Saturday, August 14, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 191. 'லகனமும் - இராசியும்'... 'உணர்வும்,,, உணர்ச்சிகளும்'


'லக்னம்'... 'ஆத்மா' என்ற 'உள்ளுணர்வை' பிரதிபலிக்கிறது. 'இராசி'... 'உடல்' என்ற ஜீவனின், மனம் சார்ந்த 'உணர்ச்சிகள்' நிறைந்த. உலக வாழ்வை' பிரதிபலிக்கிறது.

ஆதலால்தான், 'லக்னம்' என்ற ஆத்மாவை உள்ளடக்கிய ஜீவன், 'இராசி' அமைந்திருக்கிற 'நட்சத்திரத்தின் சாரம்' பெற்ற 'கிரகத்தின் தசாவின்' வழியே, தனது வாழ்வை அமைத்துக் கொள்கிறது.

'சூரிய பகவானை' ஆதாரமாகக் கொண்டுதான் லக்னம் அமைகிறது. ஆத்மாவை வருணிக்கும் போது அதை, 'ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம்' கொண்டதாக வருணிக்கிறது வேதாந்தம். அந்த ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட ஆத்மா, ஒரு ஜீவனுக்குள் பிரவேசிக்கும் போது, 'சத்து - சித்து - பரமானந்தம்' என்ற 'ஏக உணர்வாகவும்', அதுவே, ஜீவனுக்கு வெளியே பிரதிபிம்பிக்கும் போது, 'சூரிய பகவானாகவும்' அமைகிறது.

'ஏக உணர்வாக' இருக்கும் ஆத்மாவிலிருந்துதான், 'உணர்ச்சிகளின் கலவையான' ஜீவனின் வாழ்வு உருவாகிறது. 'சத்து' என்ற சத்தியத்தையும்... 'பரமானந்தம்' என்ற என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தையும்... உள்ளடக்கியிருந்தாலும்... இந்த ஜீவனின் பிறவிக்கு ஆதாரமான 'கர்மா' என்ற 'பூர்வ புண்ணிய - பாப வினைகளை', 'சித்தம்' என்ற மனதில் இருந்து, அலை அலையாக எண்ணங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த எண்ணங்கள் விளைவிக்கும் 'இன்ப- துன்பங்களைத்தான்', 'வளர் பிறை - தேய் பிறை' என்ற இருவேறு நிலைகளாக 'சந்திர பகவான்' வெளிப்படுத்துகிறார்.

ஜீவன், அதன் மூலமான ஆத்மாவில் சங்கமிப்பதைத்தான், சமாதி... முக்தி... என்கிறோம். அது, 'உணர்ச்சிகளடங்கிய' ஜீவன், 'ஏக உணர்வாக' இருக்கும் ஆத்மாவில் சங்கமிப்பதாகும்.

இதைத்தான், ஜோதிடக் கலை, லக்னமாகவும், இராசியாகவும்... 'சூரிய பகவானையும்', 'சந்திர பகவானையும்' ஆதாரங்களாகக் கொண்டு விளக்குகிறது.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...