Sunday, January 16, 2022

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 210. 'காலத்திற்குள் கட்டுண்டு கிடக்கும் மானிட வாழ்வு'


 மனிதன் மட்டுமல்ல... இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், இரண்டு நிலைகளில் கட்டுண்டு இருக்கின்றன. ஒன்று, அவை அவைகளின் 'சூழ்நிலைகள்'... இரண்டாவது, அவைகள் வாழும் காலத்தின் 'சுற்றுப் புறம்'.

மனிதர்களின் சூழ்நிலையை, அவரவர்களின் ஜாதகங்கள் சுட்டிக் காட்டி விடுகின்றன. அதுபோல காலத்தின் சுழ்நிலையை, அது கடந்து போகும் சுற்றுப் புறம்தான் சுட்டிக் காட்டுகிறது.

ஒரு ஜாதகம், அந்த ஜீவன் சுமந்து கொண்டு வந்திருக்கும் 'கர்ம வினைகளை' சுட்டிக் காட்டுகிறது. அந்த கர்ம வினைகள் அளிக்கும் விளைவுகளைத்தான், அந்த ஜீவன் தனது வாழ்வில், இன்பமாகவோ... துன்பமாகவோ... அனுபவிக்கிறது. அதர்கு ஏற்றாற் போலவே, அந்த ஜீவனின் சுற்றுப் புறமும் அமைந்து விடும். அதுதான் இயல்பான நடைமுறை.

உதாரணமாக, ஒருவர், கட்டிடத் துறையில் கல்வியும்... அதனடிப்படையில் கட்டுமானத்துறையில் அனுபவுமும் பெறுமாறு... அவரது 'சூழ்நிலை' அமைகிறது என்று கொள்வோம். அதற்கேற்றாற் போலவே, அவரது 'சுற்றுப் புறமும்' அமைந்து விடும். அதாவது, அவர் தொழில் செய்யும் பகுதியில் விரிவாக்கங்களும், அதற்குண்டான தொழில் நுட்பத் தேவைகளும் அவசியமாக அமைந்து விடும். இதைத்தான்... 'நேரமும்... காலமும்....' கூடி வந்திருக்கும் அமைப்பு... என்றும், 'சூழ்நிலையும்... சுற்றுப் புறமும்...' இணைந்திருக்கும் அமைப்பும் என்று  கூறுகிறோம். 

ஆனால், வெகு சில நேரங்களில் காலம் தனது 'சுற்றுப் புறத்தை' இயல்பான நிலையிலிருந்து மாற்றிக் கொள்கிறது. தற்போதைய நிலையைப் (கிருமித் தொற்றுக் காலமாமான 2020 - 2021 - 2022 ) போல... இது போன்ற சூழலில்,ஒருவரின் 'சூழ்நிலை' எவ்வளவு சாதகமாக இருந்தாலும்... அதற்கேற்ற 'சுற்றுப் புறம்' அமையததால்... சாதகமான பலன்கள் ஏற்பட்டு விடுவதில்லை.

உதாரணமாக, அதே கட்டுமானத் துறையில் அனுபவமேற்பட்ட ஒருவருக்கு, தற்போது, அவரது 'சூழ்நிலை' சரியாக அமைந்திருந்தாலும், தற்போதைய நெருக்கடியான நேரத்தில்... கட்டுமானத் துறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வுகளால்... அவரின்  'சூழ்நிலைக்கு' அடிப்படையான கர்ம வினைகளின் 'புண்ணிய பலன்களை' அவரால் முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை உருவாகி விடுகிறது.

இது போன்ற நேரங்களில்தான் ... ஜோதிடர்கள் கணிக்கும், ஜாதகப் பலன்கள், மாறி விடுவதைப் போலவும்... தவறி விடுவதைப் போலவும்... அமைந்து விடுகின்றன. இதற்குக் காரணம், ஜாதகமோ... அதைக் கணித்த ஜோதிடரோ அல்ல... எதிர்பாராத கால மாறுபாடான 'சுற்றுப் புற' மாற்றம்தான்... என்பதை, ஜோதிடர்களும், ஜாதகர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸாய்ராம்.



No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...