Saturday, July 10, 2021

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி - 189. 'கர்ம வினைகளால் கட்டுண்டிருக்கும் விதி'


காலம் எவ்வாறு இயங்குகிறது ?

இந்தக் கேள்விக்கு, காலத்தைக் காட்டும் கருவியான 'கடிகாரம்' எவ்வாறு இயங்குகிறது ? என்ற கேள்வியையே பதிலாக்கலாம்.

கடிகாரத்தின் உள் பகுதிகள் முழுவதும், எண்ணற்ற 'பற்சக்கரங்களால்' நிறைந்திருக்கும். அந்தச் சக்கரக்கங்கள் ஒன்றோடு ஒன்று மிக நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கும். ஒரு சக்கரத்தின் சுழற்சி மற்றொரு சக்கரத்தை இயக்குமாறும்... அதன் சுழற்சி இன்னொரு சக்கரத்தை இயக்குமாறும்... அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த மொத்த சக்கரகங்களின் இடைவிடா சுழற்சி, கடிகாரத்தின் விநாடியைக் காட்டும் முள்ளையும்... நிமிடத்தைக் காட்டும் முள்ளையும்... மணியைக் காட்டும் முள்ளையும், முறையாக இயக்கும். அந்த முறையான இயக்கத்தின் விளைவைத்தான்... மணி, நிமிடங்கள், வினாடிகள் என 'காலத்தைக்' காட்டுகிற கடிகாரத்தின் வழியே நாம் பார்க்கிறோம்.

இந்த நுட்பமான சக்கர இணைப்புகளில், ஏதாவது ஒன்றிற்குத் தடையேற்பட்டால், அனைத்து சக்கரங்களின் சுழற்சிகளும் பாதிப்படையும். அதன் விளைவால்... 'காலத்தைச்' சுட்டிக் காட்ட முடியாத கருவியாக, 'கடிகாரம்' மாறிவிடும்.

அது போலத்தான்... காலமும். காலம் இது போன்ற எண்ணற்ற உயிரினங்கள் என்ற 'ஜீவர்களால்' இணைக்கப்பட்டிருக்கிறது. காலம் இயங்க வேண்டுமெனில், அந்த ஒவ்வொரு ஜீவனின்' கர்ம வினைகளும்', அதனோடு தொடர்புடைய மற்றொரு ஜீவனின் 'கர்ம வினைகளோடு' மிக நுட்பமாக இணைக்கப் பட வேண்டும். 

இந்த இணைவுகளின் விளைவால் 'ஒரு நிர்ணயிக்கப்பட்ட' நிகழ்வை' காலம் நடத்திக் காட்டுகிறது. இந்த நிகழ்வைத்தான் 'விதியின் விளைவாக',  இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற, அனைத்து ஜீவர்களும் அனுபவிக்கின்றன. இதில் ஏதொரு ஜீவனின் கர்ம வினைகளின் இயக்கத்தில்  தடையேற்பட்டால்... மொத்த நிக்ழ்வின் பூரணத்துவமே மாறிவிடும். இதை படைப்பவன் என்றுமே அனுமதிப்பதில்லை.

நுட்பமான வல்லுனரான படைப்பவரால், மாற்றியமைக்கக் கூடிய 'கர்ம வினைகளால்' மட்டுமே, 'விதி' என்ற ஊழ்வினைப் பயனிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்... கடிகாரத்தை மாற்றியமைக்கக் கூடிய வல்லுனர் போல...!

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...