              குறிப்பிடப்படுபவர்.

7. ஏனைய கிரகங்களின் கதிர் வீச்சுக்களை தன் மூலம் இந்தப் புவிக்குப் பரப்பும்  ஒரு 'செயற்கைக் கோளாக' செயல்படுவதால், 'ஜீவனின் உடலுக்குக்                        காரகனாகவும் கொள்ளப்படுபவர். ஆதலால்தான், இவர் உலவும்                                நட்சத்திரத்தில் ஜீவன் பிறப்பெடுக்கும் போது, அந்த நட்சத்திரம்                                  ஜாதகரின் 'ஜென்ம நட்சத்திரமாகவும்'... அந்த நட்சத்திர சாராதிபதியான              கிரகத்தின் தசாக் காலம் ஜீவனின், 'தசாக் காலமாகவும்' கணக்கிடப்படுகிறது.

8. எவ்வாறு ஜாதகரின் பிறந்த நேரத்தை வைத்துக் கணக்கிடப்படும் 'லக்னத்தை'அடிப்படையாகக் கொண்டு, ஜாதகரின் 'பூர்வ கர்ம வினைகள்' ஆய்வுக்கு                  உட்படுத்தப் படுகிறதோ... அது போல 'சந்திர பகவான்'

அமரும் 'இராசியை' மூலமாகக் கொண்டு, அந்த ஜீவனின் உடல் சார்ந்த உலக வாழ்வு, ஜீவன் இவ்வுலகத்தில் அக்கர்ம வினைகளின் விளைவுகளை எவ்வாறுகடந்து போகிறது என்பது கணிக்கப்படுகிறது.

9. பூர்வ கர்ம வினைகள் வெளிப்படுத்தும் விளைவுகளை, 'யோகங்களாகவும்...  தோஷங்களாகவும்...' வெளிப்படுத்தும் அமைப்புகளுக்கு துணையாக                      இருப்பவர்.

10. வளர் பிறை காலங்களில், சுபராகவும்... தேய் பிறை காலங்களில்                        அசுபராகவும்... தன்னை மாற்றிக் கொள்பவர்.

11.'செவ்வாய் - குரு பகவான்களுக்கு நடபானவராகவும், 'சூரிய - புத - சுக்கிர          பகவான்களுக்கு' சமமானவராகவும், 'சனி - ராகு - கேது பகவான்களுடன்              பகையாளராகவும், கணிக்கப்படுபவர்.

12. தனது வீட்டை /இராசிநாதராகக் கொள்ளும்' இவர், தனது இராசி விட்டுக்கு, 3,6,8 மற்றும் 12 அம் பாவங்களில் மறைவு பெறும் போது, எதிர்விளைவுகளை      எற்படுத்துபவராக அமைகிறார்.

13. கிரகங்களின் காரகத்துவங்களில், இவர் 'மாதுர் கார்ககன்' ஆகிறார்.                    பலன்களை கணிக்கும் போது, 'தாயாரை' குறிப்பவராகக் கொள்ளப்படுகிறார்.

14. 120 வருடங்களைக் கொண்ட 'விம்சோத்திரி தசாக் காலங்களில்', தனது        தசாவாக 10 வருடங்களை ஆட்கொள்பவர்.

15. 'பராசக்தி தேவியை' தனக்கு அதிபதியாகக் கொள்பவர்.

16. 'செவ்வாய் பகவானோடு' இணைந்திருக்கும் போது, உலக வாழ்விற்கான    ஆற்றலைக் கொடுக்கும் இவர், 'குரு பகவானோடு' இணையும் போது                      உள்வாழ்வான, ஞான வாழ்வுக்கு வித்திடுபவர்.

'எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி ! திருவருள் தருவாய்,

சந்திரா போற்றி ! சத்குரு போற்றி !

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி !'

ஸாய்ராம்.


ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...