'ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலஸம்பதாம்
பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்திரிகா'
( பிறவியும், பிறந்த குலமும், பிறவி முழுவதும் அனுபவிக்கும் அனுபவங்களும், அந்தந்த ஜீவர்கள் சுமந்து கொண்டு வந்திருக்கும் பூர்வ புண்ணியங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன... இதை அறிந்து கொள்வதற்காகவே, இந்த 'ஜனன கால பத்திரிக்கை' எழுதப்படுகிறது )
இதில், பிறவியும்... அதன் குலமும்... முதலில் நமது அறிவிற்கும், பின் நமது அனுபவத்திற்கும் உட்பட்டதாகிறது.
ஆனால், 'பூர்வ புண்ணியம்', நமது அனுபவத்திற்கு மட்டுமே உட்படுகிறதே தவிர, அந்த அனுபவத்திற்கு முன் அறியக் கூடிய அறிவிற்கு உட்படுவதில்லை.
ஆதலால்தான், நமது வாழ்வில் நிகழும் 'காரியங்கள்' மட்டுமே நமக்கு அனுபவமாகின்றன. அந்த ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் 'காரணங்களை' நாம் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம்.
இந்த 'சூட்சுமத்தைத்தான்', ஜாதக சித்திரத்தில் அமைந்திருக்கிற '5 ஆம் பாவம்' என்ற 'பூர்வ புண்ணிய ஸ்தானம்' நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
'பதவி' என்றதுமே, நமக்கு '10 ஆம் பாவம்தான்' கண்முன் வந்து நிற்கும். ஆனால், இந்த '10 ஆம் பாவத்திற்கும்' (கர்ம ஸ்தானம்)... '5 ஆம் பாவத்திற்கும்' (பூர்வ புண்ய ஸ்தானம்)... ஜோதிட சித்திரத்தில் நேரடி தொடர்பு இல்லை. மாறாக...
* 5 ஆம் பாவத்திற்கு நேரெதிரில் 11 ஆம் பாவமான 'லாப ஸ்தானமும்...
* 10 ஆம் பாவத்திற்கு நேரெதிரில் 4 ஆம் பாவமான 'சுக ஸ்தானமும்தான்... அமைந்திருக்கிறது..
இந்த சூட்சும அமைவு எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால்...
'நமது 'சுக சௌகரியங்களைப்' (4 ஆம் பாவம்) பற்றியும், அதனால் விளையும் 'லாபங்களை' (11 ஆம் பாவம்) பற்றியும் கவலைப்படாமல், 'காரியங்கள்' என்ற 'கடமைகளை' (10 ஆம் பாவம்) பற்றற்ற மனதோடு செய்யும் போது... 'பூர்வ புண்ணியம்' (5 ஆம் பாவம்) உள்ளடக்கியிருக்கிற 'காரணங்கள்' என்ற 'வினை மூட்டையைப்' பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை... என்ற உண்மையைத்தான்.
இப்போது புரியும்... 'பதவி' என்பது ;
* தன்னைப் பெற்றெடுத்தவரகளுக்கு, புத்திரன் அல்லது புத்திரியாக...
* உடன் பிறந்தோருக்கு சகோதர, சகோதரியாக...
* வாழ்க்கைத் துணைக்குத், துணைவராக அல்லது துணைவியாக...
* குழந்தைகளுக்கு பெற்றோராக...
இவற்றுடன் :இணைந்ததுதான்...'ஜீவனம்' என்ற பொருளீட்டலுக்கான முயற்சியில் கடந்து போகும், 'பதவிகளும்'..
ஸாய்ராம்.



