Friday, August 27, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 192. 'ராகு - கேது பகவான்கள்' (நாகராஜன்) வரமா ? சாபமா ?


 'ராகு - கேது பகவான்களின்' அமைவு, ஜாதகத்தில் எதைக் குறிப்பிடுகிறது ?

இதை, தோஷம் என்றும்... சாபம் என்றும்... இன்றைய ஜோதிடம் பிரதாபித்து வருகிறது. ஆனால், இது, உண்மையில், 'வாழ்வின் உண்மையான சாரம் எது... ?' என்பதை, உணர்த்துவதற்கான ஒரு வரம்தான்... என்பதை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் புரிய வரும்.

'சுவர்பானு'(நாகராஜன்)  என்ற அசுரன், மோகினி வடிவத்தில் இருந்த 'பகவான் நாராயணன்' பகிர்ந்தளித்த அமிர்தத்தை அருந்தியதற்குப் பின், 'சூரிய - சந்திர பகவான்களின்' சுட்டிக் காட்டுதலால், பகவானால் தண்டணை அளிக்கப்பட்டு, தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்படுகிறான். அமிர்தத்தை உண்டதனால், 'சிவபெருமானாரின்' அனுக்கிரகத்தினால், 'ராகு பகவானாகவும்'... 'கேது பகவானாகவும்'... நவக்கிரகங்களில், நவக்கிரக நாயகர்ளாக நியமிக்கப் படுகிறார்கள்.

'கிருத, திரேதா, துவாபர யுகங்களில்', நான்கு பங்கு தர்மத்துடன் வாழ்ந்த மாந்தர்களின் வாழ்வு, ஒவ்வொரு யுகமாக மூன்று, இரண்டு என்று குறைந்து, தற்போதைய 'கலியுகத்தில்', தர்மம் ஒரு பங்காகவும்...அதர்மம் மூன்று பங்காகவும்...மாறியிருக்கிறது. மனிதர்களின் வாழ்வை அதர்மத்திலிருந்து மீட்டு, மீண்டும் தர்மத்தின் வாழ்வு வழியே பயணிக்க வைப்பதற்கான பணிகளைத்தான், 'ராகு - கேது பகவான்கள்' தங்களது 'காரகத்துவங்களாக' கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப, அவர்களின் 'பாபங்களை' ராகு பகவானும்... அவற்ற்லிருந்து மீளும் உபாயத்தைச் சுட்டிக் காட்டும் 'புண்ணியங்களை' கேது பகவானும், ஜாதகத்தில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உதாரணமாக, 'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு, 2 ஆம் பாவத்தில் 'ராகு பகவானும்'... 8 ஆம் பாவத்தில் 'கேது பகவானும்' அமைகிறார்கள்... என்று வைத்துக் கொள்வோம் :

2 ஆம் பாவத்தில் அமர்ந்த ராகு பகவான் : 'தனம் - குடும்பம் - வாக்கு' என்ற பாவத்தில் அமைந்து, 'இல்வாழ்வு', குடும்பம் என்ற உலக வாழ்வுச் சூழலில், ஜாதகர், மீள்வதற்கு முடியாதவாறு சிக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

8 ஆம் பாவத்தில் அமர்ந்த கேது பகவான் : 'ஆயுள் ' என்ற 'பரம இரகசியமான' பாவத்தில் அமைந்து, ஒரு ஜீவனின் வாழ்வு எவ்வாறானது ? என்ற வாழ்வின் உண்மையை உணரவைத்து, ஞானத்தை அளித்து, தனது 'கர்ம வினைகளைக் களைந்து' போக வைப்பதற்கான, வல்லமையைத் தந்தருள்கிறார்.

இப்போது, புரியுமே ! 'ராகு - கேது பகவான்களின் அமைவு 'சாபமல்ல... வரம்தான்...' என்ற உண்மை 1!

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...