Monday, December 28, 2020

'ஆருத்ரா' ... ஒரு ஆழ்ந்த பார்வை

            

ஜோதிடக் கலை வகைப்படுத்தும் 27 நட்சத்திரங்களில், இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டுமே... 'திரு' என்ற அடைமொழி வழங்கப்பட்டிருக்கிறது.

ஒன்று... 'திருவாதிரை', இன்னொன்று... 'திருவோணம்'

திருவாதிரை நட்சத்திரம் 'சிவ பெருமாநாருக்கு' உகந்ததாகவும்... திருவோண நட்சத்திரம் 'விஷ்ணு பகவானுக்கு' உகந்ததாகவும்... வகைப்படுத்தப் பட்டிருக்கிறது.

பரம் பொருளாக... சுய ஒளிப் பிரகாசமாக... அங்கெங்கெனாதபடி, எங்கும் வியாபித்திருக்கும் பரமானந்த சொரூபமாக... இருக்கும் அருள் சக்தி, ஒரு கட்டுக்குள் இருக்கும் போது 'சிவமாகிறது' அதனால்தான், ஒரு உருவமற்ற நிலையை வெளிப்படுத்தும் வண்ணமாக. 'லிங்க வடிவத்தைத்' தாங்கியிருக்கிறது.

இந்த அருள் சக்தி ஒரு ஜீவனுக்குள் வடிவெடுக்கும் போது, 'சத்து - சித்து - ஆனந்தம்' என்ற 'ஆத்ம சொரூபமாக' மாறுகிறது. இந்த அசைவைத்தான் 'ஆனந்த நடனம் புரியும்' ஒரு அருள் வடிவமாக... ஆருத்ரா என்ற 'திருவாதிரை நட்சத்திரத்தின்' அன்று உணர்த்தப் படுகிறது.

அதைத்தான்... 'கர்ம வினைகளை' சுமந்து கொண்டு பிறப்பெடுக்கும் ஜீவன், அதன் கர்ம வினைகளை 'எண்ணங்களாக வெளிப்படுத்தும்', 'மனதை' குறிக்கும் 'சந்திர பகவான்'... கர்ம வினைகளைக் குறிக்கும் 'ராகு பகவானின்' பாதசாரத்தில் உலவும்... 'திருவாதிரை நட்சத்திரம்' சுட்டிக் காட்டுகிறது. 

அந்த அருள் பெரும் சக்தி... இந்த பிரபஞ்சமாக விரியும் போது... 'விஸ்வம்' என்ற 'வியாபகமாக'... விரிந்து விடுகிறது. அந்த விரிதலை விவரிப்பதே... மகாபலியின் சரித்திரத்தில், மண்ணையும்... விண்ணையும்...கடந்து, பாதாளம் வரை பதியும் பாதங்களின் மகிமையை விளக்கும் 'விஷ்ணு பகவானின்' அவதாரமான.. 'வாமனரின்' வடிவம் வெளிப்படுத்துகிறது. இதைத்தான்... ஆத்மாவை மூலமாகக் கொண்ட மனம் என்னும் சக்தியின் விரிவாக... 'திருவோண நட்சத்திரம்' உணர்த்துகிறது.

அதைத்தான், கர்ம வினைகளை' சுமந்து கொண்டிருக்கும் ஜீவன், அதன் வினைகளை எண்ணங்களாக வெளிப்படுத்தும் 'மனம்' என்னும் மூலத்தைக் குறிக்கும் 'சந்திர பகவான்'... 'மனோகாரகனான'சந்திர பகவானின் சாரத்தில் உலவும்... 'திருவோண நட்சத்திரம்' சுட்டிக் காட்டுகிறது.

'கர்ம வினைகளின்' வழியே பயணித்துக் களைத்து போகும் ஜீவன்... அதன் தொடர் பிறவிகள் என்ற பிறவிப் பிணியிலிருந்து நீங்குவதற்கு... அந்த ஜீவனுக்கு மூலமாக இருக்கும் 'ஆத்ம சொரூபத்தின்' அருள் பெரும் கருணையில் கலந்து போவதொன்றே வழி !

அதனால்தான், திருவாதிரை நட்சத்திரத்தன்று, 'ஆனந்த நடனம்' புரியும் 'நடராஜரையும், திருவோண நட்சத்திரத்தன்று, 'அரி துயில் புரியும்' அரங்கநாதரையும், தரிசித்து மகிழ்கிறோம்.

ஸாய்ராம்.


2 comments:

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...