கிரகங்களின் சேர்க்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை 'யோகங்கள் என்றும்... தோஷங்கள் என்றும்...' வகைப்படுத்துகிறது, ஜோதிடக் கலை.
யோகங்கள் என்னும் போது மலர்ந்து விடும் மனங்கள், தோஷங்கள் எனும் போது குவிந்து விடுகின்றன.
இந்த இரண்டு நிலைகளும், நமது 'கர்ம வினைகளின் விளைவுகளைத்தான்' சுட்டிக் காட்டுகின்றன.
எந்தெந்த பாவங்களில் யோகங்கள் ஏற்படுகிறதோ... அந்தந்த பாவங்களின் வழியாக, அந்த ஜீவன் தனது 'கர்ம வினைகளின்' புண்ணிய பலன்களை அனுபவிக்கிறது. அது போலவே, அந்தந்த பாவங்களின் வழியாக, தோஷங்கள் என்ற தனது கர்ம வினைகளின் பாபங்களையும் அனுபவிக்கிறது.
இந்த உலக வாழ்விலேயே திளைத்து... இனபம் என்ற ஒன்றை மட்டுமே இடைவிடாது... அனுபவிக்கத் துடிக்கிறது மனித மனம். அதற்காக யோகங்களைப் பெருக்கிக் கொள்வதற்கும், தோஷங்களிலிருந்து விடுபடுவதற்கும் தொடர்ந்து முயற்சிக்கிறது.
ஆனால், இந்த இரண்டு முயற்சிகளுமே... மீண்டும், மீண்டும் நம்மை பிறவிகளின் சுழற்சிக்கு உள்ளேயே தள்ளி விடுவதை... மட்டும் மறந்து விடுகிறது.
எப்போது, நமது துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோமோ... அப்போதே, நமது இன்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சமமாக எதிர்கொள்ளும் பக்குவத்தையே 'ஞானம்' என்ற பக்குவப்படல் நமக்கு உணர்த்துகிறது.
உதாரணமாக...
'தர்ம - கர்மாதிபதி யோகம்', 10 ஆம் பாவத்தில் ஏற்படும் போது, அவர் தொழில் மற்றும் வியாபாரங்களினால், பெரும் பொருள் சேர்க்கும் வல்லமையைப் பெறுகிறார். தனது வாழ் நாள் முழுவதுமாக அந்த விருத்தியிலேயே செயல் படுவதால், பெயர்... புகழ்...என்ற வட்டத்திற்குள் சிக்கி, போட்டிகள் நிறைந்த உலகத்தில் தன்னை நிலை நிருத்திக்கொள்ள வாழ்நாட்கள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது.
'கேந்திராதிபத்திய தோஷம்', 10 ஆம் பாவத்தில் ஏற்படும் போது, அவரால் நிலையான தொழிலையோ, வியாபாரத்தையோ தொடரும் வல்லமையை இழந்து விடுகிறார். தனது வாழ்நாள் முழுவதுமாக, தனது பெயர்... புகழை... எல்லாம் இழந்துவிடாமல் இருப்பதற்காகவே ஓய்வில்லாமல் போராட வேண்டியிருக்கிறது
இந்த இரண்டு நிலைகளுமே நம்மை, நிம்மதியை இழக்க வைப்பதாக இருப்பதை, உணர்ந்து கொள்ள முடிகிறது.
எப்போது, 'தர்ம கர்மாதி யோகம்' பெற்றவரோ அல்லது 'கேந்திராதிபதி தோஷம்' பெற்றவரோ...தங்களது கடமைகளையும்... தேவைகளையும்... காலங்களையும்... தங்களது கவனத்தில் கொண்டு செயல்களை முன்னிருத்த ஆரம்பிக்கிறார்களோ... அப்போதே, தங்களது 'கர்ம வினைகளின் கட்டுகளிலிருந்து' தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.
இந்த உபாயத்தைதான் ஜோதிடக் கலை, கிரகங்களின் சேர்க்கைகளைக் கொண்டு, யோகங்களாகவும்... தோஷங்களாகவும்... நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment