வரம் பெற்ற அசுரர்களின் வாழ்வு எவ்வாறாக முடிந்தது... என்று அறிந்திருந்தும், ஏனைய அசுரர்கள் சென்ற பாதையிலேயே, இவனும் சென்று... வானுலகத்தில் மட்டுமல்ல... வையகத்தில் வாழ்வோருக்கும் எண்ணற்ற துன்பங்களை விளைவித்தான். தன்னை வணங்காதவர் எவரானாலும்... அவரைச் சிறைப்பிடித்து, காலையிலும், மாலையிலும் தனக்கு எதிரே, ஆயிரம் தோப்புக் கரணங்களைப் போடவைத்தான்.
கஜமுகாசுரனால் துன்பப்பட்ட அமரர்கள், 'உமாதேவித் தாயார் சமேத சிவபெருமானாரிடம்' சென்று முறையிட்டனர். கஜமுகாசுரனை வதம் செய்வதற்குத் தக்கக் காலம் கனிந்திருப்பதை உணர்ந்த பார்வதித் தாயார் சமேத சிவபெருமானார், 'சமஷ்டியாகவும்' (ஓம்)... 'வியஷ்டியாகவும்' (அவும) இருக்கும் 'பிரணவத்தைத் தொகுத்து', ஒரு வடிவமாக்கினார்கள். அதுவே 'விநாயகப் பெருமானாரின்' அவதாரமானது (விநாயகர் சதுர்த்தி)..
விநாயப் பெருமானாரை முன்னிட்டுச் சென்ற சேனைகள் கஜமுகாசுரனின் சேனைகளை எல்லாம் அழித்தது. விநாயகரின் ஆயுதங்களால் அழிந்தாலும்... மீண்டும், மீண்டும் உயிர்த்தெழும் அசுரனை, இறுதியாகத் தனது 'கொம்பில்' ஒன்றை ஒடித்து ஏவ, பயந்து ஓடிய கஜமுகாசுரன், ஒரு 'எலி' உருவை எடுத்து வந்து, விநாயகரிடம் சரணடைந்தான். சரணடைந்தவன் மீது கருணை பொழிந்து, அவனைத் தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்.
தங்களது இடர் தீர்த்த பெருமானை வணங்க வந்த தேவர்கள், 'பெருமானே ! எங்கள் இடரகளைக்க் களைந்தவரே! இதுவரை நாங்கள் கஜாமுகாசுரனுக்கு அடிமைப்பட்டு, ஆயிரம் தோப்புக்கரணங்கள் இட்டு வந்தோம், எங்கள் துயரைத் தீர்த்து அருளிய உங்களுக்கு, நாங்கள் இனிமேல் அந்தத் தோப்புக்கரணங்களை இட்டு வணங்கிடும் வரத்தை அருளிட வேண்டும்'... எனக் கேட்க, கணநாதர், 'உங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்... ஆனால் மூன்றே மூன்று தோப்புக்கரணங்களே போதும் !' என்று அருளினார்.
'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலுமே எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !'
ஸாய்ராம்.
.jpg)
No comments:
Post a Comment