'கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக' குறள் : 391.
இதற்குப் பொருளாக... 'நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்றக் கல்விக்கு தக்கவாறு நெறியுடன் வாழ வேண்டும்...' என்பதுதான் பொதுவான விளக்கமாக அறிந்து கொள்ளப் படுகிறது.
நல்ல நூல்களைக் கற்பதும்... அதன் கருத்துக்களை உள் வாங்கி... அதன் வழியே நடப்பதும்... எல்லோருக்கும் தோன்றும் கருத்தியல்தான்.
ஆனால், தெய்வப் புலவரான வள்ளுவர், இந்த கருத்தை கையாளும் போது, 'அணுவைத் துளைத்து... அதில் ஏழ் கடலைப் புகுத்தி... குறுகத் தரித்தக் குறள்' என்ற 'ஔவையாரின்' கூற்றுக்கு ஏற்ப, வள்ளுவப் பெருந்தகையின் எல்லையற்ற ஞானத்தை, மனம் ஆராயத் தூண்டுகிறது.
'கசடற...' என்ற வார்த்தையில்தான் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.
'நல்ல நூல்கள்' என்பது மனிதர்க்கு மனிதர் வேறுபட்டதாக ஆகிவிடுகிறது. ஞானத்தை வழங்கும் நூல்களும், ஞானம் பெற முயற்சிப்பவர்களும்... உலக அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்களும், உலக அறிவைத் தேடுபவர்களும்... ... நிறைந்து இருக்கும் இந்த உலகில், 'குற்றமற கற்றலும்', 'கற்றபடி நிற்றலும்'... 'எது சரியான நெறி ?' என்ற விவாதத்திற்கு உள்ளாகிவிடும் அபாயமும் இருக்கிறது.
வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டிருக்கும், 'கசடற' என்பது, நூல்களைப் பற்றியதல்ல. அது மனதின் தன்மையைப் பற்றியது.
எந்த நூல்கள் மனதில் இருக்கும் 'அறியாமை' என்ற மாசை நீக்குகிறதோ, அதைத்தான் வள்ளுவர் நல்ல நூல்களாகக் கொள்கிறார். மனதில் இருக்கும் அறியாமை நீங்கி, மனம் ஞானம் என்ற ஒளியில் திளைக்கும் போது, அது தூய்மையான மனமாக மாறி விடுகிறது.
இவ்வாறு 'மனதின் கண் இருக்கும் மாசை...' நீக்கும் படியான நூல்களைக் கற்பதும்... கற்றபின், தூய்மையான மனதுடைய நிலையை அடைந்து... அந்த நூல்கள் உணர்த்திய ஞானமான வாழ்வை, மேற்கொள்வதுதான்... கற்பதற்கான வழி முறை, என்பதைத்தான், இந்தக் குறளில் மிக சூட்சுமமாகக் குறிப்பிட்டிருக்கிறார், தெய்வப் புலவர்.
ஞானப் பெருந்தகையான 'வள்ளுவப் பெருமானின்' ஈரடி வெண்பாக்கள், ஏழ் கடல்களுக்கு ஒப்பான சொற்களால் நிரப்பப் பட்டிருக்கிறது. அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் பாக்கியவான்கள்தான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment