Tuesday, August 30, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 231. 'கேது பகவானும்' அவருக்கு அதி தேவதையாக இருந்து அருளும் 'விநாயகப் பெருமானும்'


நவக்கிரகங்களிலேயே, 'மோக்ஷக் காரகர்' என்ற உயரிய பதவியை வகிப்பவர் 'கேது பகவான்தான்'. ஆதலால்தான், 'சமஷ்டி' என்ற ஒடுக்கத்தில் இருக்கும் 'ஓங்காரத்தையும்'... 'வியஷ்டி' என்ற விரிவடைந்திருக்கும் 'அ உ ம' என்ற பிரணவ சக்தியையும்... ஒன்றிணைக்கிற ரூபமான 'விநாயப் பெருமானார்', இவருக்கு 'அதி தேவதையாக' அமைந்திருக்கிறார்.

நமக்குள் அந்தப் 'பேருணர்வான சக்தி' அடங்கியிருக்கும் போது... அது, 'ஓங்காரமான' சமஷ்டியாகிறது. எப்போது விரிவடைகிறதோ... அப்போது அது, 'அ உ ம' என்ற பிரணவ பேராற்றலாகி வியஷ்டியாகிறது. இந்த இரண்டு சக்திகளும் இணைந்த வடிவமாகத்தான் 'ஓங்கார ருபத்தில்' விநாயகர் காட்சியளிக்கிறார்.

நமக்குள் இருந்து அருளும் 'பேருணர்வுதான்', நமது 'கர்ம வினைகளால்', ஜீவனாகி, பின்னமடைந்து, இந்த உலக வாழ்வில் பிறப்பு... இறப்பு... என்ற சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அந்த 'உணர்வை' மீட்டெடுத்து, உள் நோக்கிச் செலுத்தி, பேருணர்வில் கொண்டு சேர்க்கும் கடமையைத்தான், 'கேது பகவான்' செய்து கொண்டிருக்கிறார்.

ஆதலால்தான் அவர், 'காலத்தை' குறிக்கும் 'கால புருஷ இராசியில்', முதல் 'சர இராசியாதிபதியாகி'... 'வியஷ்டியாகிய' விரிவடைந்த 'ஆற்றலை' வெளிப்படுத்தும்... 'செவ்வாய் பகவான்' உறைந்திருக்கும் 'மேஷ இராசியில்'... முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (அஸ்வினி) தலைமை வகிக்கிறார். 

'பேராற்றலின் ஓங்கார வடிவமாக இருக்கும், 'இரண்டாவது சர இராசியாதிபதியாகி'... 'சமஷ்டியாகிய' ஓங்காரமாக இருக்கும் ஆற்றலைத் தனக்குள் வைத்திருக்கும்... 'சூரிய பகவான்' உறைந்திருக்கும் 'சிம்ம இராசியில்' முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (மகம்) தலைமை வகிக்கிறார்.

இந்த விரிவடைந்த ஆற்றலையும் (வியஷ்டி)... ஓங்காரமாக ஒடுங்கிய ஆற்றலையும் (சமஷ்டி)... ஒன்றிணைந்து உணரும், 'குரு பகவான்' உறைந்திருக்கும், 'மூன்றாவது சர இராசியான'...  'தனுர் இராசியில்' முதல் நட்சத்திரக் கூட்டத்திற்கு (மூலம்) தலைமை வகிக்கிறார்.

ஒரு தேர், அதன் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர வேண்டுமெனில், அதற்குத் தகுந்த இடங்களில் முட்டுக்கட்டைகள் போட வேண்டியிருக்கிறது, அது போல, இந்த ஜீவன், அதன் புறப்பட்ட மூலத்திற்கு வந்து சேருவதற்கான முட்டுக்கட்டைகளை போடுபவர்தான், 'கேது பகவான்'. 

ஆதலால்தான் 'மோக்ஷத்திற்கு' வழி காட்டும் 'மோக்ஷக் காரகர் ' என்று 'கேது பகவானையும்',,, அவருக்கு 'அதி தேவதையாக' தடைகளைத் தகர்த்துவிடும் 'விக்னேஷ்வரராகிய' விநாய பகவானையும்... வகுத்தளித்திருக்கிறார்கள் 'ரிஷி புங்கவர்கள்'.

'கேதுத் தேவே... கீர்த்தித் திருவே,

பாதம் போற்றி... பாபம் தீர்ப்பாய்,

வாதம், வம்பு, வழக்குகள் இன்றி...

கேதுத் தேவே... கேண்மையாய் இரட்சி !'


'அல்லல்போம்... வல்வினை போம்...

அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்...

போகாத துயரம் போம்... நல்ல

குணமதிக மாமருணை கோபுரத்தின் மேலிருக்கும்

செல்வக் கணபதியைக் கை தொழுதக்கால் !'


ஸாய்ராம்.

 

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...