'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்'. குறள் : 471.
ஒரு செயலை மேற்கொள்ளும் போது, அந்த செயலின் தன்மையையும், அதைச் செய்யக்கூடிய தனது வலிமையையும், அந்த செயலின் போது நாம் எதிர்கொள்பவரின் வலிமையையும், அந்த செயலுக்குத் துணை நிற்பவர்களின் வலிமையையும் சீர் தூக்கிச் செயல்பட வேண்டும்... என்பதாகத்தான் இதன் பொருள் அறியப்படுகிறது.
ஆனால், தெய்வப் புலவரான வள்ளுவர், 'செயலைப்' பற்றிக் குறிப்பிடும் போது, அதை 'வினை' என்பதாகக் குறிப்பிடுவதை சற்று ஆழ்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஏழு சொற்களை மட்டும் கையாண்டு, ஏழ் கடல்களுக்கு ஒப்பான ஞானத்தை இவரால் மட்டுமே அளிக்க முடியும்.
'வினை' என்பது செயலானாலும்... அது 'நமது பூர்வ கர்ம வினைகளினால்', நல்வினை, தீவினை என்ற இரண்டின் அடிப்படையில் அமைகிறது. நமது பூர்வ புண்ணியங்களின் விளைவுகள் நல்வினைகளாகவும்... பூர்வ பாப விளைவுகள் தீ வினைகளாகவும்... அனுபவத்திற்கு வருகின்றன.
இந்த இருவினைகளும் அதற்கேற்ற சூழல்களை தாமாகவே உருவாக்கிக் கொள்கின்றன. புண்ணிய வினைகள் அதற்கேற்ற சூழல்களை தாமாகவே உருவாக்கிக் கொண்டு, மிக நல்ல விளைவுகளை தந்து விடுகின்றன. பாப வினைகளும் அவ்வாறே, அதற்கேற்ற சூழல்களை உருவாக்கி, மிகக் கடினமான விளைவுகளைத் தந்து விடுகின்றன.
மிகக் கடினமான விளைவுகளைத் தந்து விடுகிற பாப வினைகளைக் கடக்கும் போது, எதிர்கொள்ள வேண்டிய எச்சரிக்கையைத்தான், இந்தக் குறளில் மிக சூட்சுமமாகக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
அந்தக் கடினமான சூழலில், நிச்சயமாக தன்னால் மட்டும் அதை எதிர்கொண்டு விட முடியாது. பாப வினைகளின் கடுமை, அதன் ஒவ்வொரு கட்டங்களிலும் தடங்கல்களையும்... தடைகளையும்... முட்டுக் கட்டைகளையும்... உருவாக்கிக் கொண்டே இருக்கும். அப்போது அதை எதிர் கொள்ள அந்த வினைக்கு ஏற்ப, துணைகளைக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தத் துணைகளைத்தான் வரிசைப்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.
இந்த அறிவுருத்தல், பாப வினைகளைக் கடந்து செல்வோருக்கான 'வினைப் பரிகாரமாக' அமைந்து விடுகிறது.
ஸாய்ராம்.
.jpg)



.jpg)